அடுத்த பாராளுமன்றத் தேர்தல் எவ்வாறு அமையப்போகின்றது என்பதே தற்போதைய நிலைமையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் எண்ணப்போக்காக மாறியுள்ளது.
அதாவது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த திகதி ஒன்றில் நாட்டின் பாராளுமன்றம் கலைக்கப்படுவது என்பது உறுதியாகியுள்ளது.
ஆனால் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் குறித்தவாறு ஏப்ரல் மாதம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு நடத்தப்படுமா என்று கேள்வி எழுப்புகின்றவர்களும் இல்லாமல் இல்லை.
காரணம் அண்மையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பி.க்கள் குழு கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளது.
அதன்போது எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு தாங்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் தற்போது காணப்படுகின்ற தேசிய அரசாங்க முறையை வேண்டுமென்றால் நீடிப்பதற்கு தாங்கள் ஒத்துழைப்பு வழங்குவதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறெனின் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத் தேர்தலை நடத்தவேண்டியதில்லை என்றும் தாமதமாகி தேர்தலை நடத்தலாம் என்றும் இந்த சிரேஷ்ட உறுப்பினர்கள் யோசனை முன்வைத்துள்ளனர்.
தற்போதைய சர்வகட்சி அரசாங்கம் குறிப்பிட்ட காலப்பகுதி நீடிப்பதற்கு தாங்கள் ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் இந்த யோசனையை எழுத்துமூலம் தனக்கு முன்வைக்குமாறும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி அடுத்த பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுமா என்பதே இங்கு பிரதானமாக ஆராயப்படவேண்டிய விடயமாக உள்ளது.
சில வாரங்களுக்கு முன்னர் கேசரிக்கு பிரத்தியேக நேர்காணல் ஒன்றை வழங்கிய புதிய அரசாங்கத்தின் முக்கியஸ்தரும் அமைச்சருமாகிய ராஜித சேனாரட்ன பாராளுமன்றத்தை ஏப்ரல் 23 ஆம் திகதியே கலைக்கவேண்டும் என்று இல்லை. தேவை எனின் வேறு தினத்திலும் கலைக்கலாம் என்று கூறியிருந்தார்.
அவரின் கூற்று இவ்வாறு அமைந்திருந்தது.
கேள்வி: ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளதே.
பதில்: அப்படியில்லை. பாராளுமன்றம் ஏப்ரல் 23 ஆம் திகதிதான் கலைக்கப்படவேண்டும் என்று இல்லை. தற்போது 100 நாள் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கின்றோம். அதன்படி சரியான ஒரு திகதியில் பாராளுமன்றத்தை கலைப்போம். அது 100 நாட்களின் பின்னர் இடம்பெறும்””
இவ்வாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறியிருந்தார். எனினும் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஏப்ரல் 23 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே ஏப்ரல் மாதம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஜூன் மாத ஆரம்பத்தில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்ற எடுகோளின் படியே நாட்டின் அரசியல் களத்தில் அரசியல் காய் நகர்த்தப்படுகின்றது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலானது 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது. எனவே அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு ஆரம்பம் வரை பாராளுமன்றம் செயற்படலாம்.
ஆனால் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படும் என்ற யோசனைக்கு மக்களின் ஆணை கிடைத்துள்ளது. எனவே மக்களின் இறைமையின் பிரகாரம் தேர்தல் நடைபெறும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது மூன்று மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படப்போவது பிரச்சினைக்குரிய விடயமல்ல. மாறாக தேர்தலில் எவ்வாறு கட்சிகள் போட்டியிடப்போகின்றன மற்றும் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் என்ன நடைபெறப்போகின்றது என்பதே அனைவரும் மனதை போட்டு குழப்பும் விடயமாக மாறியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் அரசாங்கமானது சர்வகட்சி தேசிய அரசாங்கமாக உள்ளது. அதில் எந்த சிக்கலும் இருப்பதாக தெரியவில்லை.
எம்மிடமே பெரும்பான்மை பலம் இருக்கின்றது என்றும் 24 மணிநேரத்தில் அரசாங்கத்தை கலைக்கலாம் என்று சுதந்திரக் கட்சி அவ்வப்போது சவால் விட்டாலும் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக பகிரங்கமாகவே அறிவித்துள்ளது.
எனவே புதிய அரசாங்கத்தின் 100 நாள் ஆயுட்காலம் குறித்து யாரும் குழப்பிக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. இந்நிலையில் அதற்கு பின்னர் வரப்போகின்ற நிலை எவ்வாறு அமையப்போகின்றது என்பதே கேள்வியாகும்.
தற்போது எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் எவ்வாறு போட்டியிடப்போகின்றன என்பது குறித்தே பார்க்கவேண்டியுள்ளது.
அதாவது பாராளுமன்றத் தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகளும் ஒருமித்து போட்டியிடும் சாத்தியமும் இருப்பதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பன இணைந்து போட்டியிட முடியுமா என்பது குறித்தும் தற்போது ஆராயப்பட்டுவருகின்றது.
பிரதான இரண்டு அரசியல் கட்சிகளும் இணைந்து ஒரு சின்னத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியுமா? என்பது யதார்த்தமானதா? என்பதனை முதலில் பார்க்கவேண்டும்.
இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து போட்டியிடுவதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் மைத்திரிபால சிறிசேனவை பதவிக்கு கொண்டுவருவதில் பாரிய பங்களிப்பை செய்தவருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
ஆனால் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிடுமானால் சில செயற்பாட்டு ரீதியான சிக்கல்கள் தோன்றும் என்றும் சந்திரிகா குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக ஆசனங்களை பகிர்வதில் பாரிய சிக்கல்கள் ஏற்படும் என்றும் அவர் எதிர்வுகூறியுள்ளார். இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சூழல் உருவாகும் சாத்தியம் உள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்னவும் அண்மையில் தெரிவித்திருந்தார்.
“எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து கட்சிகளும் ஒரு கூட்டணியாகவும் போட்டியிடலாம். ஆசனங்களை பகிர்ந்து போட்டியிடுவோம். ஒன்றாக அமர்ந்து செயற்படலாம். இல்லாவிடின் பிரிந்து நின்று போட்டியிடுவோம்.
பின்னர் இணைந்துகொள்வோம். நல்ல மனிதர்களை மக்கள் தெரிவு செய்வார்கள்” என்று அமைச்சர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் பாராளுமன்றத் தேர்தல் ஒன்றில் இணைந்து ஒரு சின்னத்தில் போட்டியிடுமாயின் அது தேர்தல் வரலாற்றில் மிக முக்கியமான தருணமாக அமையும்.
ஆனால் அந்த யோசனை எந்தளவு தூரம் நடைமுறைக்கு வரும் என்பதும் எந்தளவுக்கு யதார்த்தமானது என்பதும் சிந்திக்கவேண்டிய விடயமாகும்.
இந்நிலையில் இந்த யோசனை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பன இதுவரை எந்த கருத்தையும் வெளியிடவில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நாங்கள் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டுவோம்.
நாங்கள் தற்போதே தேர்தலுக்கான தயார் நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்துவிட்டோம். எனவே நாங்கள் சிறந்த முறையில் தயாராகி தேர்தலில் போட்டியிடுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி. சில்வா தெரிவித்துள்ளார்.
நிமால் சிறிபால டி. சில்வாவின் கருத்தைப் பார்க்கும்போது பிரதான இரண்டு கட்சிகளும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிட முடியுமா என்பது கேள்விக்குறியை ஏற்படுத்துகின்றது.
அவ்வாறான யோசனையானது யோசனை மட்டத்திலேயே முடங்கிவிடும் என்று எண்ணத் தோன்றுகின்றது. இதேவேளை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் பணியில் ஐக்கிய தேசியக் கட்சியும் கடுமையாக ஈடுபட்டுவருகின்றது.
இந்த விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு கடின உழைப்பு தேவைப்படுகின்றது. காரணம் 100 நாள் வேலைத்திட்டத்தையும் மேற்கொண்டு அரசாங்கத்தையும் கொண்டு நடத்திய வண்ணம் பாராளுமன்றத் தேர்தலுக்கும் தயாராகவேண்டியுள்ளது. எனவே தான் ஐக்கிய தேசிய கட்சிக்கு கடின உழைப்பு தேவைப்படுகின்றது என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவும் பொதுத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான பாரிய காய் நகர்த்தலில் ஈடுபட்டுவருகின்றார்.
அவர் இதற்காக கடந்த காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகிச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாகவும் தகவல் வந்துகொண்டிருக்கின்றன.
மேலும் ஐக்கிய தேசிய கட்சியை கிராம மட்டத்தில் பலப்படுத்தும் பாரிய முயற்சியிலும் கட்சியினர் தற்போது ஈடுபட்டுவருகின்றனர்.
மீண்டும் 10 வருடங்களின் பின்னர் ஆளும் தரப்பில் அமர்வதற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை நீடிப்பதே ஐக்கிய தேசிய கட்சியின் எண்ணமாகும்.
அவ்வாறுபார்க்கும்போது இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் பாராளுமன்றத் தேர்தலில் தனிவழிப் பயணத்தை செல்லவே விரும்புகின்றமை தெளிவாகின்றது.
தேர்தல் விஞ்ஞாபனத்தின்படி கூடிய ஆசனங்களை பெறும் கட்சிக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டு 20 வருடங்களுக்கு தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அப்படியானால் ஒருவேளை சுதந்திரக் கட்சிக்கு தேர்தலில் அதிக ஆசனங்கள் கிடைத்துவிட்டால் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை இழந்துவிடுவாரா? பல கேள்வியை எழுப்பும் தேர்தலாகவே பாராளுமன்றத் தேர்தல் காணப்படுகின்றது.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் தேர்தலில் தனித்துப் போட்டியிட தயாராகின்ற நிலையில் மற்றுமொரு புதிய கூட்டணி தேர்தலில் களமிறங்க முஸ்தீபுகளை மேற்கொண்டுள்ளன.
அதாவது மக்கள் ஐக்கிய முன்னணி தேசிய சுதந்திர முன்னணி, லங்கா சம சமாஜ கட்சி , ஜனநாயக இடதுசாரி முன்னணி உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதாவது கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆதரவாக வாக்களித்த 57 இலட்சம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டியது எங்கள் கடமையாகும்.
அதனால்தான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு முன் வந்துள்ளன.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் ஊடாக பிரதமராக்குவதற்காக இவ்வாறு நாங்கள் ஒன்றிணைந்து வேலை செய்கின்றோம் என்று கூறப்படுவதில் உண்மையில்லை.
காரணம் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் ஊடாக மீண்டும் களத்துக்கு வருவதா இல்லையா என்பதனை மஹிந்த ராஜபக்ஷவே தீர்மானிக்கவேண்டும். அதனை நாங்கள் தீர்மானிக்க முடியாது என்று தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் இந்தக் கட்சிகளின் கூட்டணியின் சார்பில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட தயாராகிவருவதாகவே தெரிவிக்கப்படுகின்றது.
அவர் இதனை நேரடியாக தெரிவிக்காவிட்டாலும் அதற்கான ஆர்வத்தைக்கொண்டிருப்பதாகவே தெரியவருகின்றது.
இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் , சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி, மலையக கட்சிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தயார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றன.
கூடிய ஆசனங்களை பெறும் நோக்கில் மக்கள் விடுதலை முன்னணி பாரிய பிரசார செயற்பாடுகளை தற்போதிருந்தே ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் புதுவிதமான அரசியல் நிலை ஒன்றை நாம் நாட்டில் பார்க்கலாம்.
ஒருவேளை எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காவிடின் பிரதான இரண்டு கட்சிகளும் அடங்கியவகையில் தேசிய அரசாங்கம் அமையலாம்.
அல்லது ஒரு கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைத்தால் அக்கட்சி தனித்து ஆட்சியமைக்க முற்படலாம். அந்த நேரத்தில் ஜனாதிபதி பதவியினதும் வரையறையற்ற அதிகாரங்கள் நீக்கப்பட்டிருக்கும். எனவே பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் நாட்டின் அரசியல் களத்தில் புதுவிதமான சூழலை தோற்றுவிக்கும் என்பதனை எதிர்பார்க்கலாம்.
-ரெபெட் அன்ரணி-