தமிழ்நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி முதல் மே 2-ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மே 2-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சராசரியை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று, வேலூரில் அதிகபட்சமாக 41.5 டிகிரி செல்சியஸ் வெப்பமும், அரியலூரில் குறைந்தபட்சமாக 24.2 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது. மலைப் பிரதேசங்களில் பொருத்தவரை கொடைக்கானலில் குறைந்தபட்சமாக 11.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
அதிக உயர்ந்தபட்ச வெப்பத்துடன் அதிக ஈரப்பதம் இருப்பதால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அசௌகரியமான வானிலை நிலவ வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 30-ஆம் தேதி அன்று நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போல் மே 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

