அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் உலக நாடுகளுக்கு கடந்த வெள்ளிக்கிமை புதிய மாற்றத்துடன் பொழுது விடிந்தது.

அன்று அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் விதித்த இறக்குமதி தீர்வையுடன் அந்நாடுகள் நாளைத் தொடங்கியிருந்தன.

அமெரிக்காவை மீண்டும் சிறப்பானதாக மாற்றும் நோக்கத்துடன் இறக்குமதித் தீர்வைகளை விதிப்பதாக ட்ரம்ப் கூறியிருந்தார்.

இந்தத் தீர்வை அமெரிக்காவுக்கு எந்தளவு நன்மைகளைக் கொண்டு வரும், உலக பொருளாதாரத்தின் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பார்ப்போம்.

இறக்குமதித் தீர்வை என்றால் என்ன?

ஏனைய நாடுகளில் இருந்து பொருட்களைத் தருவிக்கையில், அந்தப் பொருட்களின் மீது விதிக்கும் வரியை இறக்குமதித் தீர்வை என்போம்.

இறக்குமதி செய்யப்படும் பொருளுக்குப் பெறுமதி உண்டு. அந்தப் பெறுமதியின் மீது விதிக்கப்படும் சதவீதத்தின் அடிப்படையில் இறக்குமதி வரி அறவிடப்படும். சதவீதம் கூடலாம். குறையலாம்.

இத்தகைய வரி காரணமாக, பொருளை அனுப்புபவருக்கு கூடுதல் செலவாகிறது. இறக்குமதி செய்யப்படும் பொருளின் விலையும் அதிகரிக்கிறது.

ட்ரம்ப் ஏன் வரி விதிக்கிறார்?

அமெரிக்க மக்கள் கூடுதலாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை வாங்குகிறார்கள் என்பது கரிசனை.

இதன் காரணமாக, அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கு கிராக்கி இல்லாமல் போகிறது. அத்தகைய பொருட்களின் உற்பத்தியும் குறைகிறதென ட்ரம்ப் ஆதங்கப்படுகிறார்.

இன்னொரு கரிசனையும் உண்டு. அமெரிக்க ஏனைய நாடுகளில் இருந்து கூடுதலாக இறக்குமதி செய்கிறது. அந்த நாடுகளுக்கு குறைவாக ஏற்றுமதி செய்கிறது.

இந்த இரண்டிற்கும் மத்தியிலான இடைவெளி (வர்த்தக இடைவெளி) அதிகம்.

பல நாடுகள் அமெரிக்கா வழங்கும் சலுகைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அதிக பொருட்களை அனுப்பி அமெரிக்காவை ஏமாற்றுகின்றன என்ற ஆதங்கமும் ட்ரம்புக்கு உண்டு.

எனவே, அமெரிக்காவின் உற்பத்தியை அதிகரித்து வர்த்தக இடைவெளியைக் குறைக்கும் நோக்கத்துடன் அவர் இறக்குமதித் தீர்வைகளை விதித்திருக்கிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் பல நாடுகளின் உற்பத்திகள் மீது வெவ்வேறு இறக்குமதித் தீர்வைகள் அறிவிக்கப்பட்டன.

இன்றளவில், இந்த இறக்குமதித் தீர்வைகள் மாற்றப்பட்டிருக்கின்றன அல்லது முற்றுமுழுதாக இரத்துச் செய்யப்பட்டும் இருக்கின்றன.

வெறுமனே பொருளாதார நலன்கருதி மாத்திரம் ட்ரம்ப் தீர்வைகளை விதிக்கவில்லை. மாறாக, பேரம் பேசும் அரசியல் ஆயுதங்களாகவும் தீர்வைகளை பயன்படுத்தியுள்ளார்.

இதற்கு ரஷ்யாவை உதாரணம் காட்டலாம். ரஷ்ய – உக்ரேனிய யுத்தத்திற்குள் இறக்குமதித் தீர்வையை ஆயுதமாக பயன்படுத்தினார், ட்ரம்ப்.

போரை நிறுத்த உக்ரேனுடன் 50 நாட்களுக்குள் ரஷ்யா உடன்படிக்கையை ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், ரஷ்யாவுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் கம்பனிகள் மீது பெருமளவு தீர்வையை விதிக்கப் போவதாக எச்சரித்தார்.

ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களையும், எரிபொருளையும் வாங்குவதால் இந்தியாவைத் தண்டிக்கப் போவதாகவும் அவர் அச்சுறுத்தியிருக்கிறார்.

இந்தியாவும், பாகிஸ்தானும் மாத்திரமன்றி, தாய்லாந்தும் கம்போடியாவும் கூட சமீபத்தில் ஆயுத மோதல்களில் ஈடுபட்டிருந்தன. இந்நாடுகள் பேச்சுவார்த்தை மேசைக்கு வராவிட்டால், இவற்றின் மீது கூடுதலான இறக்குமதித் தீர்வைகளை விதிக்கப் போவதாக ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.

இதன் காரணமாக, பேச்சுவார்த்தை சாத்தியமாகி போர் தவிர்க்கப்பட்டதாக அவர் தற்பெருமை பேசிக் கொள்வதும் உண்டு.

இந்தத் தந்திரோபாயத்தை இஸ்ரேல் மீது பிரயோகித்தாரா என்பது வேறு விடயம்.

எந்தெந்த உற்பத்திகள் மீது தீர்வைகள் விதிக்கப்பட்டுள்ளன?

அமெரிக்காவிற்குள் தருவிக்கப்படும் உருக்கு மற்றும் அலுமினியம் மீது 50 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் கார்கள், இறக்குமதி செய்யப்படும் என்ஜின்கள், கார் உதிரிப்பாகங்கள் மீது 25 சதவீத வரி.

மருந்து உற்பத்திகள் இறக்குமதி செய்யப்படும் பட்சத்தில், அவற்றின் மீது 200 சதவீத வரி விதிக்கப்படுமென ட்ரம்ப் எச்சரித்திருந்தாலும், அது எவ்வாறு அமுலாக்கப்படும் என இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இன்று இணையத்தளங்கள் மூலம் பொருட்களை ஓர்டர் செய்து குறைந்த விலைக்கு வாங்குவது மக்களின் பழக்கமாக மாறி விட்டது.

அமெரிக்க மக்கள் ‘டெமு’ போன்ற இணையத்தளங்கள் மூலம் பொருட்களை பெருமளவில் கொள்வனவு செய்கிறார்கள் என்பதால், அத்தகைய இணையத்தளங்களையும் ட்ரம்ப் விட்டு வைக்கவில்லை. அவற்றின் மீதான வரி விலக்களிப்பை ட்ரம்ப் நீக்கியுள்ளார்.

இறக்குமதித் தீர்வைகள் மூலம் எந்தெந்த தனிநாடுகளை ட்ரம்ப் இலக்கு வைக்கிறார்?

ஆரம்பத்தில், சீனா, கனடா, மெக்ஸிக்கோ ஆகிய நாடுகளைத் தண்டிப்பது ட்ரம்பின் நோக்கமாக இருந்தது. அந்நாடுகள் மீது கூடுதலான தீர்வைகளை அறிவித்தார்.

அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் சகல நாடுகள் மீதும் குறைந்தபட்சம் 10 சதவீத வரி விதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆரம்பத்தில் பெரும்பாலான நாடுகள் மீது கூடுதலான இறக்குமதித் தீர்வைகள் அறிவிக்கப்பட்டபோதிலும், அந்நாடுகள் அமெரிக்காவுடன் பேரம் பேசி அல்லது உடன்படிக்கைகளை ஏற்படுத்தி தீர்வைகளை குறைத்துக் கொண்டுள்ளன. இதற்காக, இந்நாடுகள் விட்டுக்கொடுப்புக்களையும் செய்துள்ளன.

உதாரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது ஆரம்பத்தில் 30 சதவீத இறக்குமதி வரி அறிக்கப்பட்டது.

இனிமேல், ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவிடம் இருந்து 750 பில்லியன் டொலர் பெறுமதியான எரிசக்தியைக் கொள்வனவு செய்ய இணக்கம் கண்டதால், இந்த வரி 15 சதவீதமாக குறைக்கப்பட்டது.

அமெரிக்காவில் அதிக முதலீடு செய்வதாக ஜப்பான் உறுதியளித்ததும், அமெரிக்கக் கம்பனிகள் தமது மண்ணில் இயங்குவதற்கான தடைகளை சீனா நீக்கியதும் விட்டுக் கொடுப்புகளுக்கு உதாரணங்கள்.

பல நாடுகள் மீதான தீர்வைகள் கடந்த முதலாம் திகதி அமுலுக்கு வந்தபோதிலும், ஏதோவொரு விதத்தில் சமரசம் செய்து கொண்டு தீர்வைகளைக் குறைப்பது பற்றி பேச்சுவார்த்தை நடந்து கொண்டு தான் இருக்கிறது.

ட்ரம்ப்பின் தீர்வைகளால் அமெரிக்காவுக்கு நன்மை கிடைக்கிறதா?

இறக்குமதித் தீர்வை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதை புள்ளி விபரங்கள் காட்டி நிற்கின்றன.

கடந்த மே மாதம் பொருட்களின் விலைகள் 2.4 சதவீத அதிகரிப்பைக் காட்டின. ஜூன் மாதம் 2.7 சதவீத அதிகரிப்பு பதிவாகியிருக்கிறது.

ஆடை வகைகள், விளையாட்டுப் பொருட்கள், வீட்டு உபகரணங்கள் போன்ற பொருட்கள் விலையேற்றம் கண்டுள்ளன.

தமது உற்பத்திகளுக்கு தேவையான மூலப் பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப்படுவதால், தாமும் உற்பத்திகளின் விலைமட்டங்களை உயர்த்த நேர்ந்துள்ளதாக அடிடாஸ் போன்ற நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சில கம்பனிகள் வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப்படும் மூலப்பொருட்களை குறைத்து உள்ளுரில் தயாரிக்கப்படும் பொருட்களைப் பயன்படுத்தப் போவதாக அறிவித்துள்ளன. உள்ளுரில் மூலப்பொருட்களைப் பெறுவதற்கு அதிக செலவாகுமென்பதால், அவற்றின் விலைகளும் உயரக்கூடும்.

கார்களை உதாரணம் காட்டலாம். கார்களின் உதிரிபாகங்கள் பெரும்பாலும் மெக்ஸிக்கோ, கனடா ஆகிய நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் தருவிக்கப்படுகின்றன.

அவற்றின் மீது கூடுதலான வரி வதிக்கப்படுகையில், ஒரு காரை அமெரிக்காவிற்குள் அசெம்பிள் செய்வதற்குரிய செலவினம் ஆகக்கூடுதலாக அதிகரிக்கும். கார்களின் விலை சடுதியாக உயரும்.

ஆனால், ஒரு விடயத்தை குறிப்பிட்டாக வேண்டும். ட்ரம்ப் விதித்த தீர்வைகள் காரணமாக இறக்குமதியாளர்கள் கூடுதலான வரியை செலுத்தி வருவதால், அரசாங்கத்திற்கு அதிக வருமானம் கிடைத்துள்ளதாக அமெரிக்க நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வாண்டு தீர்வைகள் மூலம் அமெரிக்கா ஈட்டிய வருமானம் 124 பில்லியன் டொலராகும். முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 131 சதவீத வளர்ச்சியென தரவுகளை ஆதாரமாகக் காட்டி நிதியமைச்சு விபரித்துள்ளது.

தமது வரிவிதிப்புக் கொள்கைகளால் அமெரிக்காவிற்கு நன்மையென டொனல்ட் ட்ரம்ப் வலுவாக வாதிட்டாலும், உலக அளவில் பாதிப்புகளே அதிகமென சர்வதேச நாணய நிதியம், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான ஸ்தாபனம் போன்றவை எதிர்வுகூர்கின்றன.

ட்ரம்பின் தீர்வை உலகை எவ்வாறு பாதிக்கப் போகிறது?

இறக்குமதித் தீர்வைகள் மூலம் ஆரம்ப கட்டத்தில் அமெரிக்காவிற்கு நன்மை கிடைப்பது போன்ற தோற்றப்பாடு ஏற்பட்டாலும், அதன்மூலம் உலக வர்த்தகம் மந்தம் அடையக் கூடும்.

எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக பொருட்கள் கைமாறுகின்றனவோ, அந்தளவு உலகளாவிய வர்த்தகம் நன்மை பெறும். தீர்வைகள் அதிகரிக்கும் பட்சத்தில், உலக நாடுகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வது குறைந்து, உலக வர்த்தகத்தில் மந்தநிலை ஏற்படலாம்.

தீர்வைகளால் பாதிக்கப்பட்ட நாடுகள், அமெரிக்காவின் மிது பதில் தீர்வைகளை விதித்து அமெரிக்காவை பழிவாங்க முற்படலாம்.

இத்தகைய பழிவாங்கல்கள் ஒரு சக்கரமாக சுழன்று உலகம் முழுவதிலும் வணிகங்களைப் பாதிக்கக்கூடிய சாத்தியம் உண்டு. ட்ரம்பின் முதலாவது பதவிக்காலத்தில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் வணிகப் போர் ஏற்பட்டு, உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.

பொருட்களின் விலையேற்றத்தால் பணவீக்கம் அதிகரிக்கும் சாத்தியமும் உண்டு. உலகளாவிய ரீதியில் பொருட்கள் சங்கிலித் தொடராக விநியோகிக்கப்படும் வலைப்பின்னலகள் உண்டு.

தீர்வைகள் அதிகரிக்கையில் மூலப்பொருட்கள் மற்றும் முடிவுப் பொருட்களின் விலை வானளாவ உயர்ந்து, இந்த வலைப்பின்னல்கள் சீர்குலையலாம். இது உலக நாடுகளில் பணவீக்கத்தைத் தூண்டி விடும்.

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் போன்ற ஏற்றுமதியில் கூடுதலாக தங்கியிருக்கும் நாடுகள் தீர்வைகள் மூலம் கூடுதலாக பாதிக்கப்படலாம்.

இவற்றின் உற்பத்திகளுக்கு கிராக்கி குறையும். இதனால் உற்பத்திகள் குறைந்து உள்ளுரில் தொழிற்சாலைகள் மூடப்படலாம். இலட்சக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்புக்களை இழக்கலாம்.

இந்த விடயங்களை ஒப்பிட்டு ஆராய்கையில், அமெரிக்காவை மீண்டும் சிறப்பானதாக மாற்றுவதற்காக ட்ரம்ப் விதித்த இறக்குமதித் தீர்வை ஒட்டுமொத்த உலகத்தையும் பாதிக்கும் பொருளாதார புயலமாக மாறக்கூடிய அபாயம் உள்ளது.

-சதீஷ் கிருஷ்ணபிள்ளை-

Share.
Leave A Reply

Exit mobile version