வாஷிங்டன்: சிந்து நதியில் (Indus Water Treaty) இந்தியா அணை கட்டட்டும் என்று தான் காத்துக்கொண்டிருக்கிறோம்.
இந்தியா மட்டும் அணை கட்டினால் அதை 10 ஏவுகணைகளை கொண்டு தகர்ப்போம் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி அடாவடியாக பேசியுள்ளார்.
அமெரிக்காவிற்கு சுற்றுப் பயணம் சென்ற பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் இப்படி பேசியது மட்டும் இன்றி உலக நாடுகளுக்கும் அணு ஆயுத மிரட்டல் விடுத்துள்ளார். பாகிஸ்தான் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் உலகில் பாதியை அழித்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து, பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட முடிவு செய்த இந்தியா, அந்த நாட்டுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. இதனால் அரண்டு போன பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக ஆத்திரமூட்டும் வகையில் கருத்துக்களை கூறி வருகிறது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம்
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டால் பாகிஸ்தானின் பெரும் பகுதி வறண்டு போகும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் 80 சதவீத விவசாயம் சிந்து நதி நீரை நம்பியே உள்ளது. இதனால், கடுமையான பொருளாதார இழப்பு ஏற்படும் என்பதால் பாகிஸ்தான், என்ன செய்வது என்று தெரியாமல் கண்டபடி உளறி வருகிறது.
ஆசிம் முனீர்
அமெரிக்காவில் ஆசிம் முனீர்
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இந்தியாவுக்கு கடிதம் வாயிலாக கோரிக்கை வைத்தது.
ஆனால் அதனை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து ரத்து தான் என்று கூறிவிட்டது.
இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்து வரும் பாகிஸ்தான், வழக்கம் போல தனது உளறல் பேச்சுகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதி ஆசிம் முனீர் இது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
அமெரிக்காவுக்கு சென்றுள்ள ஆசிம் முனீர், டாம்பாவில் நடைபெற்ற சென்ட்காம் தளபதி ஜெனரல் மைக்கேல் குரில்லாவின் ஓய்வு விழா மற்றும் புதிய தளபதி அட்மிரல் பிராட் கூப்பரின் பொறுப்பேற்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது முனீர் கூறியதாவது:-
இந்தியா மட்டும் அணையை கட்டினால்
“சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் இந்தியா முடிவு, 2 கோடி மக்களை பட்டினியில் கிடக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா அணையை கட்டட்டும் என்று தான் காத்துக்கொண்டு இருக்கிறோம். இந்தியா மட்டும் அணையை கட்டினால், 10 ஏவுகணைகளை கொண்டு அதை தகர்ப்போம்.
சிந்து நதி என்பது இந்தியாவின் குடும்ப சொத்து இல்லை. எங்களுக்கு ஏவுகணைகளுக்கு ஒன்றும் பற்றாக்குறை இல்லை” என்றார்.
மேலும் உலக நாடுகளுக்கும் அணு ஆயுத மிரட்டல் விடுத்துள்ளார் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர். பாகிஸ்தான் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் உலகில் பாதியை அழித்துவிடுவோம் என்று அவர் மிரட்டியுள்ளார்.
பாதி நாடுகளை அழித்துவிடுவோம்
பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் அணு ஆயுத போர் குறித்தும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
புளோரிடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிம் முனீர் கூறியதாவது:- நாங்கள் அணு ஆயுத நாடு. நாங்கள் வீழ்ந்துவிடுவோம் என்று நீங்கள் நினைத்தால், உலகின் பாதி நாடுகளை எங்களுடன் அழைத்து சென்றுவிடுவோம்” என்று மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார்.
அதாவது, எதிர்காலத்தில் இந்தியாவுடனான போரில் பாகிஸ்தானின் இருப்புக்கு அச்சுறுத்தல் வந்தால் உலகின் பாதி நாடுகள் அழிந்து போகும் என பாகிஸ்தான் ராணுவ தளபதி பேசியுள்ளார்.
அமெரிக்காவுடன் சமீப காலமாக பாகிஸ்தான் நெருக்கம் காட்டி வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு இரண்டாவது முறையாக பாகிஸ்தான் ராணுவ தளபதி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் இப்படி அடாவடியாக பேசியுள்ளார்.