இலங்கையில் சீனாவின் இராணுவப் பிரசன்னம் ஏதும் இல்லை என்று இந்தியாவிடம் மீண்டும் தலையில் அடித்துச் சத்தியம் செய்ய வேண்டிய நிலை இலங்கைக்கு உருவாகியிருக்கிறது.
சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங்கின் கொழும்பு பயணத்துக்கு முன்னதாக, கொழும்புத் துறைமுகத்தில் சீனக் கடற்படையின் நீர் மூழ்கிக் கப்பலொன்று தரித்து நின்ற விவகாரம் தான், இந்த நிலைமைக்கு முக்கியமான காரணம்.
சீன நீர்மூழ்கிக் கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்த விபரத்தை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தாமல் மறைத்துக் கொண்டதால் தான் இந்தச் சிக்கல் இந்தளவுக்குப் பூதாகர வடிவெடுத்தது.
கடந்தவாரம், இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.கே. டோவனின் அழைப்பின் பேரில் இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா புதுடில்லிக்குச் சென்றிருந்தார்.
அவர் புதுடில்லியில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லி, இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.கே.டோவன் ஆகியோரைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது சீன நீர்மூழ்கிக் கப்பல் கொழும்புத் துறைமுகம் வந்திருந்ததை ஒப்புக் கொண்டார்.
சீன கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் கொழும்புத் துறைமுகம் வந்ததை இலங்கை அரசாங்கத்தின் சார்பாக முதல் முறையாக ஒப்புக்கொண்டவர் அவர்தான்.
கடந்த செப்டெம்பர் 7ஆம் திகதி தொடக்கம், 14ஆம் திகதி வரை சீனக் கடற்படையின் சொங் -039 வகை நீர்மூழ்கி கொழும்புத் துறைமுகத் தின் கொள்கலன் முனையத்தில் தரித்து நின்றிருந்தது.
ஆனால், அந்த நீர்மூழ்கி கொழும்பிலிருந்து புறப்படும் நேரத்தில் தான், உள்ளூர் ஊடகங்கள் அந்தச் செய்தியை வெளியிட்டன.
ஆனால், அதற்கான ஆதாரங்கள் சரியாக வெளியாகவில்லை. பின்னர், சீன நீர்மூழ்கி மற்றும் அதற்குத் துணையாகப் பயணிக்கும் விநியோக கப்பல் ஆகியவை கொழும்பில் தரித்து நிற்கும் படங்கள் வெளியாகின.
இந்தச் சர்ச்சை உருவாகி கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் கழித்து இலங்கை அரசாங்கத்தின் தரப்பில் இருந்து, சீன நீர்மூழ்கி கொழும்புக்கு வந்தது உண்மைதான் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விவகாரம் சூடுபிடித்த போது, கடந்த செப்டெம்பர் 25ஆம் திகதி பீஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேர்ணல் ஜெங் யன்ஷெங், கொழும்புத் துறைமுகத்தில் சீன நீர்மூழ்கி தரித்து நின்றது உண்மையே என்றும், அது சோமாலியா செல்லும் வழியில், விநியோகத் தேவைகளுக்காக கொழும்புத் துறைமுகத்தை நாடியதாகவும் தெரிவித்திருந்தார்.
இதற்கு நீண்டநாள் கழித்தே கடந்தமாதம் 27ஆம் திகதி தான் புதுடில்லியில் இலங்கைக் கடற்படைத் தளபதி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
கொழும்புக்கு வந்தது அணுவாயுத நீர் மூழ்கியல்ல. அது சாதாரணமான டீசலில் இயங்கும் நீர் மூழ்கிதான். இந்தியாவுடன் நாம் நல்ல ஒத்துழைப்பை பேணி வருகிறோம். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு விடயத்தில் நாம் சமரசம் செய்து கொள்ளமாட்டோம். இந்தியாவின் பாதுகாப்பு எமது பாதுகாப்பு. சீனர்கள் மட்டுமல்ல, ரஷ்யர்கள் மற்றும் ஏனைய நாடுகளுடனும் நாம் உறவுகளை வைத்துள்ளோம். எமது நாடு அணிசேரா நாடு.
அவர்கள் நல்லெண்ணப் பயணமாகவே வருகிறார்கள். நீங்கள் கூறுவது போல சீன இராணுவத் தலையீடு எதுவும் அங்கு இல்லை. அவர்கள் வர்த்தக நலன் மீதே ஆர்வம் கொண்டுள்ளனர் ” என்று – இந்தியக் கடற்படைத் தளபதியை அருகில் வைத்துக் கொண்டே கூறியிருந்தார் வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா.
சீன நீர்மூழ்கி விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்த பின்னர் இந்தியப் பாதுகாப்பு செயலர் ஆர்.கே.மாத்தூர் தலைமையிலான குழு கொழும்பு வந்தது.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ராஜபக் ஷவும், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேராவும் அடுத்தடுத்து புதுடில்லிக்கு அழைக்கப்பட்டனர்.
இதன்போது, சீன நீர்மூழ்கிக் கப்பலில் வருகை குறித்து இந்தியா தனது அதிருப்தியையும், கவலையையும் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருந்தாலும், இந்தியாவின் இந்தக் கவலையை இலங்கை எந்தளவுக்குப் புரிந்து கொண்டுள்ளது? என்பது கேள்வி.
ஏனென்றால், இலங்கைக் கடற்படைத் தளபதி புதுடில்லியில் இதுபற்றிப் பேசும் போது, சீன நீர்மூழ்கி பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு மிகச் சாதாரணமாகவே அது அணுவாயுத நீர்மூழ்கியல்ல சாதாரண நீர்மூழ்கி தான் என்று மிக அலட்சியமாகப் பதில் கொடுத்திருக்கிறார்.
அணுவாயுத நீர்மூழ்கியா?- சாதாரண நீர்மூழ்கியா? கொழும்பு வந்தது என்பது பிரச்சினையல்ல.வந்தது சீன நீர்மூழ்கி தான் என்பதே பிரச்சினை. அதைப்பற்றி வெளிப்படையாகக் கூறாமல் மறைத்ததுதான் பிரச்சினை.
கடந்த ஆண்டு செம்ரெம்பர் மாதம் ஈரானியக் கடற்படையின் நீர்மூழ்கி ஒன்று கொழும் புத் துறைமுகத்துக்கு வந்து சென்றது.
அந்த நீர்மூழ்கி ஈரானிலிருந்து புறப்பட முன்னரே அது கொழும்புக்கும் செல்லும் என்று ஈரான் அறிவித்து விட்டது. அதனால் அதன் வருகை குறித்து எந்த நாடும் கேள்வி எழுப்பவில்லை. சந்தேகத்தையோ சர்ச்சையையோ கிளப்பவில்லை.
ஆனால், அதுபோன்ற வெளிப்படைத்தன்மையுடன் சீன நீர்மூழ்கி கொழும்பு வந்திருக்கவில்லை.
அதன் வருகை உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் சீனா மட்டுமல்ல இலங்கையும் கூட ஒளித்து மறைத்துப் பாதுகாத்தது. இதுதான், இந்தியாவுக்கு தனது பாதுகாப்புக் குறித்த சந்தேகம் எழுந்ததற்குக் காரணம்.
இந்தியாவின் பாதுகாப்பு எமது பாதுகாப்பு என்றும், இந்தியாவின் பாதுகாப்பு விடயத்தில் சமரசம் செய்து கொள்ளமாட்டோம் என்றும் இப்போது கூறும் இலங்கைக் கடற்படைத் தளபதி, சீன நீர்மூழ்கியின் வருகையின் போது மட்டும் அதனை மறந்து போயிருந்தார்.
இந்தியப் பெருங்கடலில் சீன நீர்மூழ்கிகளின் நடமாட்டத்தை இந்தியா எச்சரிக்கையுடன் பார்க்கிறது என்பதை தெரிந்துகொண்டே அவற்றில் ஒன்று கொழும்பு வந்ததை மறைத்திருந்தது அரசாங்கம்.
தெற்காசியத் துறைமுகம் ஒன்றில் சீன நீர்மூழ்கி ஒன்று தரித்துச் சென்றதுதான் விவகாரமே தவிர, அது எந்த வகையை சேர்ந்தது என்பதல்ல பிரச்சினை.
மீண்டும் மீண்டும் இலங்கை அரசு பொருந்தாத நியாயங்களின் மூலம், இந்த விவகாரத்தில் தனது தவறைத் தட்டிக்கழிக்கவே முனைகிறது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா இந்தியப் பயணத்தில் இருந்த போது, கடந்த 29ம் திகதி கொழும்பில் பாதுகாப்பு அமைச்சு நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதும் சீன நீர்மூழ்கிகளின் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்திருந்த, கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய,
“இந்தியப் பெருங்கடலின் மத்தியில் இலங்கை அமைந்துள்ளதால், பூகோள ரீதியில் கேந்திர முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளின் கடற்படை கப்பல்களும் நீர்மூழ்கி கப்பல்களும் நல்லெண்ண அடிப்படையில் வந்து செல்கின்றன. இது பொதுவான ஒரு விடயம்.
குறித்த நாடொன்றின் கப்பல்கள் மட்டும் இங்கு வரவில்லை. நாடு எது என்பதை விட நாடுகளுக்கு இடையிலான நல்லெண்ண உறவுகளை பலப்படுத்துவது தொடர்பிலேயே கவனம் செலுத்தப்படும்.
2010ஆம் ஆண்டுக்குப் பின்னர், இன்றுவரை 206 வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் இங்கு வந்து சென்றுள்ளன.
இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ரஷ்யா, ஜப்பான், ஸ்பெய்ன், பங்களாதேஷ், இந்தோனேஷியா, தாய்லாந்து, துருக்கி, மலேஷியா, தென்கொரியா, புருணை, மாலைதீவு, இத்தாலி, பிரான்ஸ், ஈரான், சீனா, ஐக்கிய அரபு இராச்சியம், ஓமான், சீஷெல்ஸ் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளிலிருந்தே இந்த 206 கப்பல்களும் வந்து சென்றுள்ளன.
2010ஆம் ஆண்டில் 36 கப்பல்களும், 2011ஆம் ஆண்டில் 49 கப்பல்களும், 2012 இல் 34 கப்பல்களும், 2013 இல் 48 கப்பல்களும், 2014ஆம் ஆண்டு இதுவரை 39 கப்பல்களும் வந்து சென்றுள்ளன.” என்று விளக்கம் கூறியிருந்தார்.
அதாவது, வந்தது சீன நீர்மூழ்கி என்பதற்கு முக்கியத்துவம் அளிக்காமல், கடந்த ஐந்து ஆண்டுகளில் கொழும்புக்கு வந்த 206 போர்க்கப்பல்களில் ஒன்றாகவே இதனையும் பார்க்க வேண்டும் என்று அவர் விவகாரத்தை திசை திருப்ப முயன்றார்.
ஆனால், இந்தியா அப்படிப் பார்க்கவில்லை.தனது செல்வாக்கிற்கு உட்பட்ட பகுதிக்குள், இதுவரையில்லாத வகையில் சீன நீர்மூழ்கி வந்து சென்றதை அச்சுறுத்தலாகப் பார்க்கிறது.இந்தியாவின் இடத்தில் இலங்கை இருந்திருந்தால், இதையேதான் செய்திருக்கும்.
ஒருபக்கத்தில், சீன நீர்மூழ்கிகளுக்கு இடம்கொடுக்கும் விவகாரத்தில் இந்தியாவின் கவலையைப் புரிந்து கொள்வது போலத் தலையாட்டினாலும், இன்னொரு பக்கத்தில், அதனை நியாயப்படுத்தும் வகையிலும், இலங்கை அரசாங்கம் நடந்து கொள்கிறது.
சீனாவின் இராணுவப் பிரசன்னம் ஏதும் இலங்கையில் கிடையாது என்றும், இலங்கையில் வெறும் ஐந்து சீனப்படையினர் தான் உள்ளனர் என்றும் அவர்கள் கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரியில் கல்வி கற்கின்றனர் என்றும், சாமர்த்தியதாக பதிலளித்திருக்கிறார் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய.
இலங்கையில் சீனாவின் இராணுவத் தலையீடுகளும், பொருளாதாரத் தலையீடுகளும் அதிகரித்துவிட்டன என்ற இந்தியாவின் கவலையை இலங்கை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே தெரிகிறது.
ஏற்கனவே, சீனக்குடாவில், சீன விமான நிறுவனத்துக்கு, விமானப் பராமரிப்பு நிலையத்தை அமைக்க இடம்கொடுக்க முயன்ற விவகாரத்திலும், இலங்கையை இந்தியா கண்டித்திருந்தது.
இதையடுத்து, இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தக் காரியத்தையும் செய்யமாட்டோம் என்று வாக்குறுதி அளித்திருந்தார் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ். கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா புதுடெல்லியில் எதனைக் கூறினாரோ அப்படியே பீரிஸும் கூறியிருந்தார்.
இந்தியாவின் எதிர்ப்பையடுத்து, சீனக்குடாவில் அமைக்கப்படவிருந்த விமானப் பராமரிப்பு நிலையத்தை ஹிங்குராக்கொடவுக்கு மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
ஆனால் சீனா அதற்கு இணங்கிவிட்டதாக எந்த தகவலும் இல்லை.
அந்த விவகாரம் ஓய்ந்து ஓரிரு மாதங்களுக்குள்ளாகவே நீர்மூழ்கி விவகாரத்தில் இந்தியாவுக்கு பதிலளிக்க வேண்டிய நிலை இலங்கைக்கு உருவாகியிருக்கிறது.
ஒருபக்கத்தில் இந்தியாவை நட்பு நாடு என்று கூறிக் கொண்டாலும், அதன் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்க இடமளியோம் என்று கூறிக் கொண்டாலும், மறுபக்கத்தில் சீனா விடயத்தில் இலங்கை ஒளித்து விளையாடுகிறது என்பதே உண்மை.
புதுடில்லியில் நரேந்திர மோடி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், சீனா விடயத்தில் இலங்கை இரண்டாவது முறையாகவும் இந்தியாவின் கிடுக்கிப் பிடிக்குள் அகப்பட்டுக் கொண்டுள்ளது.
சீனா விடயத்தில், இந்தியாவுடன் வெளிப்படைத்தன்மையான உறவை கடைப்பிடிக்கத் தவறினால், இதுபோன்ற நெருக்கடிகளுக்குள் சிக்கிக் கொள்ள நேரிடும் என்பதையே இவை எடுத்துக் காட்டியுள்ளன.