ஈரானுக்கு எதிரான அமெரிக்க – இஸ்ரேலிய யுத்தமானது நீடித்த போருக்கான பரிமாணத்தை அடைந்துள்ளது. அத்தகைய நீட்சி உலகப் போருக்கான அபாயத்தை ஏற்படுத்தலாமென்ற சந்தேகம் வலுவடைந்து வருகிறது.
இப்போது அமெரிக்காவின், மையப்படுத்திய உலக ஒழுங்குக்கான எண்ணம் சிதைவடைகின்றது. மறுபக்கத்தில் இஸ்ரேல் தன்னுடைய நீண்டகால இருப்புக்கான கட்டமைப்புகளை அழிவுக்குள் தவிர்க்க முடியாது எதிர்கொள்கிறது.
அதேபோன்று ஈரான்- – அமெரிக்க இஸ்ரேலிய கூட்டுப் போரானது ஒரு நீண்ட பொருளாதார சுமைக்குள் ஒட்டுமொத்த உலகத்தையும் கொண்டு செல்லத் தயாராகின்றது.
இத்தகைய முடிவுகளோடு தற்போது முடிவுறாத நிலையை கொண்டிருப்பதும் அதன் விளைவுகள் உலகப் பொருளாதார மந்தநிலைக்கு கொண்டு செல்ல வழிவகுத்துள்ளது என்பதையும் ஆராய்வது அவசியம்.
ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல் ஆரம்ப நாட்களில் ஈரானுக்கு ஏற்படுத்திய அழிவுகள் போன்றே இஸ்ரேல் தற்போது அனுபவித்து வருகிறது.
மேற்காசியா என்பது புவிசார் அரசியல் ரீதியிலும் மூலோபாய ரீதியிலும் அதன் தனித்துவம் கொண்டது. அது மட்டுமன்றி, அப்பிராந்தியத்தின் எண்ணெய் வளமானது உலகப் பொருளாதாரத்தைக் கொண்டதாக உணரப்படுகிறது.
மேற்குலகம் மேற்கு ஆசியாவையே தனது சக்திவளப் பொருளாதார வாய்ப்புகளில் மூலோபாய நிலமாகவும், அதேநேரம் ஆக்கிரமிப்பின் மூலமாகவும் நீண்ட வரலாற்றில் காணப்படுகிறது.
1979 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஈரானை தோற்கடிப்பதற்கு அமெரிக்கா மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன.
ஆனால் தற்போதைய போர் மேற்குலகத்துக்கு தலைமை தாங்கும் அமெரிக்காவின் வெளிப்படையான தோல்வியாக அடையாளப்படுத்தப்படுகிறது.
இந்தத் தோல்விக்கு அமெரிக்கா மட்டுமன்றி, இஸ்ரேலும் பிரதான பங்காளியாக காணப்படுகிறது. அதேவேளை ஈரானின் அழிவுகள் அந்நாட்டை மீளமைக்க முடியாத பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கின்றன. அதன் போர் உத்திகள் வெற்றிகரமானதாக இல்லை.
மறுபுறத்தில், அமெரிக்கா இந்தப் போரில் நேரடியாக பங்கேற்காவிட்டாலும் மறைமுகமாக இழப்புகளைச் சந்தித்துள்ளது.
இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் அமெரிக்கா தனியாக எந்தப் போரையும் எதிர்கொண்டதில்லை. மேற்கு ஐரோப்பா இன்றி அல்லது நேட்டோ இன்றி எந்தப் போரையும் அமெரிக்கா நகர்த்தியது கிடையாது. குறிப்பாக வியட்நாம் தந்த பாடத்தை உதாரணமாகக் கொள்ளலாம்.
‘அமெரிக்க- – இஸ்ரேலிய கூட்டு’ என்று இப்போது அழைத்தாலும், பரஸ்பரம் இரு நாடுகளும் வைத்திருக்கும் ஆயுதங்களும் வகுக்கும் உபாயங்களும் ஒன்றாகவே இருந்தன.
நேட்டோ — அமெரிக்க உறவு சிதைக்கப்பட்டமை அல்லது அமெரிக்காவுடனான முரண்பாட்டை நேட்டோ நாடுகள் எதிர்கொண்டமை அமெரிக்க நெருக்கடிக்கு முக்கியமான காரணமாகத் தெரிகிறது. இதனை அமெரிக்க இராணுவ ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
அமெரிக்காவின் தோல்வி ஏறக்குறைய உக்ரைன் போரில் ஆரம்பித்திருந்தது. தனித்து ரஷ்யா மட்டுமன்றி, ஐரோப்பாவும் அமெரிக்காவும் உக்ரைன் போரில் பாரிய சிதைவுகளை அடைந்திருந்தன.
அவ்வகைச் சூழலிலே அமெரிக்கா தனித்து ஒரு போரை ஈரானுடன் எதிர்கொள்கின்ற நிலைக்கு வழிவகுத்தது. அதன் விளைவே அமெரிக்க நெருக்கடிக்கு காரணமாக தெரிகின்றது.
அமெரிக்கா வலுவான இராணுவ பலத்தைக் கொண்ட அரசாக இருந்த போதும், அதன் ஆயுத தளபாடங்களும் தொழில்நுட்ப ரீதியான தாக்குதல் திறன்களும் ஈரானின் பலவீனமான சூழலிலும் ஒரு வெற்றிகரமான முகத்தை சாத்தியப்படுத்தி உள்ளது.
மேலும் இப்போரின் பிரதான சூத்திரதாரியாகவும் ஈரானை அழித்து விட வேண்டும் என்ற எண்ணத்தோடும் செயற்பட்ட இஸ்ரேல் பாரிய இழப்புகளை எதிர்கொள்ளத் தொடங்கி இருக்கின்றது.
இஸ்ரேலின் எல்லைக்குள் 1947 ஆம் ஆண்டிலிருந்து கட்டி எழுப்பப்பட்ட அனைத்து இருப்பையும் அந்நாடு இழந்து வருவதோடு, யூதர்களின் எதிர்கால இருப்பு பற்றிய சந்தேகங்களை நெதன்யாகு தலைமையிலான அரசாங்கம் எதிர்கொள்ளத் தொடங்கி இருக்கிறது.
ஈரானை சிதைத்ததற்கு சமமாக இஸ்ரேல் சிதைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா தன்னுடைய நிலப்பரப்பையும் மக்களையும் நேரடியாக இப்போரில் ஈடுபடுத்தவில்லை. ஆனால் இஸ்ரேல் ஈரானைப் போன்று தமது மக்களையும் நிலப்பரப்பையும் நேரடியாக இழந்து வருகிறது.
ஈரானின் புவிசார் அரசியல் மூலோபாயமும் இஸ்ரேலின் நிலப்பரப்பின் அமைவிடத்தை விட வலிமையானது.
அதனை இப்போது ஈரானின் தொழில்நுட்பம் சார்ந்த ஆயுதங்கள் நிறுவியுள்ளன. ஈரானின் நிலப்பரப்பை துண்டாட இஸ்ரேல் எடுத்த முடிவுகள் காரணமாக அதன் நிலப்பரப்பை முழுமையாகவே அழிவுக்கு உள்ளாக்கும் நிலைக்குள் இஸ்ரேல் தள்ளப்பட்டுள்ளது.
இதனால் போரில் அதிக இழப்புகளையும் இருப்புக்கான உத்தரவாதங்களையும் இழந்த பிரதான நாடாக இஸ்ரேல் மாறி வருகிறது.
இஸ்ரேலின் தொழில்நுட்பங்கள்,ஆயுத தளவாடங்கள், புலனாய்வு கட்டமைப்புகள் சிதைக்கப்பட்டுக் கொண்டிருப்பது அந்த மக்களை பிரதேசத்தில் இருந்து அவர்களது இருப்பிலிருந்தும் வேகமாக இடமாற்றக் கூடியது.
யூதர்கள் நாடோடிகள் என்பதையும் வெள்ளையர்கள் கொலை வெறியர்கள் என்பதையும் இந்தப் போர் வெளிப்படுத்தியுள்ளது.
தற்போது போரில் ஈடுபட்டுள்ள பிரதான நாடுகளும் தமது இருப்பை பொருளாதார வளங்களை இழப்பதோடு, உலக பொருளாதாரத்தை மந்த நிலைக்கு இட்டுச் செல்ல வழிவகுத்துள்ளன.
ஈரானைப் பொறுத்தவரையில் அமெரிக்காவின் வீழ்ச்சி என்பது அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியில் தங்கி இருப்பதாக கருதுகின்றது.
அதனால் போரை நீடிக்கவும் உலக பொருளாதார மாற்றத்தை சாத்தியப்படுத்தவும் வழிவகுப்பதோடு சீன, ரஷ்யா ஒத்துழைப்புக்களும் உதவிகளும் இப்போரில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது ஒரு உலகப் போராக மாறுவதற்கான கட்டத்தை அடைய வேண்டுமானால் சீனா, ரஷ்யா-, வடகொரியா போன்ற நாடுகளின் நேரடி ஈடுபாடு அவசியமானது.
ஆனால் அதற்கான வாய்ப்பை மூன்று நாடுகளும் தவிர்த்துக் கொண்டு ஈரான் மூலமாக அமெரிக்காவினதும் மேற்குலகத்தினதும் பொருளாதாரத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகிறன. இதனால் போரின் போக்கு ஈரானின் கரங்களில் இருப்பதாகவே தெரிகிறது.
எனவே அமெரிக்கா தனது தேசிய நலனில் இருந்து கொண்டு உலக ஒழுங்கை வரைய முன்னெடுத்த போர் அமெரிக்காவுக்கே நெருக்கடியானதாக மாறியுள்ளது.
தொழில்நுட்ப வியூகம் அதனையே ஏற்படுத்தக் கூடியது. தொழில்நுட்ப யுகத்தின் முன்னே இராணுவ உத்திகள் நிரந்தரமானவையாக அமைவதில்லை.
இப்போது அணு ஆயுத போர் நகர்வொன்றுக்கான எத்தனம் காணப்பட்ட போதும், அது ரஷ்ய, சீன போன்ற நாடுகளின் தலையீட்டினாலும் பாகிஸ்தானின் ஈரானுடனான பங்களிப்பினாலும் அதிக நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு இருக்கிறது.
இப்போரில் ஈரானியர்கள் சரணடைவது என்பதற்குப் பதிலாக உலக பொருளாதாரம் சரணடைந்துள்ளது என்றே கூற வேண்டியுள்ளது. பெற்றோலிய வளம் உலகத்துக்கு எவ்வளவு தனித்துவமானது என்பதை இப்போர் அம்பலப்படுத்தி உள்ளது.
பெற்றோலியம் உலக பொருளாதாரத்தை வழிநடத்தக் கூடியது அல்லது திசைப்படுத்தக் கூடியது அல்லது உலக ஒழுங்கை வரையக் கூடியது என்பதை ஈரான் மீதான போர் உணர்த்துகின்றது.
ரி. கணேசலிங்கம்

