மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தில் அட்டடன் நகரை அண்மித்து அமைந்துள்ள டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலை. இவ்வைத்தியசாலை மாகாண சுகாதார திணைக்களத்தின் கீழ் இயங்கி வருகின்றது.
குறித்த வைத்தியசாலையில் கடந்த மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அன்றைய தினம் டிக்கோயாவுக்கு அருகில் உள்ள தோட்டமொன்றை வசிப்பிடமாகக்கொண்ட 23 வயது யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது உடல் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
பல மணி நேரம் அவரது உடல் நகரும் நோயாளர் படுக்கையில் வைக்கப்பட்டிருந்தது. அது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் என்பதால் திடீர் மரண விசாரணை அதிகாரி உட்பட வைத்தியசாலை பொலிஸார், இது குறித்து பெற்றோரிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான் வருகை தந்து சடலத்தை பார்வையிட்ட அதேவேளை விசாரணைகள் முடிவுற்றவுடன் சடலமானது பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையின் பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மறுநாள் காலையில் உடற்கூற்று பரிசோதனை செய்வதற்காகவே இந்த ஏற்பாடுகள் நடந்தன. மறுநாள் காலை உடற்கூற்று பரிசோதனைக்குப்பிறகு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டவுடன். இறப்புக்கான காரணத்தை சட்ட வைத்திய அதிகாரி குறிப்பிட்டு நிர்வாகத்திடம் வழங்க மதியத்துக்கு மேல் யுவதியின் உடலை பெற்றோர் பொறுப்பேற்றனர். மறுநாள் யுவதியின் உடல் தோட்ட மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதை வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரியிடம் தெரிவித்துள்ளனர். அவரும் பாதுகாப்பு கமராவை சோதித்துப் பார்த்த போது முதல் நாள் இரவு ஒன்பது மணிக்கும் பின்பு பல தடவைகளும் மேற்படி வைத்தியசாலை ஊழியர்கள் மூவர் பிரேத அறைக்குள் சென்று வருவது அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனால் அம்மூவரினால் யுவதியின் சடலம் துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் வெளியிடப்பட்டது. ஆனால் வைத்தியசாலை நிர்வாகமோ இதை மூடி மறைத்துள்ளதாக தற்போது குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன. அதாவது சம்பவம் இடம்பெற்ற நான்கு நாட்களுக்குப்பிறகே அது குறித்த கதைகள் வைத்தியசாலைக்கு வெளியே கசிந்துள்ளன.
ஆனால் மேற்படி ஊழியர்கள் மூவர் 24 ஆம் திகதி காலை விடுமுறை பெற்று வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.
இதையடுத்து கொதித்தெழுந்த பிரதேச மக்கள் வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.
இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்றும் குறித்த ஊழியர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினர்.
ஆனால் சம்பவ இடத்துக்கு வந்த வைத்தியசாலை பணிப்பாளரோ பாதுகாப்பு கமராவில் குறித்த ஊழியர்கள் பிரேத அறைக்குள் சென்று வருவது குறித்த காட்சிகள் உண்மை என்றும் அது குறித்து உள்ளக விசாரணைகள் நடத்தப்படும் என்றும் கூறினார்.
எனினும் அங்கிருந்த சில அரசியல் பிரமுகர்கள் அதில் தமக்கு நம்பிக்கை இல்லையென்றும் இந்த விவகாரத்தை பொலிஸார் விசாரிக்க வேண்டும் என்றும் கூறினர்.
அதையடுத்து இந்த விவகாரம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்து. பாராளுமன்றத்தின் மலையக அரசியல் பிரமுகர்கள், மற்றும் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் இது குறித் து கண்டனம் வெளியிட்டனர்.
உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும் என சுகாதார அமைச்சரும் பாராளுமன்றில் உறுதியளித்தார்.
ஆனால் இந்த விசாரணைகளில் இழுபறி நிலவுவது குறித்து அறிந்து கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸானது தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்தது. அதன்படி மார்ச் 8 ஆம் திகதி மகளிர் தினமன்று வைத்தியசாலைக்கு முன்பாக அமைதி வழி அஞ்சலி போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானித்தது.
ஆனால் இது பொது மக்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் செயற்பாடாக இருக்கும் என நோர்வூட் பொலிஸார் அட்டன் நீதவான் நீதிமன்றம் ஊடாக அன்றைய தினம் இடம்பெறவிருந்த நிகழ்வுக்கு தடை உத்தரவை வாங்கினர்.
பொலிஸாரும் நடந்த சம்பவத்தை மூடி மறைக்கப்பார்க்கின்றனரா அவர்களும் வைத்தியசாலை நிர்வாகத்துக்கு உதவி புரிகின்றனரா என்ற சந்தேகங்களை அங்கிருந்த அரசியல் பிரமுகர்கள் வெளிப்படுத்தினர்.
இதே வேளை குறித்த ஊழியர்கள் மூவரும் மூன்று நிமிடங்கள் வரையே பிரேத அறைக்குள் இருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.
எனினும் அவர்கள் மூன்று அல்லது நான்கு தடவைகள் பிரேத அறைக்குள் சென்று வந்தததாக வைத்தியசாலைக்குள் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.
பிரேத அறைக்குள் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றிருக்காவிட்டாலும், குறித்த ஊழியர்களுக்கு அங்கு என்ன வேலை என்பதை வைத்தியசாலை நிர்வாகம் விசாரணை செய்திருக்க வேண்டும் என்றும் அலட்சியப்போக்கினால் அவர்கள் வழமையாக தமது பணியை செய்து கொண்டிருக்கின்றனர் என்றும் பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதே வேளை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என்று கூறப்படும் யுவதியின் பெற்றோர்கள் அல்லது உறவினர் தரப்பிலிருந்து இது குறித்து எந்த முறைப்பாடுகளும் வராத காரணத்தினால் அவரது உடலை மீண்டும் தோண்டியெடுத்து மறுபடி உடற்கூற்று பரிசோனைகள்செய்வதில் சட்டச் சிக்கல்கள் உள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் கடந்த வெள்ளிக்கிழமை 6 ஆம் திகதி யுவதியின் பெற்றோர் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளனர்.
தமது மகளின் சடலத்துக்கு வைத்தியசாலையில் ஏதாவது அசம்பாவிதங்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்து உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறித்த ஊழியர்கள் மூவர் மீது விசாரணைகளை நடத்தி உண்மை நிலைமையை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று கோரி வெள்ளிக்கிழமையன்று நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் இவர்கள் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளனர்.
இது குறித்து அங்கு வருகை தந்த யுவதியின் பெற்றோர் கூறுகையில், எமது மகளுக்கு வைத்தியசாலையில் ஏதாவதொரு வகையில் அசம்பாவிதங்கள் நடந்திருக்கலாம் என்று நினைக்கிறோம்.
காரணம் வைத்தியசாலை பணிப்பாளர் ஆர்ப்பாட்டம் நடத்திய இடத்தில் பேசும் போது மூன்று ஊழியர்கள் பிரேத அறைக்குள் சென்று வரும் காட்சிகள் இருப்பதை உறுதிப்படுத்திய அதே வேளை மகளின் உடலில் வித்தியாசங்கள் தென்பட்டதாகவும் கூறினார்.
பாதுகாப்பு கமராவில் அவர்கள் ஒரு நிமிட நேரத்துக்கு குறைவாகவே உள்ளே இருந்ததாகக் கூறுகின்றனர்.
ஆனால் அவர்கள் பல தடவைகள் அங்கு சென்று வந்ததாகக் கூறப்படுகின்றது. எது எப்படியானாலும் அவர்களுக்கு அங்கு என்ன வேலை என்பது குறித்து ஏன் வைத்தியசாலை நிர்வாகம் விசாரிக்கவில்லை?
அவர்களுக்கும் பிரேத அறைக்கும் தொடர்பில்லையென்று தெரிவிக்கின்றனர். அதே வேளை நாங்கள் ஒரு தரப்பினரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு அமைதியாக இருப்பதாக வீணே எம்மீது பழி போடுகின்றனர்.
ஏற்கனவே எமது பிள்ளையை இழந்த சோகத்திலிருந்து நாம் விடுபடவில்லை. எனவே குறித்த மூன்று ஊழியர்களையும் விசாரணை செய்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த மூன்று ஊழியர்களும் நுவரெலியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவிக்கின்றனர்.
நாம் அவர்களை நினைத்தவாறு பணி நீக்கம் செய்யவோ பணியிடை நிறுத்தமோ செய்ய முடியாது. அவர்களும் மனித உரிமை ஆணைக்குழுவை நாடலாம். எனவே விசாரணை அறிக்கை வந்தவுடனேயே எம்மால் நடவடிக்கை எடுக்க முடியும் எனத் தெரிவித்தார்.
இதே வேளை இது குறித்து அட்டன் தலைமை பொலிஸ் காரியாலயத்திடம் தொடர்பு கொண்டு கேட்ட போது பொறுப்பதிகாரி கருத்து வெளியிடுகையில், வைத்தியசாலை விசாரணை அறிக்கைக்காக காத்துக்கொண்டிருக்கின்றோம்.
அதன் பிறகே குறித்த ஊழியர்களை கைது செய்வதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும் என்றார். எனினும் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரம் குறித்த யுவதி பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
யுவதியின் உடல் வைக்கப்பட்டிருந்த பிரேத அறைக்குள் சென்ற ஊழியர்கள் யுவதியின் உடலை வீடியோ பதிவு செய்திருக்கலாம் அல்லது படங்கள் எடுத்திருக்கலாம் என்ற ஊகங்களும் நிலவுகின்றன.
இதே வேளை பிரேத அறைக்கு பொறுப்பாக இருந்தவர் கவனக்குறைவாக இருந்தமையால் அவருக்கெதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவிக்கின்றார்.
எது எப்படியானாலும் குறித்த வைத்தியசாலையில் இது போன்ற சம்பவங்கள் இடம்பெறுதை அறிந்த பொதுமக்கள் கடும் விசனத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் சிகிச்சை பெறுவதற்கு செல்வதற்கே அச்சமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
-சி.சி.என்-