ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பது அனைவருக்கும் தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

இந்த தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் குறித்து அனைத்து அரசாங்கங்களும், இராணுவமும், புலனாய்வுப் பிரிவுகளும் அறிந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்று அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு அரசாங்கத்திலும் இருந்தவர்கள், இராணுவத்தினர், புலனாய்வுப் பிரிவினர் என அனைவருக்கும் தெரியும்.

நான் இதை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கூட தெரிவித்துள்ளேன். ஆனால், அவர்களால் அதை வெளியே சொல்ல முடியாது.

மறுபுறம் அவர்களுடன் எம்மாள் மோத இயலாது. அத்துடன், எதிர்காலத்தில் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் ஒரு பெரிய பிரச்சினையாக மாறும் எனவும் அவர் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த கருத்துக்கள் தற்போது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அரசியல் சந்திப்புகள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் மும்மொழியப்பட்டுள்ள தேசிய கல்வி கொள்கை குறித்து பல்வேறு வேறுப்பட்ட கருத்துக்கள் சமூகமயப்பட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன எழுதிய ‘ இலங்கையின் கல்வி மறுசீரமைப்பு’ என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த வாரம் பத்தரமுல்லையில் அமைந்துள்ள வங்கி கற்கை நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, தினேஸ் குணவர்தன மற்றும் அபயராம விஹாராதிபதி முருதெட்டுவே ஆனந்த தேரர் உள்ளிட்ட தேசிய அரசயலில் செல்வாக்கு செலுத்தும் முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.

இந்த நிகழ்வு ஒரு நூல் வெளியீட்டுக்கு அப்பால் அரசியல் செல்வாக்கு நிறைந்த ஒன்றுக் கூடலாக இருந்ததை அவதானிக்க முடிந்தது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு டளஸ் அழகப்பெரும, தயாசிறி ஜயசேகர, அநுர பிரயதர்ஷன யாபா மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர் பேராசிரியர் சுதந்த லியனகே உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர்.

மேலும் நிகழ்வு ஆரம்பித்து சரியாக 20 நிமிடத்தில் மஹிந்த ராஜபக்ஷ, அங்கிருந்து அத்தியாவசிய தேவைக்காக வெளியில் சென்றார்.

அவரது இருக்கையில் சந்திம வீரக்கொடி சென்று அமர்ந்தார். இதனை அவதானித்த ரணில் விக்கிரமசிங்க, ‘ மஹிந்தவின் கதிரையை கைப்பற்றி விட்டீர்கள்’ என அரசியல் சாடைமொழியில் சந்திம வீரக்கொடியை நோக்கி கூறினார்.

இதனால் சற்று குழப்பம் அடைந்த சந்திம வீரக்கொடி, அந்த கதிரையிலிருந்து எழுந்து அடுத்த வரிசையில் சென்று அமர்ந்தார். இதனை பலரும் அவதானித்து ஒருவருக்கு ஒருவர் முனுமுனுத்துக் கொண்டிருக்கையில் மஹிந்த மீண்டும் வந்து அந்த இடத்தில் அமர்ந்தார்.

ரணில் – டளஸ்

நூல் வெளியீட்டு நிகழ்வு நிறைவடைந்து அனைவரும் செல்லுகையில், ரணில் விக்கிரமசிங்கவின் அருகில் சென்ற டளஸ் அழகப்பெரும, ‘சார். நீங்கள் கொண்டு வந்த கல்வி கொள்கைக்கு எதிராக அன்று நான் போராட்டத்தில் பங்கேற்றேன்’ என்று கூறினார்.

‘நானும் அன்றைய கல்வி மறுசீரமைப்பு கொள்கையை எதிர்த்து ஊர்வலத்தில் கலந்துக் கொண்டிருந்ததாக அருகில் இருந்த அநுர பிரியதர்ஷன யாபாவும் கூறினார்.

ஆனால் அந்த கல்வி கொள்கையின் உள்ளடக்கம் குறித்து போதிய அறிவு அன்று எமக்கு இல்லாததால் தான் போராட்டங்களில் பங்கேற்றோம்.

இன்று அந்த கல்வி கொள்கையில் பலனை நாடு அனுபவிக்கிறது என டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். ‘ அன்றைய எனது சிந்தணை இன்று எவ்வாறு பலனளிக்கிறது என்பது வெளிப்படுவதை, கண்ணெதிரே காண்கிறீர்கள் தானே’ என ரணில் விக்கிரமசிங்க புன்னகையுடன் கூறஜனார்.

‘சார். அவர்கள் வலியுறுத்தியமையால் தான், நாங்கள் அன்று ஊர்வலம் சென்றோம்’ என அநுர பிரியதர்ஷண யாபா கூற அனைவரும் பேரொலியுடன் சிரித்தனர். ‘அவர்கள்’ என அடையாளப்படுத்தியது ஜே.வி.பியை தான் என புரிந்துக்கொண்ட ரணில் விக்கிரமசிங்க, நாட்டிற்கான அனைத்து நல்ல விடயங்களையும் தடுத்ததும் அவர்கள் என கூற அனைவரும் பேரொலியுடன் மீண்டும் சிரித்தனர்.

அந்த இடத்தில் கூடிய, முன்னாள் கல்வி அமைச்சரான சுசில் பிரேமஜயந்த, முன்னாள் சபாநாயகர்களான கரு ஜயசூரிய , மஹிந்த யாபா அபேவர்தன மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் சிசிர ஜயக்கொடி உள்ளிட்ட தலைவர்களும் ரணிலுடன் சம்பாஷணையில் ஈடுப்பட்டனர்.

இதன் போது முன்னாள் ஆலோசகர் கலாநிதி எச்.எஸ்.ஆர். சமரதுங்கவை நோக்கி ‘ அரசாங்கம் பணம் அச்சிட்டுள்ளது அல்லாவா ? என ரணில் விக்கிரமசிங்க வினாவினார். இதற்கு மறுமொழியளிக்கும் வகையில், ரணிலின் காதில் மெதுவாக கலாநிதி எச்.எஸ்.ஆர். சமரதுங்க குறிப்பிட்டார். இதன் போது என்ன கூறினார் என்பது யாருக்கும் தெரியாது.

ரணில் – தயாசிறி

தேநீர் விருந்துபச்சாரம் இடம்பெற்றிருக்கையில், ரணிலுக்கு அருகில் சென்ற கரு ஜயசூரிய, தயாசிறி ஜயசேகர, லசந்த அழகியவண்ண மற்றும் சுமேதா ஜயசேன ஆகியோர் சமகால அரசியல் விடயங்கள் குறித்து வினாவினர்.

‘அரசாங்கம் இன்னும் கொஞ்ச நாட்கள் செல்லட்டும். இந்த ஆண்டில் நாம் எதுவும் செய்யாது வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்போம். என்ன செய்ய வேண்டும் ? அதனை எப்போது செய்ய வேண்டும் ? என்பதை நான் கூறுகிறேன் என ரணில் விக்கிரமசிங்க கூற, அதனை அனைவரும் ஏற்றுக்கொண்டதை போன்று தலையசைத்தனர்.

சஜித் மீண்டும் போட்டி

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக குறிப்பிட்டுள்ளமை தொடர்பிலும் இதன் போது கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

‘ அவர்கள் எத்தனை தேர்தல்களை எதிர்க்கொண்டார். அவரால் ஒருபோதும் வெற்றிப்பெற இயலாது என்பதே அந்த தேர்தல் முடிவுகள் கூறுகின்றன. அவர்கள் தற்போது ஐக்கிய மக்கள் சக்திக்கும் பெரும் பிரச்சினையாகவே உள்ளார்’ என அங்கிருந்த எதிர்க்கட்சி உறுப்பினர் குறிப்பிட்டார்.

‘பிரதான எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி கடும் வீழ்ச்சியை அடைந்துள்ளதாக பலதரப்புகள் கருத்து கூறுகின்றன. அந்த வீழ்ச்சிக்கு பிரதான காரணம் சஜித் பிரேமதாசவின் செயல்பாடுகளாகும். வேறு எந்தவொரு காரணியும் வீழச்சிக்கு தாக்கம் செலுத்த வில்லை என வஜிர அபேவர்தன கூறினார்.

‘ஐக்கிய மக்கள் சக்தியை பிளவுப்படுத்தியேனும் அந்த வாக்குளை ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொள்ள வேண்டும். சஜித் போன்ற தலைமைத்துவம் அற்றவர்களால் நாட்டுக்கு எந்த பலனும் இல்லை என’ அங்கிருந்த முக்கிய நபர் ஒருவர் கூறினார்.

‘பதற்றப்பட வேண்டாம். ஐக்கிய தேசிய கட்சியின் சம்மேளனத்திற்கு பின்னர் மறுசீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படும். கீழ் மட்டத்திலிருந்து கட்சியை ஒழுங்கிணைக்கும் பணிகளை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக நாமல் ராஜபக்ஷவும் என்னிடம் கூறினார்’ என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

மஹிந்த – வஜிர

இவ்வாறு சமகால அரசியல் விடயங்கள் குறித்து பல்வேறு சம்பாஷணைகள் இடம்பெறுகையில், முன்னாள் மஹிந்த ராஜபக்ஷவும், ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவும் சுமார் 20 நிமிடம் வரை கலந்துரையாடலில் ஈடுப்பட்டிருந்தனர். நீண்ட நேரமாக இருவரும் பேசிக்கொண்டிருக்கையில், யாரும் அவ்விடத்திற்கு செல்ல வில்லை. மாறாக அனைவரினதும் பார்வை அவர்களை நோக்கியே இருந்தது.

சஷி தரூர் – ரணில்

இந்திய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சஷி தரூரின் அண்மைய இலங்கை விஜயத்தின் போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.

இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர் அலி சப்ரியும் பங்கேற்றிருந்தார். இந்த இருதரப்பு சந்திப்பில் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் இலங்கையின் தற்போதைய பொருளாதார அரசியல் நிலைமைகள் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஆளும் கட்சி மோதல்

ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள மோதல் தற்போது அரசியல் மேடைகளில் வெளிப்பட தொடங்கியுள்ளன. இது மாத்திர் அன்றி இந்த மோதல்களுக்கு பின்னால் அதாவது திரைக்குப் பின்னால் பல அறியப்படாத உண்மைகள் உள்ளன.

இந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக, ஜே.வி.பி அல்லாத தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தற்போது அரசியல் அனாதைகளாகியுள்ளதாகவே கருதுகின்றனர். அவர்களுக்கு ஜே.வி.பி.யிலிருந்து எந்த ஆதரவும் இல்லை. யாரிடமும் தங்கள் குறைகளைச் சொல்ல முடியாத நிலையில் உள்ளனர். மேலும் அரசாங்கத்திற்குள் அவர்களுக்கு எந்த அங்கீகாரமும் இல்லை என்பது மற்றுமொரு விடயமாக கூறப்படுகின்றது.

கடந்த தேர்தல் காலத்தில், இந்த தேசிய மக்கள் சக்தி குழு, தங்களுக்கு ஜே.வி.பி.யால் இழைக்கப்படும் அநீதிகள் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் தெரிவித்திருந்தனர். ஆனால், பிரதமர் ஹரினிக்கு அரசாங்கத்திற்குள் அதிக இடம் இல்லாததால், அவர் கிட்டத்தட்ட முழுமையாக அரசியல் அமைதி காத்து வருகிறார். ஜே.வி.பி. அமைச்சர்கள் வெளிப்படையாக அரசாங்கத்திற்காக கருத்து தெரிவித்தாலும், பிரதமர் ஹரினி வெளியே வந்து அரசாங்கத்திற்காக குரல் கொடுப்பதில்லை.

பிரதமர் ஹரினியின் மௌனம்

செயற்கைகோள் தொடர்பான பிரதமரின் கூற்றுக்கு அமைச்சர்களான வசந்த சமரசிங்க, நலிந்த ஜயதிஸ்ஸ, பிமல் ரத்நாயக்க ஆகியோர் நேரடியாக பதிலளித்தபோது, சம்பவத்திற்கு காரணமான பிரதமர் ஹரிணி எவ்விதமான கருத்துக்களையும் கூறவில்லை.

ஒருவேளை பிரதமர் ஹரிணி சொன்னது தவறு என்றால், அன்றைய தினமோ அல்லது அடுத்த நாளோ அவர் பாராளுமன்றத்தில் அதைத் திருத்தியிருக்க வேண்டும். ஆனால், அரசாங்க அமைச்சர்களே பிரதமரின் கூற்று தவறு என்று சொன்னபோது பிரதமர் ஹரிணி ஒரு வார்த்தைகூட பேசாமல் இருந்துள்ளார்.

அதற்கு பதிலாக, பிரதமர் ஹரிணி இரண்டு முக்கியமான நபர்களை சந்தித்தார். அதாவது, முதலில் இந்திய உயர்ஸ்தாணிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்தார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கல்வித் துறையின் வளர்ச்சி குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக கூறப்பட்டது.

அதன் பின்னர், பிரதமர் ஹரிணி பேராயர் இல்லத்திற்குச் சென்று கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையையும் சந்தித்தார்.

அங்கும் கல்வி சீர்திருத்தங்கள் குறித்து கவனம் செலுத்தியதாகவே கூறப்பட்டது. ஆனால், இதில் விசேஷம் என்னவென்றால், செயற்கைக்கோள் குறித்து தான் சொன்னது சரியா தவறா என்று பிரதமர் ஹரிணி இதுவரையில் எந்த இடத்திலும் அறிக்கை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(லியோ நிரோஷ தர்ஷன்)

Share.
Leave A Reply

Exit mobile version