அம்மா இப்படியே தினம் தினம் பட்டினியால சாவதை விட நீங்கள் கூலிக்கு போகும்போது என்னையும் கூட்டிட்டு போங்கோ என்கிறார் இளையமகள்”
எதனை நீ கொண்டுவந்தாய் இழப்பதற்கு, எது எடுக்கப்பட்டதோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது… கீதாசாரத்தின் சில வரிகள்.
அவ்வாறிருக்க எக்குற்றமும் புரியாது தாமுண்டு தமது வேலையுண்டு என வாழ்ந்த ஒரு குடும்பம் இன்று அன்றாட உணவுக்காக கையேந்தி நிற்கின்றது.
இந்த பூமியில் விளைந்த நெல்லில் உவகையுடன் உயிர்வாழ்ந்த அக்குடும்பத்தார் இன்று பிறப்பில் கொண்டு வந்த அவயவங்களையும் இழந்து அவலப்பட்டு அல்லாடுகின்றார்கள்.
இதனை என்னவென்று கூறுவது. அன்றாடம் வயிற்றை நிரப்புவதற்கு நான்கு ஜீவன்களின் போராட்டம் இன்றும் முடிவின்றி தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
ஆம், இலங்கையில் ஏற்பட்ட யுத்தத்தின் காரணமாக கிழக்கிலிருந்து வடக்கிற்கு இடம்பெயர்ந்தார் ராமசாமி பாண்டியன்.
தற்போது 55வயதாகும் குடியேறிய இடம் ஒதியமலை நெடுங்கேணி. விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டவர் நெடுங்கேணியில் செல்வராணியை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள்.
மூத்த மகள் சித்த சுவாதீனமற்றவராகவும் இளைய மகள் கல்வியில் சிறந்தவராகவும் உள்ளனர்.
மூத்தமகளின் நிலை கவலை அளித்தாலும் அழகிய அமைதியான முறையில் குடும்பவாழ்க்கை சென்றுகொண்டிருந்தது. ஆனால் ஒரு நொடிப்பொழுதில் அனைத்தும் மாறியது.
ஆறு ஆண்டுகள் கடந்தும் இன்றும் மீளமுடியாது அன்றாட வாழ்வுக்கான போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
என்ன நடந்தது இக்குடும்பத்துக்கு, கனத்த நெஞ்சத்துடன் விபரித்தார் ராமசாமி பாண்டியனின் 44வயதான மனைவி செல்வராணி…
1999 ஆம் ஆண்டு வருட முற்பகுதியில் இடம்பெற்ற தொடர் போராட்டத்தில் இடம்பெயர வேண்டும் என்ற சூழலில் மூத்த மகள் 13 வயதிலயும் தோள்ள சுமந்திட்டு கையில நாலு உடுப்பையும் கொண்டு போவது எங்கே என்று தெரியாமல் சனக்கூட்டத்துடன் நாங்களும் ஒருவராக பயணித்தோம்.
இறுதியில் அங்கால போக முடியாது புதுமாத்தளனிலேயே எல்லோரும் தஞ்சம் புகுந்தோம்.
2009.04.18 ஆம் திகதி அதிகாலை எங்க இருந்துதான் வந்ததென்று தெரியாது பொலு பொலுவென்று ஷெல்லுகளெல்லாம் வந்து விழ சனம் ஓட இடமில்லாம ஓலமிட்டபடி கண்முன்னே மடிவதும் அவயவங்கள் பறந்து செல்வதுமாக இருந்த கணப்பொழுதில கணவனுடைய வலது கால் துடையோட துண்டாடப்பட்டு விட்டது.
எனக்கு முதுகில காயம் இளைய மகள் (காயப்படும்போது வயது 10) நெஞ்சில காயம் மூவரையும் ஆஸ்பத்திரிக்கு ஏத்தும் போது என்ர மூத்த பிள்ளை சித்தசுவாதீனமற்ற நிலையில் இருந்தாலும் அம்மா என்ற ஒரு வார்த்தையை தெளிவாக கூப்பிடுவா.
அவாவின் அலறல் சத்தம் தான் எங்கள் மூவரையும் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் உயிரோடு ஊசலாட வைத்தது.
ஆனால் காயக்காறரை ஏத்தின டிரக்டரிலேயே என்ர மூத்தமகள் காயப்படா விட்டாலும் பிள்ளேன்ர அழுகையை பார்த்து அவாவை ஏற்றிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு போய் நால்வரும் முகாமுக்கு வந்தோம்.
பின்னர் முகாமிலிருந்து மீள்குடியேற்றம் என்ற பெயரில் எங்கட சொந்த மண்ணுக்கு வந்தோம்.
வீதியை கண்டுபிடித்து விட்டோம். காணியை கண்டு பிடித்து விட்டோம். இருந்தாலும் வீட்டை தேடியும் கிடைக்கவில்லை.
ஆனால் முகமாலை வரும்போது கொண்டு வந்த தாழ்பாரையும் கம்பையும் வைத்து தற்காலிக வீடு கட்டியிருக்கும்போது இந்திய வீட்டுத்திட்டம் வந்தது.
அதில எங்கட பெயர் தெரிவாகி எங்களுக்கு பணமும் வழங்கப்பட்டது. ஆனால் தரப்பட்ட பணத்திற்கு வீட்டை கட்டி முடிக்க முடியாமல் போய் விட்டது.
காரணம் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பணம் 5½ இலட்சம் ரூபா. ஆனால் கட்டி முடிக்க கிட்டத்தட்ட 7 இலட்சம் வேணும்.
போருக்கு முன் ஒதியமலையில எங்களுக்கு சொந்தமா 2 ஏக்கர் காணி இருந்தது. அதில் நெல் விதைச்சு எங்களுக்கு ஒரு வருடத்துக்கான நெல்லை வைத்துக் கொண்டு முக்கால்வாசியை விற்பனை செய்து பொருளாதாரத்தையும் மேம்படுத்தி நல்லா இருந்தம்.
பிள்ளைகளுக்கு எது தேவை என்பதை பார்த்து பார்த்து செய்தோம். ஆனால் இன்று ஒரு வேளைச் சாப்பாட்டிற்கே கையேந்தி நிற்கிறோம்.
காரணம் கணவருக்கு கால் இல்லாம போனதோட பொய்க்காலும் போட முடியாமல் போய்விட்டது. மூத்தவாக்கும் உடம்புக்கு முடியாமல் இருப்பதால் நானே வீட்டில பயிற்றை, கத்தரி, வெண்டி, புடோல் என சின்னத் தோட்டம் செய்து வாட்டர் பம்மில தண்ணி கட்டி வருகிறேன்.
அயல்ல இருக்கிறவை வந்து மரக்கறி வாங்குவார்கள். இவ்வாறே கடந்த காலங்களில் எமது வாழ்வு நகர்ந்தது. ஆனால் அண்மையில் வன்னியில பெய்த தொடர் மழையால் பயிர்கள் எல்லாம் வெள்ளத்தோட போட்டுது. இப்ப வீட்டுத்தோட்டம் போட நினைச்சாலே பயமாக இருக்கு.
இதனால நான் தோட்ட வேலைகளுக்கு நாட் கூலிக்கு போறனான். ஒரு நாளைக்கு போனால் 600 ரூபா கிடைக்கும்.
காலை 8 மணிக்கு போய் 12 மணிக்கு வந்து மூத்தவாக்குரிய கடமைகள் (இயற்கை கடன் முதல் சாப்பாடு வரை) செய்து விட்டு மீண்டும் 2 மணிக்கு போனால் 6 மணிக்கு வருவேன்.
வரும்போது அவர்கள் தாற பணம் நால்வருக்கும் சாப்பாட்டிற்கு சாமான் வாங்கி வருவேன். சில நேரத்தில் கடைக்கு கடன் கொடுக்கவே நான் கொண்டு வரும் பணம் பத்தாமல் போய் விடும்.
இதற்கப்பால் மஹிந்த சிந்தனை பணம் மாதா மாதம் ரூபா மூவாயிரம் தருவினம். அது எமக்கு கிடைக்கிறது என நம்பியே கடைகளில் எமக்கு கடன் தருவார்கள். அதுவும் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் கிடைக்கவில்லை.
இனி கிடைக்காது என்று பரவலாக கூறுகிறார்கள்.என்ன நடக்குமோ தெரியாது சரி இதுதான் நாளாந்தம் நாம் கஷ்டப்படுகிறோம் என்று பார்த்தால் இளைய மகள் இந்த வருஷம் ஓ.எல். எடுக்கிறா. அவாக்கு தேவையான சாமான்களை கூட வாங்கி கொடுக்க முடியாமல் இருக்கிறோம்.
அவாக்கு பாடங்களை சொல்லிக்கொடுக்கவும் எம்மால முடியாது. அதே நேரம் ரியுஷனுக்கு அனுப்ப வேண்டும் என்று எவ்வளவோ பாடுபட்டன். ஆனால் ஒரு ரூபா பணம் கூட எமக்கு சேமிப்பிற்கு என்று இல்லை.
என்ர நிலையை பார்த்த இளைய மகள் சொல்லுவா அம்மா இப்படியே தினம் தினம் பட்டினியால சாவதை விட நீங்கள் கூலிக்கு போகும்போது என்னையும் கூட்டிட்டு போங்கோ என்று.
ஆனால் நான் சின்ன வயசிலே பெற்றோரை இழந்து படிப்பிக்க ஆட்களில்லாமல் வளர்ந்தது போல் என்ர பிள்ளையும் கஷ்டப்படக்கூடாது என நினைத்தே படிப்பிக்கிறன் என்று சொல்லி மகளை படிப்பித்து வருகிறேன்.
எங்கட கஷ்டம் எங்களோட போகட்டும் என்று ஆறு வருடங்களாக பிரச்சினையை சமாளித்து விட்டேன்.
ஆனால் இனி என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்விக்குறியோடயே எங்கட வாழ்வு நகர ஆரம்பித்து விட்டது.
எனது குடும்பத்தின் நிலையை யாராவது கருத்தில கொண்டு எமக்கு உதவி செய்ய விரும்பினால் எமக்கு காணியோ வீடோ வேண்டாம் என்ர காலும் கையும் நல்லா இருக்கும் வரை உழைத்து சாப்பிடக் கூடிய மனோதிடம் என்னிடம் இருக்கு.
எனவே எனது முயற்சிக்கு கைகொடுக்கும் வகையில் எனக்கு இரண்டு பால் மாடுகள் வாங்கித்தாங்கோ.
நான் வீட்டிலிருந்தபடியே அவற்றை பராமரித்து நீண்ட காலப் பயனைப் பெறுவதுடன் வீட்டுத் தோட்டத்திற்கான பசளையையும் இலவசமாக பெற்றுக்கொள்வதுடன் எங்களை காத்த என்ர செல்ல மகளான மூத்த பிள்ளையையும் பார்த்துக் கொள்வேன்.
இன்றைய கால கட்டத்தில் பெண் பிள்ளையை தனிய வீட்டில விட்டிட்டு போறதே பெரிய பிரச்சினை அதிலயும் புத்தி சுவாதீனமற்ற பிள்ளையை தனியா வீட்டில் விட்டுட்டு போவது என்பது மிகப் பெரிய கஷ்டம்.
எனவே எமது நிலையை கருத்தில் கொண்டு எனக்கு இரண்டு பால் மாடுகளை பெற்றுத் தந்தால் அதை விட எனக்கு வேறெந்த உதவியும் தேவையில்லை.
நாகரிக வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்காது ஒரு நாள் வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என சூரிய உதயத்தில் சிந்திக்கும் இக்குடும்பத்தின் மூன்று வேளை வயிற்றை நிரப்புவதை தவிர பெரியதான விடயம் எதுவுமில்லை.
சொந்தக்காலில் நிற்போம் ஊன்று கோலை மட்டும் வழங்குங்கள் எனக் கோரும் இவர்களுக்கு அதனை வழங்குவதில் தவறில்லை.
முழுக்குடும்பமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் இளைய பெண்பிள்ளையின் கல்வியை மேம்படுத்தும் உதவியை வழங்குவதற்கும் தனவந்தர்கள் முன்வந்தால் பேருதவியாக இருக்குமல்லவா?
-சிந்துஜா பிரசாத்-