காசா நகரில் அல் ஷிபா வைத்தியசாலைக்கு அருகே இஸ்ரேலிய படை கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) இரவு நடத்திய தாக்குதல் ஒன்றில் முன்னணி செய்தியாளர் ஒருவரான அனஸ் அல் ஷரீப் உட்பட ஐந்து அல் ஜசீரா செய்தியாளர்களும் மேலும் ஒரு உள்ளூர் ஊடகவியலாளரும் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவை முழுமையாக ஆக்கிரமிக்கும் இஸ்ரேலின் திட்டத்திற்கு ஐ.நா. பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டத்தில் கடும் கண்டனங்கள் வெளியானதோடு, இந்தத் திட்டத்திற்கு எதிரான விமர்சனங்களை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்த நிலையிலேயே ஊடகவியலாளர்கள் இலக்கு வைத்து தாக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையின் பிரதான வாயிலில் ஊடகவியலாளர்களுக்கான கூடாரத்தில் தங்கியிருந்தபோதே அல் ஷரீப் மற்றும் மற்றொரு செய்தியாளரான முஹமது கரிகியுடன் படப்பிடிப்பாளர்களான இப்ராஹிம் சஹர், முஹமது நவ்பல் மற்றும் முவாமன் அலிவா ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அல் ஜசீராக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் உள்ளூர் ஊடகவியலாளரான முஹமது அல் கால்தி என்பவரும் கொhல்லப்பட்டிருப்பதாக பின்னர் உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த இலக்கு வைக்கப்பட்ட படுகொலை ‘பத்திரிகை சுதந்திரத்தின் மீதான மற்றொரு அப்பட்டமான மற்றும் திட்டமிட்ட தாக்குதல்’ என்று அது குறிப்பிட்டுள்ளது.
அனஸ் அல் ஷரீபை இலக்கு வைத்ததை உறுதி செய்திருக்கும் இஸ்ரேலிய இராணுவம், அவர் ‘ஹமாஸில் உள்ள பயங்கரவாத குழு ஒன்றின் தலைவராக செயற்படுகிறார்’ என்று குற்றம்சாட்டியுள்ளது.
‘இஸ்ரேலிய பொதுமக்கள் மற்றும் துருப்புகள் மீதான மேம்பட்ட ரொக்கட் தாக்குதல்களையும் அவர் நடத்தியுள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் தொடர்பில் அதிர்ச்சியை வெளியிட்டிருக்கும் ஊடகவியலாளர் பாதுகாப்புக்கான குழு, அல் ஷரீப் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை வெளியிட இஸ்ரேல் தவறியுள்ளது என்று தெரிவித்துள்ளது.
‘இஸ்ரேலிடம் இருந்து இந்தப் போக்கை நாம் பார்ப்பது இந்தப் போரில் மாத்திரமல்ல. பல தசாப்தங்களாக ஊடகவியலாளார்களை படுகொலை செய்த பின் அவர்கள் பயங்கரவாதிகள் என்று இஸ்ரேல் கூறுவதோடு அதனை நிரூபிப்பதற்கு சிறிய ஆதாரத்தைக் கூட தருவதில்லை’ என்று அந்த அமைப்பின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஜோடி பின்பேர் பி.பி.சி. செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.
அல் ஷரீப் அங்கீகரிக்கப்பட்ட ஓர் ஊடகவியலாளராக இருந்தார் என்றும் காசாவில் என்ன நடக்கிறது என்று உலகம் அறிந்து கொள்வதற்கான ஒரே குரலாக இருந்தார் என்றும் அல் ஜசீரா முகாமைத்துவ ஆசிரியர் முஹமது முவாத் குறிப்பிட்டுள்ளார்.
28 வயதான அல் ஷரீப் படுகெலை செய்யப்படுவதற்கு சற்று முன்னர் எக்ஸ் சமூகதளத்தில் வெளியிட்ட பதிவில், காசா நகருக்குள் இஸ்ரேலின் தாக்குதல் தீவிரம் அடைந்திருப்பதாக எச்சரித்திருந்தார்.
அல் ஜசீரா செய்தியாளர்கள் இலக்கு வைக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு ஓகஸ்டில் இஸ்மைல் அல் கவுல் என்ற ஊடகவியலாளர் சென்ற கார் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் அவருடன் படப்பிடிப்பாளர் மற்றும் அருகால் சைக்கிளில் சென்ற சிறுவன் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.
நெதன்யாகு உறுதி
காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு நேற்று முன்தினம் கூடிய பாதுகாப்புச் சபையில் கண்டனங்கள் வெளியான நிலையில் போரை முடிவுக்குக் கொண்டுவர சிறந்த வழி அதுவென்று நெதன்யாகு கூறியுள்ளார்.
கடந்த ஞாயிறன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய நெதன்யாகு, திட்டமிடப்பட்ட நடவடிக்கை ‘மிக விரைவாக நடத்தப்படும்’ என்றும் அது ‘காசாவை ஹமாஸிடம் இருந்து விடுவிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
‘காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகள் திட்டமிட்டு பட்டினியில் வைக்கப்படுவதாக’ குற்றம்சாட்டிய அவர் காசாவில் பஞ்சம் நிலவுவதையும் நிராகரித்துள்ளார்.
எனினும் பாதுகாப்புச் சபை அவசரக் கூட்டத்தில் இஸ்ரேல் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டதோடு, காசாவை ஆக்கிரமிக்கும் இஸ்ரேலின் திட்டம் ‘சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறுவதாக இருக்கும்’ என்று பிரிட்டன், பிரான்ஸ் உட்பட மற்ற நாடுகள் எச்சரித்துள்ளன.
பலஸ்தீன மக்கள் மீதான கூட்டுத் தண்டனை ஏற்க முடியாதது என்று சீனா குறிப்பிட்டதோடு ‘பொறுப்பற்ற முறையிலான தாக்குதல் நடவடிக்கைகளுக்கு’ எதிராக ரஷ்யா மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐ.நா. உதவிச் செயலாளர் நாயகம் மிரோஸ்லாவ் ஜென்கா இந்தக் கூட்டத்தில் கூறியதாவது, ‘இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், அவை காசாவில் மற்றொரு பேரழிவைத் தூண்டி, பிராந்தியம் முழுவதும் எதிரொலித்து, மேலும் கட்டாய இடம்பெயர்வு, கொலைகள் மற்றும் அழிவை ஏற்படுத்தும்’ என்று எச்சரித்தார்.
எவ்வாறாயினும் இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவை வெளியிட்டு வரும் அமெரிக்கா தரப்பில் பேசிய ஐ.நாவுக்கான அதன் தூதுவர் டொரோதி ஷீ, பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு அமெரிக்க ஓய்வின்றி செயற்படுவதாகவும் அந்த முயற்சிகளை இந்தக் கூட்டம் பொருட்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இஸ்ரேல் மீதான சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வருவதோடு எதிர்வரும் செப்டெம்பரில் ஐ.நா. பொதுக் குழு கூட்டத்தில் பலஸ்தீன நாட்டை அங்கீகரிக்கப் போவதாக அவுஸ்திரேலியாவும் அறிவித்துள்ளது.
பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் கனடா பல மேற்குலக நாடுகளும் பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தன. எனினும் உலக நாடுகளில் சுமார் 75 ஆன 193 ஐ.நா அங்கத்துவ நாடுகளில் 147 நாடுகள் ஏற்கனவே பலஸ்தீன தனி நாட்டை அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆதரவாக பேசுவது மாத்திரம போதுமானதாக இல்லை என்று ஐக்கிய நாடுகளின் பலஸ்தீன தூதுவர் ரியாத் மலிக்கி பாதுகாப்புச் சபையில் தெரிவித்துள்ளார். ‘ஐ.நா பாதுகாப்புச் சபை உறுப்பினர்கள் என்ன கூறுகிறார்கள் என்பது தொடர்பில் இஸ்ரேலுக்கு எந்தக் கவலையும் இல்லை. நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது மாத்திரமே முக்கியமானதாக உள்ளது’ என்று அவர் குறிப்பிட்டார்.
‘நீங்கள் செயற்பட வேண்டும். இது தொடர்பில் ஏதாவது செய்ய வேண்டும். இதனை நிறுத்த வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
பட்டினியால் மேலும் ஐவர் மரணம்
எவ்வாறாயினும் காசா நகரின் கிழக்கே இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்று தீவிரம் அடைந்திருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. காசாவில் படை நடவடிக்கையை விரிவுபடுத்தும் திட்டத்தை நெதன்யாகு அறிவித்த நிலையிலேயே தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளன.
காசா நகரின் மூன்று புறநகர் பகுதிகளான சப்ரா, செய்தூன் மற்றும் ஷெஜையா மீது இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் விமானங்கள் சரமாரி தாக்குதல்களை நடத்தியதாக பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் அங்கிருந்து மேற்கு பக்கமாக வெளியேறிச் செல்வதாக கூறப்படுகிறது.
கடந்த பல வாரங்களில் இது கடுமையான தாக்குதல்களாக இருந்தாக குடியிருப்பாளர்கள் விபரித்துள்ளனர். துருப்புகள் நகருக்கு ஆழ ஊடுருவுவதற்கு தயாராகி வருவதாக மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். காசாவில் வடக்கு முனையில் தற்போது சுமார் ஒரு மில்லியன் மக்கள் அடைக்கலம் பெற்றிருப்பதாக நம்பப்படுகிறது.
அந்தப் பகுதியில் உள்ள ஹமாஸ் நிலைகள் மீது பீரங்கி தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் தரைப்படைகளை காசா நகரை நோக்கி முன்னேறும் எந்த சமிக்ஞையும் தெரியவில்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
‘போர் மீண்டும் ஆரம்பித்தது போன்று சத்தம் இருந்தது’ என்று 25 வயது ஆமிர் சலா ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.
‘வீடுகள் மீது டாங்கிகள் செல்களை வீசியதோடு பல வீடுகளும் தாக்கப்பட்டன. விமானங்கள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தயதோடு பல ஏவுகணைகள் கிழக்கு காசாவில் உள்ள வீதிகளில் விழுந்தன’ என்று அவர் ‘சாட்’ செயலி ஊடாக குறிப்பட்டார்.
இஸ்ரேலின் புதிய திட்டம் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பாவில் இஸ்ரேலின் முக்கிய நட்பு நாடான ஜெர்மனி இஸ்ரேலிய இராணுவ உபகரணங்களின் ஏற்றுமதியை நிறுத்தியதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது.
இஸ்ரேல் காசாவில் தனது நியாத்தையும் மனிதத்துவத்தையும் இழந்துள்ளது என்று இத்தாலி பாதுகாப்பு அமைச்சர் குவிடோ க்ரோசட்டோ தெரிவித்துள்ளார்.
‘தற்போது நடப்பது ஏற்க முடியாதது. சேதங்களை ஏற்படுத்தக்கூடிய போர் நடவடிக்கையை நாம் எதிர்கொள்ளவில்லை. சட்டம் மற்றும் எமது நாகரிகத்தின் அடிப்படையை மறுக்கும் நிலையை எதிர்கொண்டுள்ளோம்’ என்று ‘லா ஸ்டம்பா டெய்லி’ பத்திரிகைக்கு நேற்று அளித்த பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, காசா நகரின் தெற்கே அல் செய்தூன் பகுதியில் நேற்று காலை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் எட்டு பேர் கொண்ட குடும்பத்தின் அனைவரும் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன செய்தி நிறவனமான வஃபா தெரிவித்துள்ளது.
இதில் தாய், தந்தை மற்றும் ஆறு குழந்தைகள் என ‘அர்ஹிம்’ குடும்பத்தினரே கொல்லப்பட்டுள்ளனர்.
குறிப்பாக செய்தூன் பகுதியில் இஸ்ரேலின் கடந்த ஞாயிறு இரவு தொடக்கம் நடத்தி வரும் சரமாரி தாக்குதல்களில் மேலும் ஏழு பேர் கொல்லப்பட்டு 41 பேர் வரை காயமடைந்திருப்பதாக பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்களாவர்.
மறுபுறம் காசாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் ஐவர் உயிரிழந்ததாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரணங்களுடன் காசாவில் 22 மாதங்களுக்கு முன் போர் ஆரம்பித்தது தொடக்கம் பட்டினியால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்திருப்பதோடு இவர்களில் 101 பேர் சிறுவர்களாவர். எனினும் அவர்களில் பெரும்பாலானவர்கள் கடந்த மூன்று வாரங்களுக்குள்ளேயே மரணித்துள்ளனர்.
கடந்த மார்ச் ஆரம்பம் தொடக்கம் காசாவுக்கான உதவிகளை இஸ்ரேல் முடக்கி வருவதோடு சர்வதேச அழுத்தத்தைத் தொடர்ந்து கடந்த ஜூலை கடைசியில் உதவிகள் செல்வதற்கு சில தளர்வுகளைக் கொண்டுவந்தபோதும் அவை போதுமானதாக இல்லை என்று ஐ.நா. மற்றும் தொண்டு அமைப்புகள் கூறி வருகின்றன.
மறுபுறம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆதரவில் முன்னெடுக்கப்படும் சர்ச்சைக்குரிய உதவி விநியோக இடங்களில் கூடும் ஆயிரக்கணக்கான மக்களை இலக்கு வைத்து இஸ்ரேலியப் படை தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களில் தற்போது ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.