ஈரான் அரசாங்கம் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், அதற்கான நிபந்தனைகள் திருப்திகரமாக இல்லாததால் இப்போதைக்கு அமைதி உடன்படிக்கை செய்துகொள்ளப் போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

NBC செய்திச் சேவைக்கு சனிக்கிழமை வழங்கிய 30 நிமிட தொலைபேசி நேர்காணலின் போது அவர் இதனைத் திட்டவட்டமாக அறிவித்தார்.

ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவு மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ட்ரம்ப், “நாங்கள் அத்தீவை முற்றாக அழித்துவிட்டோம், விளையாட்டிற்காக இன்னும் சிலமுறை அங்கு தாக்குதல் நடத்துவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை உற்பத்தித் தளங்கள் இன்னும் இரண்டு நாட்களில் முழுமையாகத் துடைத்தெறியப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் புதிய உயரிய தலைவர் மொஜ்தபா காமினி உயிருடன் இருக்கிறாரா என்பது தொடர்பில் தமக்கு சந்தேகம் உள்ளதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் மசகு எண்ணெய் விலை அதிகரித்து வருவது குறித்து கவலைப்படத் தேவையில்லை எனத் தெரிவித்த ட்ரம்ப், ஹோமுஸ் நீரிணையைப் பாதுகாக்க சீனா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து செயற்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பெற்றோல் விலை ஒரு கலன் 3.66 டொலராக உயர்ந்துள்ள போதிலும், போர் முடிந்தவுடன் அது முன்னெப்போதையும் விடக் குறையும் என அவர் உறுதியளித்துள்ளார்.

உக்ரேன் போர் தொடர்பில் பேசிய ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புட்டினை விட உக்ரேன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உடன்படிக்கை செய்துகொள்வதற்கு மிகவும் கடினமானவராக இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த ரஷ்யா மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியுள்ளதை அவர் நியாயப்படுத்தியுள்ளார்.

ட்ரோன்களை வீழ்த்துவதற்கு உக்ரேன் வழங்க முன்வந்துள்ள உதவியை நிராகரித்த அவர், “எமக்கு ஜெலென்ஸ்கியின் உதவி தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் தேவையற்ற முறையில் ஈரானால் தாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், அவர்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version