•‘வீடு’ படத்துல அவங்களோட நடிப்பு நெகிழ வைக்கும். தமிழ்ல அவங்க சின்னச் சின்ன ரோல்கள்லதான் நடிச்சிட்டிருந்தாங்க. பெரிய கேரக்டர்கள் எதிலும் அவங்கள பார்க்க முடியாமல் இருந்தது.

“என்னோட முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ ஒரு த்ரில்லர் படமாக இருந்ததால, ஒரு குறிப்பிட்ட ஆடியன்ஸைதான் போய்ச் சேர்ந்தது.

அடுத்து இயக்கும் படம் எல்லோரையும் போய்ச் சேரணும்னு நினைச்சுப் பண்ணினதுதான் இந்த ‘காந்தி கண்ணாடி.’ சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு பாலாவை அழைச்சிட்டு வந்திருக்கேன்.

தலைப்புல வரும் ‘காந்தி கண்ணாடி’க்கான கேரக்டரை ரஜினி சாரை மனசுல வச்சுதான் எழுதினேன்.

ஆனா, அவர் என்னைக் கூப்பிட்டுப் படம் கொடுக்கறது என்பது பெரிய கனவுதான். ஆனாலும் அந்தக் கதையை விட மனசில்லாமல் இப்ப பாலாஜி சக்திவேல் சார், ‘ஊர்வசி’ அர்ச்சனா மேடம்னு இவங்கள வச்சு ஒரு ஃபீல் குட் படமாகக் கொண்டு வந்திருக்கேன்!” – நிதானமாகப் பேசுகிறார் இயக்குநர் ஷெரி

“ஹீரோவாக கே.பி.ஒய். பாலா எப்படி ஸ்கோர் செய்திருக்கார்?’

‘‘பாலாவை ஆரம்பத்தில் இருந்தே எனக்குத் தெரியும். நான் ஒரு படத்துல இணை இயக்குநரா இருந்தபோது அவர் அதுல சின்ன ரோலில் நடித்தார்.

‘நான் இயக்குநர் ஆன பிறகு உன்னை வச்சு ஒரு படம் பண்ணுறேன்’னு அவர்கிட்ட பேசி வச்சிருந்தேன்.

அந்த வாய்ப்பு இந்தப் படத்தின் மூலம் கைகூடியிருக்குது. என்னோட சின்ன வயசில தெருக்கூத்து கற்ற பையனாகதான் வளர்ந்தேன்.

வீதி நாடகங்கள், பொம்மைகள் தயாரிக்கறதுனு இருந்தேன். என்னோட கேரக்டர்தான் இதுல பாலாவின் ரோலாக உருமாறியிருக்கு. இந்தக் கதையை பாலா ரொம்பவே நம்பினார்.

‘என்னோட முதல் படமாக இது இருந்தா நல்லா இருக்கும்’னு விரும்பி வந்து நடிச்சிருக்கார். இதுல வடசென்னை பையனா அவர் கொடுத்த உழைப்பும், அர்ப்பணிப்பும் திரையிலும் பிரதிபலிக்கும்.

நடிச்சதோடு மட்டுமல்லாமல் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலை வரையிலுமே ஈடுபாடு காட்டுறார்.

நான் பார்த்த வகையில் அவர் நிச்சயமா ஒரு ஹீரோ மெட்டீரியல்தான்!”

“அதென்ன ‘காந்தி கண்ணாடி?’

‘‘ஒரு உண்மைச் சம்பவத்தின் பாதிப்பில் உருவானதுதான் இந்தக் கதை. ஒவ்வொருத்தர் வாழ்க்கைக்குப் பின்னாடியும் சில விஷயங்கள் இருக்கலாம்.

வெற்றியை நோக்கி ஓடுறவங்களும் இருக்காங்க. காசு, பணம் சம்பாதிச்சு ஒரு வாழ்க்கையை வாழணும்னு இருக்கறவங்களும் உண்டு.

ரொம்ப சிலர்தான் நிம்மதியைத் தேடி மட்டுமே ஓடுவாங்க. இப்படி மூன்று விதமான மக்கள் இங்கே இருக்காங்க. இப்படி ஓடுறவங்களுக்கு மத்தியில ‘இதுதான்டா வாழ்க்கை’ன்னு புரியவைக்கற மாதிரி ‘காந்தி கண்ணாடி’யைக் கொண்டு வந்திருக்கேன்.

ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்தவர் பாலாஜி சக்திவேல். அவர் 35 வருஷத்துக்கு முன்னாடி கோவையில அர்ச்சனாவை கல்யாணம் செய்துகிட்டு எதிர்ப்புகளால ரெண்டு பேரும் ஓடி வந்து சென்னையில வாழ்ந்திட்டிருக்காங்க.

இன்னொரு பக்கம் பாலா, நமீதா கிருஷ்ணமூர்த்தி ஜோடி. இப்படி ஒரு மூத்த தம்பதியினர், ஒரு இளம் தம்பதியினர்,

இவங்கள மையமாக வைத்துக் கதை நகரும். தவிர ‘டார்லிங்’ மதன், மகாநதி சங்கர், அமுதவாணன்னு நிறைய பேர் இருக்காங்க.

என்னோட முதல் படத்தின் ஒளிப்பதிவாளரான பாலாஜி கே.ராஜா இதுல கேமராவை கவனிச்சிருக்கார்.

விவேக் மெர்வின் இசை, படத்திற்கு பலம் சேர்த்திருக்கு! முக்கியமான ஒரு விஷயம், தயாரிப்பாளர் ஜெய் கிரண் சாருக்கு இதுதான் முதல் படம்.

அவர் பல கோவில்கள் கட்டின ஸ்தபதியும்கூட! அவர் கொடுத்த சுதந்திரத்தாலதான், நினைத்த படத்தை எடுத்திருக்கேன்.

“பாலாஜி சக்திவேல் இப்ப நடிகராகவே கலக்குறாரே?

‘‘அவர் இயக்கிய படங்கள் பார்த்துதான் சினிமாவுக்கே வந்தேன். அவரை டைரக்ட் பண்ணப் போறேன்னு எனக்குள் சின்னதொரு பதற்றம் இருந்தது.

ஆனா அவரே அந்த பயத்தை உடைத்து என்னை சகஜமாக்கினார். அவர் கதையைக் கேட்டு முடிச்சதும், ‘இந்தக் கதைக்கு என்னால எவ்வளவு நியாயம் செய்ய முடியுமோ, அவ்வளவு செய்றேன்’னு விரும்பி வந்து நடிச்சிருக்கார்.

ஜெயிச்சவங்ககிட்ட இருந்து பாராட்டு வர்றது அவ்வளவு சுலபமா நடக்காது. ஆனா, பாலாஜி சக்திவேல் சார் சின்னச் சின்ன விஷயத்துக்குக்கூட தட்டிக்கொடுத்துப் பாராட்டுவார்.’’

“ ‘ஊர்வசி’ விருது பெற்ற அர்ச்சனா, இதில் கம்பேக் ஆகுறாங்க…’‘‘ஆமாங்க! ‘வீடு’ படத்துல அவங்களோட நடிப்பு நெகிழ வைக்கும்.

தமிழ்ல அவங்க சின்னச் சின்ன ரோல்கள்லதான் நடிச்சிட்டிருந்தாங்க. பெரிய கேரக்டர்கள் எதிலும் அவங்கள பார்க்க முடியாமல் இருந்தது.

அவங்ககிட்ட கதையைச் சொன்னதும் ‘இப்படி ஒரு கதையைத்தான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன்’னு சொல்லி வந்தாங்க.

நடிப்பின் மீது அவங்களுக்கு இருக்கிற ஈடுபாடு என்னை பிரமிக்க வச்சது. அவங்களுடைய கேரக்டருக்கான தோற்றம், ஆடை ஆபரணங்கள் எல்லாம் எப்படி இருக்கலாம்னு விதவிதமான தோற்றங்கள்ல அவங்களே தயார் செய்து அணிந்து எங்களை ஆச்சரியப்படுத்தினாங்க. ‘வீடு’ படம் மாதிரி இதிலும் அவங்க நடிப்பு பேசப்படும்.’’

Share.
Leave A Reply

Exit mobile version