நாட்டின் பல பகுதிகளில் இன்று (செப்டம்பர் 23, 2025) மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதேநேரம், நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், கடற்பகுதிக்கு விசேட எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். வடமேல் மாகாணத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், மத்திய, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது.
காலி முதல் பொத்துவில் வரையான கடற்பகுதிகளிலும், சிலாபம் முதல் காங்கேசன்துறை வரையான கடற்பகுதிகளிலும் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.
சிலாபம் முதல் காலி வரையான மற்றும் காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.
காலி முதல் பொத்துவில் வரையான மற்றும் சிலாபம் முதல் காங்கேசன்துறை வரையான கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்புடன் காணப்படும். அலைகளின் உயரம் 2.5 – 3.0 மீட்டர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மீனவ மற்றும் கடற்படையினர் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.