தாய்லாந்திலிருந்து சுமார் 110 கிலோ எடை கொண்ட ‘குஷ்’ மற்றும் ‘ஹெஷ்’ போதைப்பொருட்களைக் கடத்தி வந்த குற்றச்சாட்டில் 22 இளம்பிக்குகள் கைது செய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாபெரும் போதைப்பொருள் வலையமைப்பின் பின்னணியில் தம்மரத்ன மற்றும் புண்ணியரத்ன ஆகிய இரு தேரர்கள் பிரதான சூத்திரதாரிகளாகச் செயற்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

தற்போது தாய்லாந்தில் தங்கியிருக்கும் இவர்களைக் கைது செய்வதற்காக, குற்றப்புலனாய்வுப் பிரிவின் ஊடாக சர்வதேச பொலிஸாரின் (Interpol) உதவியை நாட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்கிடையில், கைதான 22 இளம்பிக்குகளின் இரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்ததில், 19 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியமை மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த வலையமைப்பை ஒருங்கிணைத்ததாகக் கூறப்படும் அங்குணகொலபெலஸ்ஸ அமிதானந்த தேரர் மற்றும் சந்திரகுமார் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காலியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரே இவர்களுக்கான விமானப் பயணச்சீட்டு மற்றும் ஏனைய செலவுகளுக்கு அனுசரணை வழங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

கொழும்பில் தலைமறைவாக உள்ள அந்த வர்த்தகரைக் கைது செய்யப் பொலிஸார் வலைவீசியுள்ளனர். அத்துடன், கடந்த மார்ச் மாதம் இதேபோன்று போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கருதப்படும் மேலும் 12 தேரர்களை அடையாளம் காணும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version