மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல், வெறும் பிராந்திய மோதலாக இல்லாமல், பசிபிக் பெருங்கடலின் பாதுகாப்பு வியூகங்களில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, அவுஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் நிலைகொண்டிருந்த பிரித்தானியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான எச்.எம்.எஸ் என்சன் திட்டமிட்ட பராமரிப்புப் பணிகளை முடிக்காமல் திடீரென வெளியேறியுள்ளது.

இந்த ஒரு சிறிய நகர்வு, 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய பாதுகாப்பு கூட்டணியான ‘ஆக்குஸ்’ (AUKUS ) சந்திக்கும் ஆழமான சிக்கல்களை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.

‘ஆக்குஸ்’ (AUKUS) என்பது 2021ஆம் ஆண்டு செபn;டம்பரில் அவுஸ்திரேலியா, பிரித்தானியா, மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட ஒரு முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தமாகும்.

இதன் பின்னணியில் இரண்டு முக்கிய தூண்கள் உள்ளன.

முதலாவதாக அவுஸ்திரேலியாவிற்கு அணுசக்தியால் இயங்கும், ஆனால் அணு ஆயுதமற்ற நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்குவது. இது அவுஸ்திரேலியாவை உலகின் மிக வலிமையான கடற்படைகளில் ஒன்றாக மாற்றும்.

இரண்டாது செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மற்றும் இணைய பாதுகாப்பு போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை இந்த மூன்று நாடுகளும் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதாகும்.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய இலக்கு, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் இராணுவ வளர்ச்சியை சமன் செய்வதும், ஜனநாயக நாடுகளின் ஆதிக்கத்தை உறுதி செய்வதும் ஆகும்.

S 123 HMS Anson Astute class Attack Submarine Royal Navy

இவ்வாறானதொரு நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் இறுதியில், பிரித்தானியாவின் நீர்மூழ்கிக் கப்பலான எச்.எம்.எஸ் என்சன்,  (HMS Anson )அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள தளத்திற்கு ஒரு மாத கால பராமரிப்புப் பணிகளுக்காக வந்தது.

அவுஸ்திரேலிய மண்ணில் ஒரு பிரித்தானிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் பராமரிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாகக் கருதப்பட்டது. ஆனால், மார்ச் மாதம் முதல் வாரத்தில் எவ்வித முன்னறிவிப்புமின்றி எச்.எம்.எஸ் என்சன் (HMS Anson ) கப்பல் அங்கிருந்து புறப்பட்டது. இதற்கான காரணம் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும், தற்போதைய புவிசார் சூழல் தெளிவான பதிலைத் தருகிறது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, உலக எண்ணெய் வர்த்தகத்தின் 20 சதவீதத்தைக் கையாளும் ஹார்முஸ் நீரிணை தற்போது ஒரு போர்க்களமாக மாறியுள்ளது.

மறுபுறம் ஈரானிய கடற்படையின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும், முக்கிய கடல் வழித்தடங்களைப் பாதுகாக்கவும் பிரித்தானியாவுக்கு தனது அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், அவுஸ்திரேலியாவில் பயிற்சியில் இருக்க வேண்டிய கப்பல், அவசரமாகப் போர்க்களம் நோக்கித் திருப்பப்பட்டுள்ளது.

ஆக்குஸ் (AUKUS) ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்கள்

பிரித்தானியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான எச்.எம்.எஸ் என்சனின் இந்த திடீர் இடமாற்றம், ஆக்குஸ் கூட்டணியின் எதிர்காலம் குறித்த பல கசப்பான உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் கடற்படை அளவில் வலிமையானதாகத் தோன்றலாம். ஆனால், பராமரிப்புப் பணிகள், உதிரிபாகத் தட்டுப்பாடு மற்றும் ஊழியர் பற்றாக்குறை காரணமாக, எந்த நேரத்திலும் போருக்குத் தயாராக இருக்கும் கப்பல்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.

பிரித்தானியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களின் வரிசையில் 7 கப்பல்கள் இருந்தாலும், ஒரே நேரத்தில் அட்லாண்டிக், மத்திய தரைக்கடல், மத்திய கிழக்கு மற்றும் பசிபிக் போன்ற பல முனைகளில் செயல்பட அவற்றால் முடியவில்லை.

இந்த பற்றாக்குறை, ஆக்குஸ் திட்டத்தின் கீழ் அவுஸ்திரேலியாவிற்கு அளிக்க வேண்டிய தொடர் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது.

இதேவேளை அவுஸ்திரேலியா தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய பாதுகாப்பு முதலீட்டை (சுமார் 368 பில்லியன் டொலர்கள்) இந்தத் திட்டத்திற்காகச் செய்துள்ளது.

இதற்காக பிரான்சுடனான தனது பழைய நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தையே இரத்து செய்தது. ஆனால், பயிற்சியின் பாதியிலேயே நட்பு நாடுகளின் கப்பல்கள் வெளியேறுவது, அவுஸ்திரேலியா தனது சொந்த அணுசக்தித் திறனை வளர்த்துக்கொள்வதில் தாமதத்தை ஏற்படுத்தும்.

2030-களின் தொடக்கத்தில் தான் ஆஸ்திரேலியாவிற்கு முதல் அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல் கிடைக்கும். அதுவரை அது முழுக்க முழுக்க அமெரிக்க மற்றும் பிரித்தானியா நீர்மூழ்கிக் கப்பல் சுழற்சிப் படையினையே நம்பியிருக்க வேண்டும்.

அமெரிக்காவில் ‘அமெரிக்கா முதலில்’ கொள்கை கொண்ட தலைவர்கள் ஆட்சிக்கு வரும்போது, தங்களின் சொந்த கப்பல்களை அவுஸ்திரேலியாவிற்குத் தருவார்களா என்ற ஐயமும் உள்ளது.

அதேபோல், பிரித்தானியாவின் பொருளாதார சூழல் இவ்வளவு பெரிய இராணுவ முதலீட்டைத் தொடர அனுமதிக்குமா என்பதும் ஒரு சவாலாகும். இருப்பினும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, ஆக்குஸ் ஒப்பந்தத்தின் இரண்டாம் திட்டம் விரிவுபடுத்தப்படலாம் என்ற விவாதங்கள் வலுவடைந்துள்ளன.

ஜப்பான் இந்தத் திட்டத்தில் இணைந்து செயல்பட ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக ‘ஜாவ்கஸ்’ என்றழைக்கப்படும் ஜப்பான்-ஆக்குஸ் கூட்டணி உருவாவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

கனடாவும் தனது ஆர்க்டிக் பிராந்திய பாதுகாப்பிற்காக இதில் இணைய விரும்புகிறது. அணுசக்திக்கு எதிரான கொள்கையைக் கொண்டிருந்தாலும், தொழில்நுட்பப் பகிர்வுக்காக நியூசிலாந்தும் இதில் இணைய வாய்ப்புள்ளது.

இருப்பினும், எச்.எம்.எஸ் என்சன் போன்ற கப்பல்கள் பயிற்சியின் நடுவே வெளியேறுவது, புதிய நாடுகள் இந்தக் கூட்டணியை நம்பி வருவதற்குத் தயக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

ஆக்குஸ் கூட்டணி வெற்றி பெற வேண்டுமானால், அது வெறும் காகித ஒப்பந்தமாக மட்டும் இருக்கக்கூடாது.

பிரித்தானியா மற்றும் அமெரிக்கா தங்களின் நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமானத் திறனை இரட்டிப்பாக்க வேண்டும். அப்போதுதான் தங்களின் பாதுகாப்போடு, அவுஸ்திரேலியாவிற்கான கடப்பாட்டையும் அவர்களால் நிறைவேற்ற முடியும். போர்ச் சூழலில் ஒரு நாட்டின் கப்பல் வெளியேறினால், மற்ற நாடுகளின் கப்பல்கள் அந்த இடத்தை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டும்.

ஈரான் போர் என்பது ஒரு பிராந்திய மோதல் மட்டுமல்ல, அது உலகளாவிய பாதுகாப்பு கூட்டணிகளின் உறுதித்தன்மையைச் சோதிக்கும் ஒரு களமாகும

எச்.எம்.எஸ் என்சன் கப்பலின் அவசர வெளியேற்றம், ஆக்குஸ் பங்காளிகளுக்கு ஒரு தெளிவான செய்தியைச் சொல்லியுள்ளது.

‘தன்னிறைவு பெற்ற பாதுகாப்புத் திறன் மட்டுமே ஒரு நாட்டின் உண்மையான வலிமை’ என்பதாகும். அவுஸ்திரேலியா தனது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறும் வரை, இதுபோன்ற புவிசார் அரசியல் அதிர்வுகளைச் சமாளித்தே தீர வேண்டும்.

உலக நாடுகள் தங்களின் உள்நாட்டு நலன்களைத் தாண்டி, சர்வதேசக் கூட்டணிகளை எப்படி பாதுகாக்கப் போகின்றன என்பதுதான் இனிவரும் காலங்களில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் அமைதியைத் தீர்மானிக்கும்.

Share.
Leave A Reply

Exit mobile version