இந்தோ- பசுபிக் பிராந்திய அரசியலில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த புதிய நகர்வுகள் செயலூக்கம் பெற்று வருகின்றன.

இதற்கு நாற்கர (குவாட்) நாடுகளின் ஒத்துழைப்பை வொஷிங்டன் அதிகளவில் நாடி நிற்கிறது. அதேவேளை, ‘நாற்கர நாடுகள்’ இதற்கு எந்தவகையில் ஒத்துழைப்பதற்குத் தயாரான மனதுடன் உள்ளன என்பது இன்றய கேள்வியாகும்.

ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளை கொண்ட ‘நாற்கர நாடுகள்’ என்று அழைக்கப்படக்கூடிய ‘குவாட்’  QUAD. QUADRILATERAL  நாடுகளின் கட்டமைப்பில் பொருளாதார முன்னேற்றங்களுக்கும் முதலீட்டு சந்தர்ப்பங்களுக்கும் தொழில்நுட்ப அபிவிருத்திக்குமான அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

அமெரிக்க, சீன வல்லரசுகள் மத்தியில் அதிகரித்துவரும் இந்தோ-பசுபிக் பிராந்திய போட்டிகளின் காரணமாக, பிராந்திய அதிகாரமானது, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி தெரிவுகளைவிட கூடிய கவனத்தை நோக்கிய திசை திருப்பத்தை கண்டு வருகிறது.

சீனாவின் பிராந்திய மேலாதிக்கத்தை கையாளும் வகையில், பாதுகாப்புத் தெரிவுகளில் மேற்குலகுடன் ஒத்துழைக்கக்கூடிய இந்தோ –பசுபிக் பிராந்திய நாடுகள் மீது இரண்டாவது ட்ரம்ப் நிர்வாகம் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

இதன் மூலம் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சமாதானமும், ஒளிவு மறைவுகள் அற்ற நிலையும், அமைதிமிக்கதுமான வளர்ச்சி நோக்கிய விரிவாக்கமானது, அமெரிக்க சார்பு நிலைக்கு ஏற்ற வகையில் நகர்த்தப்படுகிறது.

குவாட் நாடுகளை செயலூக்கம் கொண்டதாக உருவாக்கும் வகையில், இந்தோ – பசுபிக் சமுத்திர மேலாதிக்கக் களம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்ட பிராந்திய தகவல் தொழில்நுட்ப இணைவு நிலையங்கள் உருவாக்கப்படுகின்றன.

குறிப்பாக, இந்து சமுத்திரத்தின் மேற்குப் பிராந்தியமான ஆபிரிக்க நாடுகளின் கரையில் இந்த தகவல் இணைப்பு நிலையங்களை அமைப்பதில் கூடுதலாக கவனம் செலுத்தப்படுகிறது.

கடந்த காலங்களில் சட்டத்துக்குப் புறம்பான கடல் நடவடிக்கைகள் இந்த பகுதியிலேயே அதிகம் இடம்பெற்றதற்கான தரவுகள் பெறப்பட்டுள்ளன.

இப்பொழுது அமெரிக்கத் தலைமையின் நகர்வுகளுக்கு சவாலாக அமைந்திருக்கக்கூடிய இந்து சமுத்திரத்தின் கிழக்கே தென்கிழக்காசிய பிராந்தியத்திலும் கப்பல்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியை உருவாக்கும் திட்டத்தில் நாற்கர நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா அதிக பிரயத்தனம் செய்து வருகிறது .

இதற்கு ஏற்ப, நாற்கர நாடுகளுடன் ஆசியான் நாடுகளை இணைத்துக் கொள்வதற்கு மிகப் பெரிய அளவில் நகர்வுகள் இடம் பெறுகின்றன. ஆனால், தென் கிழக்காசிய நாடுகளான ஆசியான் கூட்டு நாடுகள் தயங்கி வருகின்றன.

இதற்கு முக்கிய காரணம் நாற்கர நாடுகளுடன் ஆசியான் நாடுகள் இணைந்து செயற்படுவதானது ஆசிய நாடுகள் மத்தியிலான நேட்டோ அமைப்பு போன்ற ஒரு நிலையை உருவாக்கிவிடும் என்பது ஆசியான் நாடுகளின் பார்வையாக உள்ளது.

நேட்டோ அமைப்பானது அமெரிக்கத் தலைமையிலான வடஅத்திலாந்திக் பிராந்திய நாடுகள் சார்பான அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

நாற்கர நாடுகளுடன் ஆசியான் நாடுகள் இணைந்த ஒரு கூட்டு, சீன உறவில் ஆசியான் நாடுகளுக்கு விரிசல் ஏற்படுத்தும் வகையில் மாற்றப்படலாம் என்பது இங்கே முக்கியமானதாகும்.

இதனால் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மத்தியில் 1960கள் மற்றும் 70கள் போன்று மீண்டும் பதட்ட நிலை கொண்ட பிராந்திய ஒற்றுமையை சீர்குலைக்கக் கூடிய அரசியல் தோற்றுவிக்கப்படலாம் என்பது ஆசியான் நாடுகளின் பார்வையாக உள்ளது.

ஆனால், நிலைமையை எவ்வாறாயினும் சாதகமாக பயன்படுத்த முயலும் வொஷிங்டன் நிர்வாகம், தெற்காசிய நாடுகள் மத்தியில் அமெரிக்க நலன் களுடன் ஒத்துழைக்கக் கூடிய தலைமைத்துவங்களை தெரிந்தெடுத்து, அந்த நாடுகளின் கடற்படைகளுக்கு முறைசாராவகையில் கடல் ரோந்து நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தல் ஆகியவற்றில் திறன் வலுவாக்கும் நகர்வுகள் என்பதன் பெயரில் தமது மூலோபாயங்களை நகர்த்தும் வேலைகளை ஆரம்பித்துள்ளது.

தெற்காசிய நாடுகளின் கடற்கலன்களை பழுதுபார்ப்பதற்கும், பரிசோதிப்பதற்கும், கடலடி தொலைதொடர்பு கேபிள்களை பதிப்பதற்கும் சீன உதவிகளை நாடி செல்வதை தடுக்கும் முகமாக, நாற்கர நாடுகளின் அங்கத்துவ நாடான ஜப்பானின் கடற்கலன்கள் தயாரிப்பு நிறுவனங்களின் துணையுடன் கட்டமைப்புகளை உருவாக்கும் வகையில், கூட்டு வளங்களின் பங்கீடுகளை ஏற்படுத்துவதன் வாயிலாக தெற்காசிய நாடுகள் பலவற்றை நாற்கர நாடுகளின் பால் சார்ந்திருக்க வைக்கும் அதேவேளை, சீன கடற்கலன்களை இப்பிராந்தியத்தில் கட்டுப்படுத்தும் நிலையை உருவாக்கும் முயற்சிகள் ஆரம்பமாகி உள்ளன.

இவ்வாறு பல்வேறு மூலோபாய நகர்வுகள் ஊடாக தனக்கு சார்பான நாடுகளை இணைத்து கூட்டுகளை உருவாக்கிக் கொள்வதில் வொஷிங்டன் அதிகரித்த கரிசனை கொண்டிருந்தாலும், ஆசியான் நாடுகளின் நம்பிக்கையை பெறுவதில் இருக்கக்கூடிய பின்தங்கல்கள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் தலைமை ஆதிக்கத்தை பெற்றுக் கொள்வதற்கும் செல்வாக்கை உறுதி செய்து கொள்வதற்கும் பெரும் தடைக்கற்களாக உள்ளன.

ஆசியான் நாடுகள் பொதுவாக மேலைதேச சார்புடையனவாகவே பார்க்கப் பட்டாலும் உள்ளக முரண்பாடுகள் காரணமாக சீன செல்வாக்கு பெற்ற சமூகங்கள் ஊடாக உள்நாட்டில் பதட்டநிலை ஏற்படலாம் என்ற அச்சம் ஆசியான் நாடுகளுக்கு உண்டு.

இதனால் சீனாவுடனும் அமெரிக்காவுடனும் நேரடி தொடர்புகளை சமஅளவில் வைத்து கொள்ளவே ஆசியான் நாடுகள் விரும்புகின்றன . அல்லது சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையில் அதிக நம்பிக்கை கொண்டனவாக உள்ளன.

‘குவாட்’ அமைப்பின் ஊடாக வொஷிங்டன் தனது தலைமைத்துவத்தை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம், இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையால் அதிகளவில் பின் தங்கி நிற்கிறது.

அதாவது, எத்தனை முறை சீன – இந்திய பதட்டநிலை உருவாகியபோதிலும் , பதட்ட நிலையை ஊக்கப்படுத்தாமல், பேச்சுவார்த்தை நிலைக்கு சீனாவும் இந்தியாவும் நகர்வதன் மூலம் அமெரிக்க நலன் சார்ந்த நிலையை தவிர்த்து வருகின்றன.

இந்திய – சீன பதட்டநிலையை மேலும் ஊக்கப்படுத்தும் நிலையை தவிர்த்து, இந்தியா, நாற்கர நாடுகளுடன் மென் அதிகார போக்கு நிலையை வைத்திருப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருப்பதானது, தென் கிழக்காசிய நாடுகள் மத்தியில் தனது செல்வாக்கை பேண முயல்கிறது. இதுவும் அமெரிக்க கெடுபிடி இராஜதந்திர முறைக்கு அப்பாற்பட்டதாக பார்க்கப்படுகிறது .

இந்தியாவின் மென் அதிகார போக்கு, தென் கிழக்காசிய நாடுகள் மத்தியில் இந்தியாவின் செல்வாக்கை அதிகரிக்க செய்துள்ளது. பாதுகாப்பு ஒப்பந்தங்களில் தலையிடாது சுதந்திர இராஜதந்திர கொள்கையில் இந்தியா தங்கி இருப்பதையே தென் கிழக்காசிய நாடுகள் அதிகம் வரவேற்பதாக தெரிகிறது .

ஆக, அமெரிக்கா தலைமையிலான நாற்கர நாடுகளின் தலைமைத்துவத்துக்கு தென் கிழக்காசிய நாடுகளின் ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாத விவகாரமாகும். இந்தோ – பசுபிக் பிராந்தியத்தின் மத்தியில் தென் கிழக்காசிய நாடுகள் பூகோள ரீதியாக அமைந்திருப்பது இதற்கு முக்கிய காரணமாகும். இதனால் சர்வதேச தலைமைத்துவத்திற்கான சவாலை நிர்ணயிக்கும் நிலையில் தென் கிழக்காசிய நாடுகள் உள்ளன.

லோகன் பரமசாமி

Share.
Leave A Reply

Exit mobile version