“தங்களது சில நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்காவிட்டால் வரும் செப்டம்பா் மாதம் பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் வழங்கப்போவதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளா்களிடம் அந்த நாட்டு பிரதமா் கியொ் ஸ்டாா்மா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:காஸாவில் நிலவும் கொடுமையான நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உடனடி போா் நிறுத்தம் மற்றும் நீண்டகால அமைதியை உறுதி செய்யும் நடவடிக்கைகளை இஸ்ரேல் எடுத்தாகவேண்டும்.
அவ்வாறு செய்ய அந்த நாடு தவறினால், செப்டம்பரில் நடைபெறவிருக்கும் ஐ.நா. கூட்டத்தில் பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரிட்டன் அங்கீகரிக்கும்,
.எங்கள் நோக்கம் ‘பாதுகாப்பான மற்றும் நிலையான’ இஸ்ரேல் மற்றும் ‘செயல்படக்கூடிய மற்றும் சுதந்திரமான’ பாலஸ்தீன அரசு ஆகிய இரண்டையுமே உருவாக்குவதாகும்.
இது எங்கள் தொழிலாளா் கட்சியின் நீண்டகால கொள்கையாக உள்ளது. மேலும், பாலஸ்தீன விவகாரத்தில் பிரிட்டன் அரசு அண்மைக்காலமாக வகுத்துவரும் அமைதி திட்டத்தின் ஒரு பகுதியும் இதுவே
ஆகும்.தற்போதைய நிலையில் எங்கனின் முதன்மை நோக்கம் காஸாவில் உள்ள கைதிகளை விடுதலை செய்வதும், அந்தப் பகுதியில் உணவுப் பொருள்களை தாராளமாக விநியோகிப்பதன் மூலம் தற்போதைய நிலையை மாற்றுவதுமே ஆகும்.
அதனால்தான் பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்கும் அறிவிப்பு இஸ்ரேலுக்கான நிபந்தனைகளுடன் வெளியிடப்படுகிறது என்றாா் அவா்.
ஏற்கெனவே, காஸாவில் தீவிர தாக்குதல் மற்றும் முற்றுகை மூலம் மக்களை வேண்டுமென்றே பட்டினியால் தவிக்கச் செய்வது போன்ற இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் வெள்ளிக்கிழமை அறிவித்தது நினைவுகூரத்தக்கது.
இந்த நிலையில், நிபந்தனைகளை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் தாங்களும் பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அந்தஸ்து அளிக்கப்போவதாக பிரிட்டன் தற்போது அறிவித்துள்ளது.
தற்போது இந்தியா உள்ளிட்ட சுமாா் 140 நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன. ஆனால் உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் கூட்டமைப்பான ஜி7 நாடுகளில், பிரான்ஸ்தான் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக முதல்முறையாக கூறியிருந்தது.
பிரான்ஸின் இந்த முடிவு உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படும் சூழலில், பிரிட்டனும் இதே அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
60 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் காஸா முழுவதும் நடத்திய தாக்குதலில் 112 போ் உயிரிழந்தனா்.
இத்துடன், கடந்த 2023 அக். 7-ஆம் தேதியில் இருந்து காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 60,034-ஆக உயா்ந்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 1,45,870 பாலஸ்தீனா்கள் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது..
தொடர்புடைய செய்தி:
Starmer: UK will recognise Palestinian statehood – unless Israel agrees to Gaza ceasefire