பெரியவிளான் பகுதியில் நில உரிமை தொடர்பான வழக்கொன்று மல்லாகம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழலில், சர்ச்சைக்குரிய அந்த நிலத்தைத் துப்புரவு செய்யும் பணியில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தனது பணியாளர்களுடன் ஈடுபட்டுள்ளார். இதன்போது, அங்கு வந்த இரு பெண்கள் அந்த நிலத்தின் ஒரு பகுதி தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தர்க்கம் முற்றிய நிலையில், எம்.பி. அர்ச்சுனா தனது பாதுகாப்பிற்காக வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து அந்தப் பெண்களை நோக்கி நீட்டி மிரட்டியதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில், விசாரணைக்காக அழைக்கப்பட்ட அர்ச்சுனா இராமநாதன் நேற்று கைது செய்யப்பட்டார். இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் ஏப்ரல் 29-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version