இஸ்ரேல் – காசா போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னும், நேற்று (21) காசாவின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் போர் விமானங்கள் காசாவில் குண்டு வீசி தாக்கியதாகவும் அங்கு தரைவழி தாக்குதலும் இடம்பெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

காசாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் இராணுவத்தினர் மீது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஹமாஸ் திடீரென தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு பதிலடியாகவே தாமும் தாக்குதல் மேற்கொண்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இஸ்ரேல் இராணுவத்தின் மீது தாம் எந்த வகையிலும் தாக்குதல் நடத்தவில்லை என ஹமாஸ் மறுத்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் இராணுவ தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் கடுமையான பதிலடி கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

போர் நிறுத்தம் அமுலில் உள்ள சூழ்நிலையில் காசாவில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகை சந்தர்ப்பத்தில் பாலஸ்தீனத்தில் உள்ள அரசு சாரா நிறுவனங்கள் குறித்து உலக நீதிமன்றம் ஆலோசனைக் கருத்தை வெளியிடவுள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்தில் ஐ.நா. சபை, பிற சர்வதேச அமைப்புகள் மற்றும் மூன்றாம் நாடுகளின் இருப்பு மற்றும் செயற்பாடுகள் தொடர்பான இஸ்ரேலின் கடமைகள் குறித்து சர்வதேச நீதிமன்றம் இன்று (22) ஆலோசனைக் கருத்தை வெளியிடவுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

காசாவில் இஸ்ரேல் இராணுவம் மற்றும் ஹமாஸ் இடையே இரண்டு ஆண்டுகளாக நடந்த போர் முடிவுக்கு வந்து கடந்த 10ஆம் திகதி முதல் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது. இதனால் காசாவை விட்டு வெளியேறியிருந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். போர் முடிவுக்கு வந்ததையிட்டு அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இவ்வாறான சூழ்நிலையிலேயே போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி காசாவில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version