இலங்கை 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த இரண்டு வீரர்கள், பெண்களை ரகசியமாக காணொளி எடுத்த குற்றச்சாட்டின் கீழ் நாரஹேன்பிட்ட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாரஹேன்பிட்ட பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் பெண் மருத்துவர்கள் தங்கியிருந்துள்ளனர். இதன்போது, அவர்கள் குளிப்பதைத் தங்களது அலைபேசி மூலம் யாரோ ரகசியமாகப் படம் பிடிப்பதாக அந்தப் பெண் மருத்துவர்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

விசாரணையில், குறித்த கிரிக்கெட் வீரர்கள் பெண்களை மட்டுமன்றி ஆண்களையும் இவ்வாறு ரகசியமாகப் படம் பிடித்துள்ளமை தெரியவந்துள்ளது. இந்த காணொளிகள் இணையத்தில் அல்லது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளனவா என்பது குறித்து பொலிஸார் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட இரண்டு வீரர்களும் அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, அவர்களை தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான தனிப்பட்ட பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது. தேசிய மட்டத்திலான வீரர்கள் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளமை விளையாட்டுத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version