இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது சிங்கள மாணவர்களினால் தாக்கப்பட்டதாக கூறப்படும் அரச அதிகாரி ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செங்கலடி பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தரான பத்தக்குட்டி சுமன் தன்மீது இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
நிகழ்வின் இறுதியில் தமிழ் மொழியில் தேசிய கீதம் ஓலிக்கப்பட்டதன் காரணமாகவே தன் மீது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று தான் கருதுவதாக அவர் தெரிவித்தார்.
உயர்கல்வி மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சுடன் செங்கலடி பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கண்காட்சி நிறைவின் போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நிகழ்வின் முடிவில் தமிழ் மொழியில் தேசிய கீதம் ஒலிக்கப்பட்ட போது அங்கிருந்த சிங்கள மாணவர்கள் ஆத்திரமுற்ற நிலையில் காணப்பட்டதாக அவர் கூறினார்.
பின்னர் அந்த மாணவர்கள் சிங்கள மொழியிலும் தேசிய கீதத்தை ஓலிக்கச் செய்ததாகவும் நிகழ்வின் பின்னர் வெளியேறிச் சென்றவேளை இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
சிங்கள மொழியில் பேசியவர்களே தன் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தாக்குதல் நடத்திய முக்கிய நபரொருவரை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என்றும் பத்தக்குட்டி சுமன் கூறினார்.
தேசிய கீதம் ஒலிப்பது தொடர்பான பிரச்சனையே தாக்குதலுக்கு காரணம் என்று தமது விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர கூறினார்.
இலங்கையில் நீண்டகாலமாக தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டு வந்த நிலையிலும் கடந்த அரசாங்கக் காலத்தில் சிங்கள மொழியில் மட்டும் ஒலிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் வந்திருந்தன.
எனினும் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு நாட்டில் தடையேதும் இல்லை என்று புதிய அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.