இந்தியாவை ஆட்சி செய்யும் பா.ஜ.க.வைச்சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான பிரமுகர்கள் ஐவர், கடந்தவாரம் இலங்கைக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த, “மோடி ஆட்சியின் கீழ் இந்தியா” என்ற தலைப்பிலான கருத்தரங்கில் உரையாற்றுவதற்கே அவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜ பக் ஷ ஆகியோரையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினர்.
சுப்பிரமணியன் சுவாமி தலைமையில் கொழும்பு வந்திருந்த பா.ஜ.க. பிரமுகர்கள் எவரும், இந்திய மத்திய அரசாங்கத்தில் பதவி வகிப்பவர்களல்ல.
ஆனால், முன்னர் அமைச்சர்களாகவோ, நாடாளுமன்ற உறுப்பினர்களாகவோ அல்லது கொள்கை வகுப்பாளர்களாகவோ பணியாற்றியவர்கள்.
அதேவேளை, தற்போதைய பா.ஜ.க. அரசின் கொள்கை வகுப்பில் இவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் அல்லது ஆதிக்கம் செலுத்த முனைகிறார்கள் என்பது முக்கியமான விடயம்.
தமிழ்நாட்டில் “அரசியல் கோமாளி” என்று வர்ணிக்கப்படும் சுப்பிரமணியன் சுவாமி, இதற்கு முன்னரும், அரசாங்கத்தின் விருந்தாளியாக பலமுறை இலங்கைக்கு வந்து சென்றிருக்கிறார்.
ஆனால், அப்போது அவரது வருகைக்கும், கருத்துக்கும் கிடைத்திருந்த முக்கியத்துவத்தை விட, இப்போது அவரது பயணத்தினதும், கருத்துக்களினதும் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.
முன்னர் இரண்டு முறை, இராணுவம் நடத்திய போர் அனுபவக் கருத்தரங்குகளுக்காக அவர் கொழும்பு வந்திருந்தார்.
அதைவிட, ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரும் முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டிருந்த போது, அதனைத் தடுப்பது குறித்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடன் ஆலோசனை நடத்துவதற்காகவும் கொழும்பு வந்திருந்தார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தடுக்க, சுப்பிரமணியன் சுவாமி முயற்சித்த போதும், அது பயனளிக்கவில்லை.
தாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் சார்பில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துடன் இதுபற்றிக் கலந்துரையாடியதை சுப்பிரமணியன் சுவாமியே வெளிப்படுத்தியிருந்தார்.
இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றும் ஒருவராக, தன்னைத் தெளிவாக நிலைப்படுத்தியுள்ள சுப்பிரமணியன் சுவாமி, இப்போது பா.ஜ.க.வில் இணைந்து கொண்டுவிட்ட நிலையில், அவரது பயணத்துக்கும் கருத்துகளுக்கும் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.
இது சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து என்பதற்காக அல்ல. அவர் இருக்கும் இடமே இந்த முக்கியத்துவத்தை அளித்துள்ளது. அதுவும், நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசாங்கம் பொறுப்பேற்று இரண்டு மாதங்களே ஆகியுள்ள நிலையில், இலங்கை தொடர்பான அதன் நிலைப்பாடு என்னவென்ற கேள்வி அதிகமாகவே இருந்து வருகிறது.
இந்தச் சந்தர்ப்பத்தில் தான், பா.ஜ.க.வின் மூலோபாய செயற்பாட்டுக் குழுவின் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி போன்றவர்கள், கடந்தவாரம் கொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் பா.ஜ.க.வின் வெளிவிவகாரக் கொள்கையில் செல்வாக்குச் செலுத்தக் கூடிய நிலையில் இருந்தாலும், அதனைத் தீர்மானிக்கும் நிலையில் இருப்பவர்களல்ல. ஆனால், இவர்கள் கொழும்பில் வெளியிட்ட கருத்துக்களை மேலோட்டமாகப் பார்த்தால், இந்திய மத்திய அரசின் கொள்கையைத் தாமே அமுல் படுத்தும் அதிகாரம் கொண்டவர்கள் போலவே கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள்.
அதேவேளை, கொழும்பில் சுப்பிரமணியன் சுவாமி மற்றும் அவரது குழுவினர் வெளியிட்ட கருத்துக்கள் இலங்கை அரசாங்கத்துக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசாங்கத்தின் ஏற்பாட்டில் வந்தவர்கள், அதைத் தானே செய்வார்கள்.
கொழும்புக்குப் புறப்பட முன்னர், ஹைதராபாத்தில் பி.ரி.ஐ. செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தம்மை அழைத்துள்ளதாகவும், தாம் அங்கு செல்வதாகவும், கூறியிருந்தார் சுப்பிரமணியன் சுவாமி.
எனவே, மோடி அரசாங்கம் இலங்கையுடனான தனது உறவுகள் எப்படியிருக்கும் என்பது குறித்து விளக்கமளிப்பதற்காக, பா.ஜ.க. குழுவை கொழும்புக்கு அனுப்பி வைத்திருக்கவில்லை.
அந்தக் குழுவை இலங்கை அரசாங்கமே அழைத்து வந்திருக்கிறது.
நரேந்திர மோடி அரசாங்கம், கொழும்புக்கு நெருக்கடிகளைக் கொடுக்கும் என்ற கருத்து, வலுப்பெற்றிருந்த சூழலில், இலங்கை அரசாங்கத்துக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் தான் இந்தக் கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டது. அதனை சுப்பிரமணியன் சுவாமி குழு திறமையாகவே செய்து முடித்திருக்கிறது.
சுப்பிரமணியன் சுவாமியும், அவரது குழுவினரும் இங்கு வெளியிட்ட கருத்துக்கள், பெரும்பாலும், சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச போன்ற இலங்கை அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கடும்போக்கு அமைச்சர்களின் கருத்துக்களுடன் ஒத்துப் போகின்றவையாக இருந்ததை அவதானிக்கலாம்.
குறிப்பாக, ஐ.நா. விவகாரத்தில் செய்யப்பட்ட மோசமான விமர்சனங்களைச் சுட்டிக்காட்டலாம்.
ஒரு பக்கத்தில் ஐ.நாவை நேட்டோவின் ஒரு கருவியாக மாறிவிட்டதாக பா.ஜ.க. குழுவில் இடம்பெற்றிருந்தவர்கள் கடுமையாக விமர்சித்திருந்தாலும், இன்னொரு பக்கத்தில், அதே ஐ.நாவின் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர் பதவியைப் பெறுவதற்கு சீனாவுடன் இந்தியா கைகோர்க்கத் தொடங்கியுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதுபோலவே, இந்திய அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை விடயத்தில், குறிப்பாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு விடயத்தில், பா.ஜ.க. குழுவினர் எடுத்துக் கூறிய சில விடயங்கள் முரண்பாடுகளைக் கொண்டவையாக இருந்தன என்பதையும் சுட்டிக்காட்டலாம்.
இலங்கை – – இந்திய உறவுகளிலிருந்து தமிழ்நாட்டையும், தமிழர் பிரச்சினையையும் துண்டிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்ட கருத்து, அதில் முக்கியமானது.
இது அவரது நீண்டகாலக் கருத்தாகவே – கனவாகவே இருந்து வருகிறது.
இது நிச்சயம், அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்குமே தவிர, இந்திய அரசின் கருத்தாக இருக்க முடியாது. ஏனென்றால், தமிழ்நாட்டையும், தமிழர் பிரச்சினையையும், புறமொதுக்கிக் கொண்டு இலங்கையுடன் இந்தியாவினால் உறவுகளைப் பேண முடியாது. அது யதார்த்தத்துக்குப் புறம்பானது.
ஏனென்றால், இருநாடுகளிலும் “தமிழ்” என்ற ஒரே மொழியைப் பேசும் ஏழு கோடி வரையிலான மக்கள் இருக்கின்றனர், இருநாடுகளிலும், வாழும் மக்களுக்கு இடையில் பூர்வீகத் தொடர்புகளும், கலாசார உறவுகளும் இருக்கின்றன.
இவையெல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு, இலங்கையுடன் உறவை வைத்துக் கொள்வதற்கான ஒரு பொறிமுறையை புதுடில்லி உருவாக்கினால், அது இந்தியாவின் நலனுக்கே ஆபத்தானது.
தமிழ்நாடும் இந்தியாவின் ஒரு பகுதி என்பதையும், அதற்கு இந்தியாவின் நலனில் அக்கறை உள்ளது என்பதையும், இந்தியாவின் அணுகுமுறையைத் தீர்மானிக்கின்ற பொறுப்பு அதற்கும் உள்ளது என்பதையும் சுப்பிரமணியன் சுவாமி போன்றவர்கள் மறந்து விட்டனர்.
அதேவேளை, தமிழ்நாட்டின் நலன் மற்றும் விருப்பங்களை மதிக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பும் கூட.
இந்த இரண்டு தரப்புக்கும் பொதுவான இந்த உறவைப் புறம் தள்ளிக் கொண்டு, இலங்கையுடன் கைகோர்க்க புதுடில்லி முனைந்தால், அது இந்தியாவின் பூகோள ஒருமைப்பாட்டுக்கான சவாலாகவே மாறும்.
சுப்பிரமணியன் சுவாமி சொல்வது போலவே, தமிழ்நாட்டினதும், தமிழர் பிரச்சினையையும் துண்டித்து விட்டு, இலங்கையுடன் இந்தியா உறவு கொள்ள முடியுமாக இருந்தால், காஷ்மீர் விவகாரத்தைத் துண்டித்து விட்டு பாகிஸ்தானுடன் உறவு கொள்ள முடியுமா? என்ற கேள்வி எழும். ஆனால் அப்படியொரு யோசனையை சுப்பிரமணியன் சுவாமியால் கூறமுடியாது.
தமிழ்நாட்டின் நலனை இந்தியாவினால் எவ்வாறு புறக்கணிக்க முடியாதோ, அதுபோலவே இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவுக்கு உள்ள பொறுப்பையும் தட்டிக்கழிக்க முடியாது.
இந்த இரண்டையும் புறக்கணித்து விட்டு, புதுடில்லி கொழும்புடன் உறவு கொள்ளும் முடிவை எடுக்குமானால், அதுபோன்ற வரலாற்றுத் தவறு வேறொன்றும் இருக்க முடியாது.
ஆனால், அந்த தவறைச் செய்வதற்கே சுப்பிரமணியன் சுவாமி போன்றவர்கள் புதுடில்லியைத் தூண்டுகின்றனர் என்பதில் சந்தேகமில்லை.
இது கொழும்பிலுள்ள ஆட்சியாளர்களுக்கு இனிப்பான கருத்துக்களாக இருக்கலாம். ஆனால், புதுடில்லியில் உள்ளவர்களுக்கு அவ்வாறு இருக்க முடியாது.
புதுடில்லியைப் பொறுத்தவரையில், வெளிவிவகாரக் கொள்கையில் மாநிலங்கள் தலையிடுவதை விரும்பவில்லை என்று தெரிகிறது.
இது மத்திய அரசுக்கு கிடைத்துள்ள பெரும்பான்மை பலத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ள முடிவு மட்டுமேயாகும்.
அதேவேளை, தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு பெற்ற மாநில அரசாங்கத்தின் கருத்துப் புறக்கணிக்கப்படும் போது அது, இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்துக்கு உகந்ததாக இருக்காது.
இலங்கையுடனான உறவைப் பலப்படுத்துவதன் மூலம், இந்தியாவின் நலனை உறுதிப்படுத்த முனையும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் சிலர், இன்னொரு பக்கத்தில், இந்தியாவின் உள்நாட்டு மக்களினதும், மாநிலங்களினதும் நலனைப் புறக்கணிக்க வழி வகுக்கின்றனர்.
நரேந்திரமோடி அரசாங்கம் பதவியேற்று இப்போது தான் இரண்டு மாதங்களாகியுள்ள நிலையில், சிக்கல் நிறைந்த இந்த விவகாரத்தில் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
ஆனால், அதற்குள், சுப்பிரமணியன் சுவாமி போன்ற தமக்குத் தாளம் போடக் கூடியவர்களை வைத்து, புதுடில்லியில் சாதகமான மாற்றம் ஒன்று நிகழ்ந்திருப்பதாக காட்ட முனைந்திருக்கிறது அரசாங்கம்.
இது சிங்களத் தேசியவாதிகளுக்கு உற்சா கத்தையும், தமிழர்களுக்குச் சோர்வையும் கொடுத்திருக்கலாம்.
ஆனால், சுப்பிரமணியன் சுவாமியோ அவரது சகபாடிகளோ சொல்வது போலவே இந்தியா நடந்து கொள்ளும் முடிவுகளை எடுக்கும் என்று கூறுவதற்கில்லை.
ஏனென்றால், இவர்கள் பா.ஜ.க.வின் கொள்கை வகுப்பு நிலையில் இருந் தாலும், முடிவுகளை எடுக்கும் நிறைவேற்று அதிகாரம் இவர்களிடம் இல்லை.
(சத்ரியன்)