1984, நவம்பர் இரவு 10:45 மணி. எம்.ஜி.ஆரை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவுக்குப் புறப்பட்டது
சிறப்பு விமானம். எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள், அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
நியூயார்க் நகர் புரூக்ளின் மருத்துவமனையில் எம்.ஜி.ஆருக்குச் சிறப்பு சிகிச்சைகள் தொடங்கின!
இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து, உடனடியாகப் பிரதமர் பதவியை ஏற்றிருந்தார் ராஜீவ் காந்தி.
மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசின் ஆயுள் காலம் முடிவதற்கு மூன்று மாதங்கள் பாக்கி இருந்தன.
இந்திராவின் மரணத்தால் மக்களிடம் ஏற்பட்டிருந்த அனுதாப அலையைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த காங்கிரஸ், உடனடியாக ஆட்சியைக் கலைத்துவிட்டுத் தேர்தலைச் சந்திக்க விரும்பியது.
அதேபோல, எம்.ஜி.ஆர் உடல்நலம் குன்றியிருப்பதால் ஏற்பட்ட அனுதாப அலையைப் பயன்படுத்திக்கொள்ள அ.தி.மு.க விரும்பியது.
1984, நவம்பர் 15-ம் நாள் தமிழக சட்டமன்றம் கலைக்கப்பட்டது. தமிழகத்தைத் தேர்தல் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

1980 மக்களவைத் தேர்தலில், தி.மு.க-வுடன் கூட்டணிவைத்த காங்கிரஸ், இப்போது அ.தி.மு.க பக்கம் சாய்ந்தது.
சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க 155 தொகுதிகளிலும், காங்கிரஸ் 73 தொகுதிகளிலும், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 26 இடங்களிலும், அ.தி.மு.க 13 இடங்களிலும் போட்டியிடுவதென முடிவானது.
தி.மு.க கூட்டணியில் சி.பி.எம்., சி.பி.ஐ., ஜனதா கட்சி, முஸ்லிம் லீக், தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ், நாராயணசாமி நாயுடு தலைமையிலான உழவர் உழைப்பாளர் கட்சி, தமிழ்நாடு ஃபார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன.
167 சட்டமன்றத் தொகுதிகளிலும், 27 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட தி.மு.க முடிவுசெய்தது.
ஆண்டிபட்டியில் எம்.ஜி.ஆர் போட்டியிடுவார்’ என்ற அறிவிப்பு, அ.தி.மு.க தொண்டர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.
முந்தைய தேர்தலில் (1980) ஆண்டிபட்டியில் அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். அவருக்கு இந்த முறை வாய்ப்பு தரப்படவில்லை.
ஆகவே, ‘எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர் புரட்சிக் கழகம்’ என்ற புதிய கட்சியைத் தொடங்கி, சேடபட்டி தொகுதியில் அவர் போட்டியிட்டார்.
சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்த கருணாநிதி, அந்தத் தேர்தலில் போட்டியிட வில்லை. தி.மு.க-வுக்கு இது ஒரு சங்கடமான தேர்தல். தாய்நாட்டுக்காகத் தன் உயிரையே தியாகம் செய்த ஓர் அன்னையின் மகனான ராஜீவ் காந்தியை உடனடியாக எப்படி விமர்சிப்பது…
அமெரிக்காவில் எம்.ஜி.ஆர் சிகிச்சை பெற்றுவரும் நேரத்தில், அவரை எப்படி எதிர்ப்பது என்ற சிக்கல் கருணாநிதிக்கு இருந்தது.
எம்.ஜி.ஆரின் மறுபிறவி!
அ.தி.மு.க-வினரோ, உற்சாகமாகக் களமிறங்கினர். அமெரிக்காவில் எம்.ஜி.ஆர் எப்படி இருக்கிறார்… மருத்துவமனையில் என்ன செய்கிறார் என்பதையெல்லாம் புகைப்படங்களாகவும், காணொளியாகவும் பதிவுசெய்து திரையரங்குகளிலும், தொலைக்காட்சியிலும், பொதுக்கூட்டங்களிலும் திரையிட்டுக் காண்பித்தனர்.
எம்.ஜி.ஆர் சாப்பிடுவதுபோலவும், இரட்டை விரலைக் காண்பிப்பதுபோலவும் தமிழ்நாடு முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
இந்திரா காந்தி ரத்தவெள்ளத்தில் கிடப்பது போன்ற படத்துடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. ‘நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற…’ என்ற ‘இதயக்கனி’ படப் பாடல், பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது.
தமிழ்நாட்டில் தேர்தல் களம் பரபரப்படைந்திருந்த நேரத்தில், அமெரிக்காவில் எம்.ஜி.ஆருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.
1984 டிசம்பர் 19-ம் தேதி, மாற்றுச் சிறுநீரக அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. எம்.ஜி.ஆர் மறுபிறவி எடுத்தார்.
மக்களவை, சட்டமன்றத் தேர்தல்கள் டிசம்பர் 24-ம் தேதி நடைபெற்றன. காங்கிரஸ் – அ.தி.மு.க கூட்டணி எளிதாக வெற்றிபெற்றது.
132 சட்டமன்றத் தொகுதிகளையும், 12 மக்களவைத் தொகுதிகளையும் அ.தி.மு.க கைப்பற்றியது.
61 சட்டமன்றத் தொகுதிகளிலும், 25 மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றிபெற்றது. தி.மு.க 24 சட்டமன்றத் தொகுதிகளிலும், இரண்டு மக்களவைத் தொகுதிகளிலும் ஜெயித்தது.
பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை தி.மு.க இழந்தது. அந்த இடத்தை காங்கிரஸ் பிடித்தது.
தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பல நாள்கள் ஆகியும், அ.தி.மு.க-வால் அமைச்சரவை அமைக்க முடியவில்லை.
ஒருவழியாக, 1985, பிப்ரவரி 4-ம் தேதி அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வந்த எம்.ஜி.ஆர்., பிப்ரவரி 10-ம் தேதி முதல்வராகப் பதவியேற்றார்.
சட்ட மேலவை கலைப்பு!
தமிழக சட்டமன்றத்தில் ‘மேலவை’ இருந்தது. அதன் தலைவராக ம.பொ.சி இருந்தார். எதிர்க்கட்சித் தலைவராக கருணாநிதி இருந்தார்.
1986, ஏப்ரலில் மூன்று எம்.எல்.சி-க்களின் பதவிக்காலம் முடிவடைந்தது. காலியான இடங்களில், நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா, எம்.ஜி.ஆரின் வழக்கறிஞர் என்.சி.ராகவாச்சாரி, ஜி.சுவாமிநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் திவால் நோட்டீஸ் கொடுத்தவர் வெண்ணிற ஆடை நிர்மலா. ஆகவே, `திவால் நோட்டீஸ் கொடுத்த அவரால், சட்டப்படி எம்.எல்.சி ஆக முடியாது’ என்று நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.
திவால் ரத்தாக வேண்டுமென்றால், 10 லட்சம் ரூபாய் கடன் பாக்கியை நிர்மலா கட்ட வேண்டும். நீதிமன்றத்தில் உடனடியாக 10 லட்சம் ரூபாய் கட்டப்பட்டது.
ஒரே நாளில் 10 லட்சம் ரூபாயை நிர்மலா எப்படிப் புரட்டினார்… அவருக்கு 10 லட்சம் ரூபாயைக் கொடுத்தது யார்?’ என்ற கேள்விகள் எழுந்தன.
அவ்வளவு பணத்தைக் கொடுத்தவர் யார் என்ற ரகசியத்தை வெளியே சொல்ல முடியாத நிர்மலா, எம்.எல்.சி பதவியை ராஜினாமா செய்தார்.
அந்த விவகாரத்துக்குப் பிறகு, சட்டமன்ற மேலவையைக் கலைப்பது என்று அ.தி.மு.க முடிவெடுத்தது. மேலவை உறுப்பினரான கருணாநிதி, ‘நான் மேல் சபையில் எதிர்க்கட்சித் தலைவராக வந்துவிட்டேன் என்பதால்தான், மேலவையைக் கலைக்கிறார்கள்’ என்று எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும், மேலவை கலைக்கப்பட்டுவிட்டது.
ராஜீவ் காந்தியும் ராமாயணமும்!
மக்களவைத் தேர்தலில் 415 இடங்களைக் கைப்பற்றி, அசுர பலத்துடன் ஆட்சியதிகாரத்தில் அமர்ந்தது காங்கிரஸ் கட்சி. ஜனதா கட்சிக்கு 10 இடங்களும், சி.பி.எம் கட்சிக்கு 22 இடங்களும், சி.பி.ஐ-க்கு ஆறு இடங்களும் கிடைத்தன.
பாரதிய ஜன சங்கம், பா.ஜ.க-வாக புதிய அவதாரம் எடுத்த பிறகு, இரண்டு எம்.பி-க்களை இந்தத் தேர்தலில் பெற்றது.
இந்தியாவின் செல்வாக்கு மிக்க இளம் அரசியல் தலைவராக உருவெடுத்த பிரதமர் ராஜீவ் காந்தி, இந்தியாவை அறிந்துகொள்ளும் நோக்கத்துடன் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்தார்.
அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தூர்தர்ஷன் மட்டுமே அப்போது இருந்தது. பிரதமர் ராஜீவ் காந்தியின் சுற்றுப்பயணம் உள்ளிட்ட செய்திகள் தூர்தர்ஷனில் முக்கிய இடம்பிடித்தன.
அந்தக் காலகட்டத்தில், உத்தரப்பிரதேசம் அயோத்தியில், ‘ராமஜென்ம பூமி’ மீட்பு இயக்கச் செயல்பாடுகளை விஷ்வ ஹிந்து பரிஷத் தீவிரப்படுத்தியிருந்தது.
அயோத்தியில் பல்வேறு கோயில்களில் இருந்த சாமியார்களை ஒருங்கிணைத்து, ஏராளமான பொதுக்கூட்டங்களையும் ஊர்வலங்களையும் வி.ஹெச்.பி நடத்திவந்தது.
அந்தக் கூட்டங்களில், இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புக் கருத்துகளைப் பேசிவந்தனர்.
பிரதமர் ராஜீவ் காந்தியின் முகத்தை அதிகமாகச் செய்திகளில் காண்பித்துவந்த தூர்தர்ஷன் 1987, ஜனவரியில், ‘ராமாயணம்’ என்ற மெகா தொடரை ஒளிபரப்பத் தொடங்கியது. காதல், தியாகம், வீரம், பழிக்குப் பழி போன்ற அம்சங்களைக்கொண்ட ‘ராமாயணம்’ என்ற இதிகாசம், பிரமிக்கத்தக்க வகையில் காட்சிப்படுத்தப்பட்டது.
வடஇந்தியாவில் பெரும் தாக்கத்தை ‘ராமாயணம்’ தொடர் ஏற்படுத்தியது. ஞாயிறு தோறும் அதிகாலையில் எழுந்து நீராடி, வழிபாடுகளை முடித்துவிட்டு, ராமாயணம் ஒளிபரப்பு தொடங்குவதற்கு முன்பு, தொலைக்காட்சிப் பெட்டிக்கு மாலை அணிவித்து, சந்தனம் வைக்கும் வழக்கத்தை வடஇந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் காண முடிந்தது.
இந்துக்களின் முதன்மையான கடவுளாக ராமரை முன்னிறுத்துவதற்கான வேலையைத் தெரிந்தோ, தெரியாமலோ ‘ராமாயணம்’ தொடர் செய்துவந்தது. வி.ஹெச்.பி-யின் ராமஜென்ம பூமி மீட்பு பிரசாரத்துக்கும், அந்த மெகா தொடர் பலம் சேர்த்துக் கொண்டிருந்தது.
ஸ்தம்பித்த தமிழகம்!
1987, டிசம்பர் 22-ம் தேதி சென்னைக்கு வந்தார் பிரதமர் ராஜீவ் காந்தி. கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சிலைத் திறப்பு விழாவில், பிரதமர் ராஜீவ் காந்தியுடன் முதல்வர் எம்.ஜி.ஆரும் பங்கேற்றார்.
அமெரிக்காவிலிருந்து திரும்பிய எம்.ஜி.ஆரிடம், முன்பிருந்த சுறுசுறுப்பு இல்லை. அவர், மிகவும் தளர்ந்து காணப்பட்டார்.
நேரு சிலைத் திறப்பு நிகழ்ச்சியில் இந்திரா காந்தியைப் புகழ்ந்து பேசினார் எம்.ஜி.ஆர். அதுதான் அவரது கடைசி மேடைப் பேச்சு. மறுநாள் (டிச. 23), எம்.ஜி.ஆரின் உடல்நிலை மோசமடைந்தது.
டிசம்பர் 24-ம் தேதி, `எம்.ஜி.ஆர் இறந்துவிட்டார்’ என்ற செய்தி மாநிலம் முழுவதும் தீயாகப் பரவியது. ஒட்டுமொத்தத் தமிழகம் ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப்போனது.
தன்னுடைய 40 ஆண்டுக்கால நண்பரின் உடலைக் காண, ராமாவரம் தோட்டத்தை நோக்கி விரைந்தார் தி.மு.க தலைவர் கருணாநிதி. அப்போது.
.(இன்னும் அறிவோம்)