இலங்கையில் இன்று முதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறையை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று காலை 6 மணி முதல் இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலை காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்திலேயே இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இரான், அமெரிக்கா, இஸ்ரேல் யுத்தம் ஆரம்பித்த காலப்பகுதியில் இலங்கையில் தீடீரென எரிபொருள் நிரப்ப நிலையங்களில் அதிகளவானோர் வரிசையில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொண்டனர்.

இதனால் களஞ்சியத்தில் இருந்த எரிபொருள் முடிவடைந்ததாக கூறி கடந்த வாரம் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது.

புதிய விலையில் எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டமை காரணமாகவே விலை அதிகரிக்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இன்று முதல் QR முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் QR குறியீடு இன்றி எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது.

www.fuelpass.gov.lk என்ற இணையத்தளத்தினூடாக தமக்குரிய தகவல்களை பதிவேற்றி, QR குறியீட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

முன்னர் QR பதிவு செய்யாதவர்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள், இன்று காலை 6.00 மணி முதல் www.fuelpass.gov.lk இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களுக்கான வாராந்திர எரிபொருள் ஒதுக்கீடு

01.பேருந்து: 60 லிட்டர்

02. மோட்டார் சைக்கிள்கள்: 5 லிட்டர்

03. வேன்கள் : 40 லிட்டர்

மோட்டார் வாகனங்கள் (கார்) : 15 லிட்டர்

04.மோட்டார் லாரிகள்: 200 லிட்டர்

05.காணி வாகனங்கள் : 25 லிட்டர்

06.முச்சக்கர வண்டிகள் (ஆட்டோ) : 15 லிட்டர்

07.விசேட தேவைக்கான வாகனங்கள்: 40 லிட்டர்

08.குவாட்ரி சைக்கிள்கள் (Quadricycle): 5 லிட்டர்

நாட்டின் உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதற்குத் தேவையான வாகனங்களுக்கு, உரிய நிறுவனங்களுடன் இணைந்து விசேட வேலைத்திட்டத்தின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்படும்.

தனியார் பயணிகள் போக்குவரத்து பஸ்களுக்கான எரிபொருள், இலங்கை போக்குவரத்து சபை ஊடாக விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காணப்பட்ட காலப்பகுதியில் எரிபொருளை பெற்றுக் கொள்ள இந்த QR முறை முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

பொருளாதார நெருக்கடி வலுப்பெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து ஆட்சிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் QR முறையில் எரிபொருள் பெற்றுக்கொள்ளும் முறை முடிவுக்கு கொண்டு வரப்பட்டதுடன், தற்போது மீண்டும் QR முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version