சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் மையப்புள்ளியாகத் திகழும் ‘ஹோர்முஸ் நீரிணை’ (Strait of Hormuz) இந்த மோதலால் முடக்கப்பட்டால், அது உலக நாடுகளை மீளமுடியாத ஒரு பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிவிடும். இலங்கையையும் இது கடுமையாக பாதிக்கும்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள இன்றைய காலகட்டத்தில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்படக்கூடிய நேரடி மோதல் என்பது வெறும் இரு நாடுகளுக்கு இடையிலான விவகாரமாக மட்டும் பார்க்கப்பட முடியாது.
இது உலகப் பொருளாதாரத்தின் நரம்பு மண்டலத்தைத் தாக்கக்கூடிய ஒரு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்பதே யதார்த்தமாகும்.
குறிப்பாக, சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் மையப்புள்ளியாகத் திகழும் ‘ஹோர்முஸ் நீரிணை’ (Strait of Hormuz) இந்த மோதலால் முடக்கப்பட்டால், அது உலக நாடுகளை மீளமுடியாத ஒரு பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிவிடும்.
2022ஆம் ஆண்டின் பொருளாதாரப் பின்னடைவில் இருந்து இப்போதுதான் மெல்ல மீண்டு வரும் இலங்கைக்கு, இத்தகைய சூழல் நினைத்துப்பார்க்க முடியாத சவால்களைக் கொண்டுவரும்.
யுத்த மேகங்கள் மற்றும் இராணுவ நகர்வுகள், மத்திய கிழக்கில் போர் அபாயம் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் அண்மைக் காலமாகத் தென்படுகின்றன.

இது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 333 மீற்றர் நீளம் கொண்ட இந்த பிரம்மாண்டக் கப்பல், நூற்றுக்கணக்கான போர் விமானங்களை இயக்கும் வல்லமை கொண்டது.
ஈரானை சுற்றியுள்ள அண்டை நாடுகளில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் இராணுவத் தளங்களுடன், இந்தக் கப்பலின் வருகையும் சேரும்போது, அப்பிராந்தியத்தில் ஏதோ ஒரு பாரிய மோதல் நிகழப்போகிறதா என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பொருளாதார நிபுணர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி, உலகின் 20 வீதமான எண்ணெய்ப் போக்குவரத்து இந்த ஹோர்முஸ் நீரிணை வழியாகவே இடம்பெறுகிறது.
ஏதோவொரு நடவடிக்கை காரணமாக இந்த நீரிணை முடக்கப்பட்டால் நிச்சயம் ஆசிய பொருளாதாரம் பாதிக்கப்படும். இலங்கையின் பொருளாதாரம் மிகப் பெரிய சவால்களை சந்திக்கும் என்று குறிப்பிடுகிறார்.
ஹோர்முஸ் நீரிணையின் கேந்திர முக்கியத்துவம்
இதன் அகலம் சில இடங்களில் வெறும் 33 கிலோமீற்றர்கள் மட்டுமேயாகும். புள்ளிவிபர ரீதியாகப் பார்த்தால், உலகின் மொத்த எண்ணெய் நுகர்வில் சுமார் 20 சதவீதத்துக்கும் அதிகமான கச்சா எண்ணெய் இந்த ஒரு வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.
நாளொன்றுக்கு சராசரியாக 21 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் இதன் ஊடாகப் பயணிக்கிறது. கட்டாரிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் திரவ இயற்கை எரிவாயுவும், சவுதி அரேபியா, ஈராக், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற பெரும் எண்ணெய் உற்பத்தியாளர்களின் பிரதான ஏற்றுமதிப் பாதையும் இதுவேயாகும்.
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலடியாக ஈரான் மேற்கொள்ளக்கூடிய முதல் நடவடிக்கை ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாகும். அல்லது அங்குள்ள போக்குவரத்தைத் தடுக்கும்.
அதேநேரம் அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் இந்த நீரிணையை முடக்கும் சாத்தியம் உள்ளது. இது நடந்தால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உடனடியாக 100 டொலர்களைத் தாண்டி அதிகரிக்கும்.
மாற்று வழிகள் மூலம் இவ்வளவு பெரிய அளவு கச்சா எண்ணெயைக் கொண்டு செல்வது சாத்தியமற்றது. அதிக செலவு மிக்கதாகவும் அமையும். இந்நிலையில் எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது அனைத்து உற்பத்தி மற்றும் போக்குவரத்துத் துறைகளையும் பாதிக்கும் என்பதால், இது உலக நாடுகளின் அத்தியாவசியப் பொருட்களின் விலையை வானை தொடச் செய்யும் என்பதை மறுக்க முடியாது.
இலங்கையைப் பொறுத்தவரை, மத்திய கிழக்கு போர் என்பது ஒரு நேரடித் தாக்குதலை விடவும் மோசமான விளைவுகளை பொருளாதாரத்தில் ஏற்படுத்தும்.
இலங்கை தனது எரிபொருள் தேவையை முழுமையாக இறக்குமதியிலேயே நம்பியுள்ளது. சர்வதேச சந்தையில் விலை அதிகரிக்கும் போது, இலங்கையிலும் பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் கடுமையாக உயரும். இது ஏற்கனவே சுமையைச் சுமந்து கொண்டிருக்கும் போக்குவரத்துத் துறையையும், அனல் மின் நிலையங்கள் மூலமான மின்சார உற்பத்தியையும் முடக்கிவிடும்.
‘இலங்கை சிங்கப்பூரிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்கிறது. அதேபோன்று வேறு சில நாடுகளிடமிருந்தும் இலங்கை எரிபொருளை இறக்குமதி செய்கிறது.
இந்நிலையில் இந்த ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டால் அது நிச்சயமாக இலங்கையின் பொருளாதாரத்தை பாதிக்கும்.
இலங்கை இந்த வழியில் இல்லாமல் வேறு வழியூடாக எரிபொருட்களை இறக்குமதி செய்யும் நிலை ஏற்படும். இது இலங்கையின் பொருளாதாரம் பாதிப்பதற்கு ஏதுவாகும்’ என்று கலாநிதி கணேசமூர்த்தி சுட்டிக்காட்டுகிறார்.
இது இவ்வாறிருக்க மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 16 இலட்சம் இலங்கையர்கள் பணிபுரிகின்றனர்.
போர் மூண்டால் இந்த வருமானம் முற்றாகத் தடைப்படும் என்று சர்வதேச அரசியல் ஆய்வாளர் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டுகிறார்.
மேலும், 16 இலட்சம் மக்களைப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வருவது என்பது மிகப்பெரிய சவாலாகும். இத்தனை பேரை ஏற்றிவரத் தேவையான போக்குவரத்து வசதிகள் இலங்கையிடம் போதிய அளவில் இல்லை. இது ஒரு பாரிய மனிதாபிமான நெருக்கடியைத் தோற்றுவிக்கும்.
இந்தியா தனது எரிபொருள் தேவையில் கிட்டத்தட்ட 40 சதவீதத்தை இந்த நாடுகள் மற்றும் இந்த வழியின் மூலமாகவே பெறுகிறது. ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால் இந்தியாவின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்.
‘‘இந்தியா ரஷ்யாவிடமிருந்து அதிகளவு எரிபொருளை பெறுகிறது. ஆனால் இந்த நாடுகளிடமிருந்தும் ஹோர்முஸ் நீரிணை வழியாக எரிபொருளைப் பெறுகிறது.
எனவே, இந்த ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால் இந்தியா அதிகளவில் ரஷ்யாவிடமிருந்தே எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும்’’ என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி குறிப்பிடுகிறார்.
இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் அது நேரடியாக இலங்கையை பாதிக்கும். ஏனெனில், இலங்கையின் பெரும்பாதி இறக்குமதிகள் இந்தியாவிலிருந்தே நடைபெறுகின்றன.
இந்திய உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு இலங்கையில் பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும். அத்துடன் ஈரானுக்கான இலங்கையின் தேயிலை ஏற்றுமதியும் பாதிக்கப்படும்.
வரலாற்றுப் பாடமும் தற்போதைய நிலையும்
1990களில் ஈராக் – குவைத் மோதலின் போது, அங்கு பணியாற்றிய சுமார் 20,000 இலங்கையர்களை மீட்டு வருவதற்கே இலங்கை அரசு பெரும் போராட்டத்தை எதிர்கொண்டது.
அன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவு. ஆனால் இன்று அந்த எண்ணிக்கை பல இலட்சமாக உயர்ந்துள்ளது. இது 1990களை விட சுமார் 80 மடங்கு அதிக சவாலானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
2022ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வரும் இலங்கையால், மற்றுமொரு அதிர்ச்சியைத் தாங்க முடியாது.
அத்துடன் தித்வா புயலினாலும் இலங்கை மிகப் பெரிய நெருக்கடியை சந்தித்துள்ளது. உலக வங்கியின் அறிக்கையின் படி கிட்டத்தட்ட 4.1 பில்லியன் இழப்பை எதிர்கொண்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் மதிப்பீட்டின் பிரகாரம் 16,000 கிலோ மீற்றர் வீதிகள் 300 கிலோ மீற்றர் ரயில் தண்டவாளங்கள் 7 இலட்சத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள், பாலங்கள், வீடுகள் என்பன சேதமடைந்துள்ளன.
இவ்வாறான நிலையில் இலங்கை மீண்டுவரவும் மீள்கட்டுமானத்தை முன்னெடுக்கவும் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டால் நிச்சயமாக இலங்கையின் பொருளாதாரத்தை மிகப் பெரிய நெருக்கடிக்குள் தள்ளி விடும்.
இலங்கை என்ன செய்ய வேண்டும்?
அதனால் இலங்கை குறைந்தபட்சம் சில மாதங்களுக்குத் தேவையான எரிபொருளைச் சேமித்து வைத்துக் கொள்வது அவசியம்.
எரிசக்தி தேவைக்காக சூரிய மற்றும் காற்று சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களை விரைவாக விரிவுபடுத்துவது அவசியமாகும்.
மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களை அவசர காலத்தில் மீட்பதற்கான முறையான ஒரு பாதுகாப்புத் திட்டத்தை இப்போதே வகுத்துக்கொள்ள வேண்டும்.
எப்படியிருப்பினும் யுத்தங்கள் எப்போதும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைத் தருவதில்லை என்பதே யதார்த்தமாகும். மாறாக அவை புதிய அழிவுகளையும் நீண்டகாலப் பொருளாதாரப் பின்னடைவுகளையும் மட்டுமே ஏற்படுத்தும்.
ஹோர்முஸ் நீரிணை என்பது உலக எரிபொருள் சந்தையின் உயிர்நாடி. அது முடங்குவது என்பது உலகப் பொருளாதாரத்தின் அச்சாணியையே முறிக்கும் செயலாக அமையும். ஏற்கனவே நெருக்கடியிலிருந்து படிப்படியாக மீண்டு வரும் இலங்கை இத்தகைய நெருக்கடியில் இருந்து மீள்வது மிகவும் கடினமாகும்.
எனவே, இப்பிராந்தியத்தில் அமைதி நிலவுவது உலக நாடுகள் ஒவ்வொன்றின் பொருளாதார பாதுகாப்புக்கும் இன்றியமையாதது.
இராஜதந்திர ரீதியிலான பேச்சுகள் மூலம் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுவதே காலத்தின் கட்டாயமாகும். எப்படியிருப்பினும் இலங்கை திட்டமிடல்களுடன் இந்த நிலைமைகளுக்கு தயாராக வேண்டும்.