“குவாலியர், மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் சினாவர் நகரில் வசித்து வரும் 27 வயது வாலிபர் ஒருவர் யூனிவர்சிட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.

அதில், தன்னுடைய தோழியுடன் ஓட்டல் ஒன்றிற்கு சென்றேன். இருவரும் 5 மணிநேரம் தங்கியிருந்தோம்.

மேலாளரிடம் ரூ.1,200 அறை வாடகை கொடுத்து விட்டு இருவரும் திரும்பி விட்டோம். 6 நாட்கள் கழித்து மர்ம நபரின் எண்ணில் இருந்து வாட்ஸ்அப் தகவல் வந்தது.

அதில், தோழியுடன் ஓட்டலில் தங்கிய வீடியோ தன்னிடம் உள்ளது. ரூ.1 லட்சம் பணம் தராவிட்டால், வீடியோவை வைரலாக்கி விடுவேன் என மிரட்டல் செய்தி இருந்தது என தெரிவித்து உள்ளார்.

இதனால் பயந்து போன அவர், பணம் ஏற்பாடு செய்ய 6 நாட்கள் வேண்டும் என்றார். ஆனால், 2 நாட்களுக்குள் பணம் வரவேண்டும் என மிரட்டல் விடப்பட்டு உள்ளது.

இதற்குள் போலீசில் அந்த வாலிபர் புகாரளித்து இருக்கிறார். இந்நிலையில், அவரை மீண்டும் தொடர்பு கொண்ட அந்த மர்ம நபர் அரை மணிநேரத்திற்குள் பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் பணம் போட வேண்டும் என மிரட்டியிருக்கிறார்.

இல்லையெனில் கடும் விளைவுகள் இருக்கும் என கூறியிருக்கிறார். இதனால், பயந்து போய் ஆன்லைன் வழியே ரூ.5 ஆயிரம் பணம் அனுப்பினார்.

ஆனால், மீதமுள்ள ரூ.95 ஆயிரம் பணம் அனுப்பினால் மட்டுமே வீடியோவை அழிக்க முடியும் என பதில் வந்திருக்கிறது.

இதுபற்றி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில், அந்த வாலிபருடைய காதலியின் தோழியே இந்த மர்ம நபர் என தெரிய வந்தது.

ஜுஜார்பூர் தாதியா பகுதியை சேர்ந்த அவர் என்ஜினீயரிங் படித்து வரும் மாணவி ஆவார். அவரை பிடித்து விசாரணை செய்ததில், அவருடைய நண்பர் மற்றும் மற்றொரு வாலிபருடன் சேர்ந்து இந்த மிரட்டலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

அந்த காதலி, வாலிபருடன் செல்லும்போது தோழியும் உடன் சென்றிருக்கிறார். அப்போது, ஓட்டலில் இருந்த பல்பு பின்னாடி ஸ்பை கேமராவை வைத்து இந்த ஜோடியை தோழி மற்றும் அவருடைய நண்பர் உளவு பார்த்துள்ளனர்.

இதுதவிர, மிரட்டல்காரர்களுக்கு பணம் தர உதவுவது போன்று நடித்தும் இருக்கிறார். அவர்கள் 3 பேரையும் கைது செய்து, போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். “,

Share.
Leave A Reply

Exit mobile version