‘பவானிசிங்கை நீக்க வேண்டும்’ என்று அன்பழகன் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் நசீர், இந்த மனு மீது பதிலளிக்க கர்நாடக அரசு தலைமைச் செயலாளர், சட்டத் துறைச் செயலாளர், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநர், பவானிசிங் ஆகியோர் 14 ஆம் தேதி ஆஜராக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
அதையடுத்து அன்பழகன் தரப்பில் நாகேஸும், பவானிசிங் தரப்பில் திவாகரும், அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமாரும், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சார்பாக ராவும் ஆஜரானார்கள்.
தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை கொடுத்த ஆர்டர்படி பவானிசிங் ஆஜராகி இருக்கிறார்.
இந்த வழக்கை பொறுத்தவரை அரசு வழக்கறிஞரை கர்நாடக அரசும், கர்நாடக உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதியும் கலந்து ஆலோசித்துதான் நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது.
அதனால், தமிழக அரசுக்கு இந்த வழக்கின் அரசு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் இல்லை. கர்நாடக அரசுக்கும் கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கும்தான் அதிகாரம் இருக்கிறது.
இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜராவது உச்சநீதிமன்றத்துக்கு முரணானது. எங்கள் பார்வையில் பவானிசிங் அரசு வழக்கறிஞர் கிடையாது. சாதாரண தனியார் வக்கீலாகவே பார்க்கிறோம். இவர் குற்றவாளி தரப்புக்குச் சாதகமாக செயல்படுகிறார்.
நீதிபதி: (பவானிசிங்கின் வழக்கறிஞர் திவாகரைப் பார்த்து) என்ன சொல்கிறீர்கள்?
திவாகர்: பதில் மனு தாக்கல் செய்ய 2 வார காலம் அவகாசம் வேண்டும்.
அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார்: பவானிசிங் மீது கடுமையான குற்றச்சாட்டு இருக்கிறது. அதற்கு அவர்தான் பதிலளிக்க வேண்டும். மாண்புமிகு நீதிபதி அவர்கள் யாரை பரிந்துரை செய்கிறீர்களோ, அவர்களை அரசு ஏற்றுக்கொள்ளும்.
தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வழக்கறிஞர் ராவ்: இந்த வழக்கு இந்த நீதிமன்றத்தில் விசாரிக்க உகந்ததல்ல.
நீதிபதி: இந்த வழக்கை உச்சநீதிமன்றம் மூன்று மாதங்களில் முடிக்கச் சொல்லி இருக்கிறது. இந்த வழக்கை நீதிபதி குமாரசாமி விசாரித்து வருகிறார்.
இதற்கிடையில் அரசு தரப்பு வழக்கறிஞரை மாற்றுவதால், வழக்கு தாமதமாகும். அதனால், இந்த வழக்கை நீதிபதி குமாரசாமியே விசாரிப்பதுதான் நன்றாக இருக்கும் என நான் கருதுகிறேன். அதனால், இந்த மனுவை நீதிபதி குமாரசாமி விசாரிக்க முதன்மை நீதிபதிக்கு பரிந்துரை செய்கிறேன்.
மேல்முறையீட்டு மனு மீது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் வாதத்தில் இருந்து…
‘‘ஹைதராபாத்தை அடுத்துள்ள ஜிடி மெட்லாவில் உள்ள திராட்சைத் தோட்டம் மற்றும் அங்குள்ள பங்களா புதுப்பிக்கப்பட்ட செலவையும், 1994 ஆம் ஆண்டு அதே இடத்தில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடத்தின் மதிப்பையும், ஆந்திரப்பிரதேசம் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள பஷிராபாத்&தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தின் மதிப்பையும் வேல்யூ செய்த பொதுப்பணித் துறை பொறியாளர்கள், 5 கோடியே 50 லட்சம் செலவானதாக மிகைப்படுத்தி வேல்யூ செய்திருக்கிறார்கள்.
ஜிடி மெட்லா, பஷிராபாத் என்ற குக்கிராமத்தில் உள்ள கட்டடத்தின் மதிப்பை, மெட்ரோ சிட்டிக்கு ஏற்றவாறு மதீப்பீடு செய்திருப்பது கொஞ்சமும் பொருந்தாது.
கட்டடத்தின் உள்ளே பதிக்கப்பட்டுள்ள கிரானைட், டைல்ஸ், மார்பிள்ஸ் கணக்கீடு செய்தது தவறு. ராஜஸ்தான் மார்பிள்ஸ் ஒரு ஸ்கொயர் மீட்டர் 18,400 என்று கணக்கிட்டு இருக்கிறார்கள்.
எப்படி கணக்கிட்டீர்கள் என்றால், கடையில் கேட்டு விசாரித்து எழுதி இருக்கிறோம் என்கிறார்கள். அந்த நோட்டு எங்கே என்றால், கிழிந்துவிட்டது என்கிறார்கள்.
ஆனால் கிரானைட், மார்பிள்ஸ், டைல்ஸ் ஆகியவை, கணக்கிட்டு இருப்பதைவிட குறைவாகதான் வாங்கப்பட்டது.
ஹைதராபாத் ஜிடி மெட்லாவில் உள்ள கூடுதல் கட்டடம் 82 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆனால், அந்தக் காலகட்டத்தில் கட்டுமானப் பொருட்களை விலை குறைவாக இருந்ததால், கட்டடம் கட்ட 41 லட்சம்தான் செலவாகி இருக்கும். ஆனால், என் கட்சிக்காரருக்கு சமூகத்தில் அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மிகைப்படுத்தி காட்டி இருக்கிறார்கள்.
இது சம்பந்தமாக 1997-98 ல் அரசு தரப்பு சாட்சி அளித்த பலர் 2002 ல் மறுசாட்சியம் சொன்னபோது மறுத்திருக்கிறார்கள்.
கட்டடத்தில் மரத்தால் ஆன ஜன்னல், கதவுகள் மற்றும் ஃபர்னிச்சர்களை வனத்துறை அதிகாரிகளைக் கொண்டு அளவீடு செய்திருக்க வேண்டும்.
அதேபோல கட்டடத்தில் உள்ள மின் இணைப்பு மற்றும் மின் சாதனங்கள் மதிப்பீடு செய்ததும் தவறு. கட்டடங்கள் மற்றும் அதில் உள்ள பொருட்களை துறை ரீதியாக உள்ள நடுநிலைமையான வல்லுநர்களைக் கொண்டு அளவீடு செய்யவில்லை.
சென்னை போயஸ்கார்டன்
சென்னை போயஸ் கார்டன் பங்களா 1968 ல் கட்டப்பட்டது. அதில் பழுது ஏற்பட்டதன் காரணமாக பில்டிங் புதுபிக்கப்பட்டது.
தமிழக ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸாரின் உத்தரவின் பெயரில் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் பில்டிங் புதுப்பிக்கப்பட்ட செலவு குறித்து ஆய்வுசெய்து கொடுத்த அறிக்கையில் 7 கோடியே 50 லட்சம் செலவு செய்ததாக காட்டியிருக்கிறார்கள்.
போயஸ்கார்டன் வீட்டில் மினி தியேட்டர், கான்ஃபரன்ஸ் ஹால், பார்ட்டி ஹால், அலுவலகம், டிரைவர்களுக்கான ரூம், வேலையாட்களுக்கான ரூம், 2 ஜெனரேட்டர், 39 ஏஸி, செயற்கை நீரூற்று என பிரமாண்டப்படுத்தி காட்டியிருக்கிறார்கள்.
பில்டிங் புதுபிக்கப்பதற்கு வாங்கப்பட்ட கிரானைட் கற்கள், டைல்ஸ், மின்சார ஒயர்கள், பிளம்பிங் பணிக்கான வாங்கப்பட்ட பொருட்கள் எவ்வளவு தொகையில் வாங்கப்பட்டது என்ற விவரமோ அல்லது அதற்கான பில்லோ இணைக்கப்படவில்லை. தோராயமாக கணக்கிடப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
உதாரணத்துக்கு மும்பையில் கொள்முதல் செய்யப்பட்ட ஒரு சதுர அடி டைல்ஸின் அப்போதைய மதிப்பு 23 ரூபாயாக இருந்தது.
ஆனால், மதிப்பீடு அறிக்கையில் 150, 175 வரை குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதுபோல பல பொருட்களின் விலையை மிகைப்படுத்தி காட்டியுள்ளனர். எனவே கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டதற்கான செலவு 13 கோடி என்ற குற்றச்சாட்டை வழக்கில் இருந்து நீக்க வேண்டும்.’’
மூன்று மாதங்களுக்குள் முடிக்க கட்டாயம் இல்லை
பொங்கல் விடுமுறைக்குப் பின்னர் மேல்முறையீட்டு மனு விசாரணை தொடர்ந்தது….
நாகேஸ்வரராவ்: இவர்கள் அனைவரும் பொங்கல் திருவிழாவை மகிழ்ச்சியாகக் கொண்டாடியதாக சொன்னார்கள்.
நீதிபதி: இன்று என்ன வாதிட இருக்கிறீர்கள்?
நாகேஸ்வரராவ்: கட்டட மதிப்பீடு
நீதிபதி: உச்சநீதிமன்றம் கொடுத்த பெயில் ஆர்டரைக் கொடுங்கள்.
(நாகேஸ்வரராவ் உச்சநீதிமன்ற பெயில் ஆர்டர் நகலைக் கொடுத்தார். நீதிபதி படித்துக்கொண்டிருந்தார்)
நாகேஸ்வரராவ்: உச்சநீதிமன்றம் இந்த மேல்முறையீட்டு மனுவை மூன்று மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை.
மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு பரிந்துரைதான் செய்திருக்கிறது. எனவே 3 மாதங்களிலேயே வழக்கை முடிக்க வேண்டும் என்ற நிபந்தனை எதுவும் இல்லை.
நீதிபதி: (அதை கேட்டு மௌனமாக இருந்தார்)
கூடுதலாக கட்டட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது
நாகேஸ்வரராவ்: ‘‘என் மனுதாரருக்கு சொந்தமான மூன்று சொத்துகள் ஹைதராபாத் திராட்சைத் தோட்டம், போயஸ்கார்டன் மற்றும் போயஸ்கார்டன் கூடுதல் கட்டடங்களை தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் உத்தரவின் பேரில் மதிப்பீடு செய்த பொதுப்பணித் துறை பொறியாளர்கள் கட்டடம் புதுப்பிக்கப்பட்டதற்கான மொத்த செலவாக 13.64 கோடி செலவு செய்துள்ளதாக குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.
அதில் சிறிதும் உண்மை கிடையாது. கட்டுமான தொழிலில் அனுபவம் உள்ள பொறியாளர்கள் இந்த கட்டடத்தின் மதிப்பை அளவீடு செய்யவில்லை. அதேபோல கட்டுமான பொருட்களுக்கு வாங்கப்பட்ட எந்த ஒரு ரசீதும் இணைக்கப்படவில்லை.
இந்த மூன்று கட்டடங்களைப் புதுப்பிப்பதற்காக உண்மையில் ஜெயலலிதா செலவு செய்த தொகை 3.52 கோடிதான். அதை வருமானவரித் துறையில் தாக்கல் செய்து அதற்கான ரசீதுகளையும் கொடுத்திருக்கிறோம். வருமானவரித் துறை அதிகாரிகள் அதை ஆய்வுசெய்து ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
அதேபோல கட்டடங்களுக்குப் பயன்படுத்திய டைல்ஸ் ஒரு சதுர அடி 100 ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது.
அதை பொதுப்பணித் துறை பொறியாளர்கள் டைல்ஸ் ஒரு சதுர அடி 20,000 ரூபாய் எனப் பதிவு செய்திருக்கிறார்கள். அதற்கு ரசீது கிடையாது. கேட்டால், மும்பையில் பல டைல்ஸ் கடைகளை விசாரித்து போட்டதாக சொல்கிறார்கள்.
இது ஏற்புடையதல்ல. ஆனால், நாங்கள் டைல்ஸ் எவ்வளவு பணம் கொடுத்து வாங்கினோம் என்பதை மும்பையைச் சேர்ந்த மாடசாமி என்பவர் சாட்சியம் அளித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், வருமானவரித் துறையும் தணிக்கை செய்து ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆக, வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள கட்டடங்களின் மதிப்பு 28 கோடி என்று குற்றப்பத்திரிகையில் காட்டப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் கட்டடத்தின் மதிப்பு 6 கோடி.
ஆனால் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாட்சியங்களை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அதற்கான காரணத்தையும் சொல்லவில்ல. அதனால், கட்டடத்தின் மதிப்பை முழுவதுமாக நீக்கவேண்டும்.’’
அரசு வழக்கறிஞராக பவானிசிங்கே தொடரலாம்
அதை ஆம் தேதி விசாரித்த நீதிபதி அப்துல் நசீர், ‘‘இந்த வழக்கை உச்சநீதிமன்றம் மூன்று மாதங்களில் முடிக்கச் சொல்லி இருக்கிறது.
நீதிபதி குமாரசாமி இந்த வழக்கை நடத்தி வருகிறார். இதற்கிடையில் அரசு வழக்கறிஞரை மாற்றுவதால் கால தாமதம் ஏற்படும் என்பதால் இந்த மனுவை குமாரசாமியே விசாரிப்பதுதான் நன்றாக இருக்கும் என நான் கருதுகிறேன்.
அதனால், இந்த மனுவை நீதிபதி குமாரசாமியே விசாரிக்க பரிந்துரை செய்து இந்த மனு முதன்மை நீதிபதிக்கு அனுப்பி வைக்கிறேன்’’ என்று தீர்ப்பளித்தார்.
இந்த மனு கர்நாடக உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதி வஹேலாவின் கவனத்துக்கு வந்ததை அடுத்து, ‘இந்த மனுவை குமாரசாமி விசாரித்தால் ஏற்கெனவே நடந்துவரும் மேல்முறையீட்டு விசாரணை காலதாமதம் ஏற்படும் என்பதால், இந்த மனுவை ஆனந்த் பைரரெட்டி விசாரிப்பார்’ என்று அறிவிப்பு வந்தது. அதையடுத்து 19 ஆம் தேதி ஆனந்த் பைரரெட்டி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அன்பழகன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் நாகேஷூம், பவானிசிங் தரப்பில் செபஸ்டினும், தமிழக ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறை தரப்பில் ராவும், கர்நாடக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமாரும் ஆஜரானார்கள்.
நாகேஷ் (அன்பழகன் தரப்பு வழக்கறிஞர்): ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு மனு விசாரணையில் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் ஆஜராகி வருகிறார்.
இந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை கர்நாடக அரசும் கர்நாடக உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதியும் கலந்து ஆலோசித்து நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
ஆனால் கர்நாடக அரசு பவானிசிங்கை நியமிக்காதபோது அவர் இதில் ஆஜராகி வருவது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு புறம்பானது.
இந்த வழக்கில் குற்றவாளியான ஜெயலலிதா சார்ந்துள்ள அ.தி.மு.க ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது.
அந்த தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உத்தரவின் பெயரில் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநர், பவானிசிங்கை நியமித்தி இருக்கிறார்.
இந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை தமிழக அரசு நியமிக்க உரிமை கிடையாது. பவானிசிங்கை கீழமை நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததோடு அபராதமும் விதித்திருக்கிறது. இதில் தொடர்ந்து பவானிசிங் ஆஜரானால் நீதி கிடைக்காது.
ரவிவர்மகுமார் (அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர்): இந்த வழக்கில் கீழமை நீதிமன்ற விசாரணையின்போது உச்சநீதிமன்றம் சரியான விளக்கத்தை எங்களுக்குக் கொடுத்தது.
ஆனால், மேல்முறையீட்டு மனுவில் மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என்று மட்டுமே சொல்லி இருக்கிறது. அரசு வழக்கறிஞர் நியமனம் பற்றி எதுவும் சொல்லவில்லை.
பவானிசிங்கை வேண்டாம் என்று சொல்லவோ, அவரே தொடர்ந்து வாதிட வேண்டும் என்று கூறவோ அரசு முடிவு செய்யவில்லை. நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்.
செபஸ்டின் (பவானிசிங்கின் வழக்கறிஞர்): பவானிசிங் மிகவும் நேர்மையாக கீழமை நீதிமன்றத்தில் வாதாடியதால்தான் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்திருக்கிறார்.
தற்போது அவரை குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படுவதாக சொல்வதால் உளவியல் ரீதியாக அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
ராவ் (தமிழக ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறை வழக்கறிஞர்): சி.ஆர்.பி.சி 24(8) ன்படி தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு இந்த வழக்கின் அரசு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் உண்டு.
நீதிபதி: இந்த வழக்கில் அன்பழகனோ கர்நாடக அரசோ விரும்பினால், உச்சநீதிமன்றத்தை அணுகி அவர்கள் வழிகாட்டுதல்படி செயல்படலாம். அதுவரை இந்த வழக்கில் பவானிசிங்கே தொடர்ந்து அரசு வழக்கறிஞராக தொடரலாம்.