திருச்சி: விடுதலைபுலிகளை ஆதரித்து பேசியதாக சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 40 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருச்சியில் உள்ள பஞ்சபூர் என்ற இடத்தில் கடந்த 24 ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக இன எழுச்சி மாநாடு நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசும்போது, ”இதுவரை சாதி, மத உணர்வுகளோடு கூடிய மக்கள் முதன்முதலாக இன உணர்வுடன் இங்கு கூடியுள்ளனர்.
மாற்று அரசியல் புரட்சியை இங்கே முன்வைக்கிறோம். ஈழ விடுதலை ஒன்று தான் நம் வாழ்நாள் இலக்கு. தமிழ் தேசிய இனத்திற்கு என ஒரு தேசம்.
அதனை அடைவதற்கான தொடக்கம் தான் 2016 தேர்தல். பிரபாகரனை நான் சந்தித்தபோது, “உன் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் அணுகுண்டு போன்றவை. அதை வைத்து புரட்சி செய்” என்றார்.
தமிழர்களுக்கு என்று அதிகாரம் இல்லை. அதனால் தான் அண்டை நாட்டில் நமது மீனவர்கள், அன்டை மாநிலத்தில் தமிழ் மக்கள் கொல்லப்படுகிறார்கள்.
இலங்கையில் நடந்த இனஅழிப்பை தி.மு.க., அ.தி.மு.க. தடுக்கவில்லை, தமிழர்களை காக்கவில்லை. தமிழகத்திலும், இந்தியாவிலும் ஆள்மாற்றம் நடக்கிறது.
ஆட்சி மாற்றம் நடக்கவில்லை. ஊழல், லஞ்சம், பலாத்காரம், கொலை, கொள்ளை, தனியார் மயம், இவைகள் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. என எல்லா அரசுகளுக்கும் பொதுவானது.
சிங்கள ராணுவம் தமிழர்கள் மீது திட்டமிட்ட இன படுகொலை நடத்தியது. இதனை கண்டித்து அ.தி.மு.க. அரசு சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது.
இதனை மனப்பூர்வமாக வரவேற்கிறோம். தனி ஈழம் குறித்த பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். தனி தமிழ் ஈழ சோசலிச குடியரசு அமைய வேண்டும்.
தனி ஈழம் மட்டும் தான் தமிழர்களின் பாதுகாப்புக்கு ஏற்றது. வருகின்ற 2016 தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு எடுத்து உள்ளோம்.
234 தொகுதிகளிலும் நமது வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். அவர்களுடைய பட்டியல் இன்னும் 6 மாதங்களில் வெளியிடப்படும்” என்று பேசினார்.
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக குரல், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ஆதரவாக குரல், இந்தியா இறையாண்மைக்கு எதிராக பேசியதாக, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகளான 128A, 143, 153A, 188 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் திருச்சி எடமலைபட்டி புதூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எடமலைப்பட்டி காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்தர் கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
……………………………………………………………………………………….
சீமான் போட்ட புதிய அணுகுண்டு பொய் !!
“பிரபாகரனை நான் சந்தித்தபோது, “உன் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் அணுகுண்டு போன்றவை……” என்று பிரபாகரன் சொன்னதாக சீமான் சொல்லுகிறார்.
இது சீமான் போடும் புதிய “அணுகுண்டு பொய்” என்பது தமிழகத்தில் உள்ள தமிழர்களுக்கும், ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கும் நன்றாக புரியும்.
சீமானின் வாயிலிருந்து வருவதெல்லாம் “பொய்” என்பதும், பொய்யை தவிர வேறொன்றுமில்லை என்பதும் ஈழத்தமிழர்கள் நன்கு அறிவார்கள்.
“தமிழீழம்” தனி தமிழ் ஈழ சோசலிச குடியரசாக அமைய வேண்டுமாம்? என்கிறார் சீமான். இதை யார் முடிவெடுப்பது?
தமிழ் ஈழம் சோசலிச குடியரசாக அமையவேண்டுமா? அல்லது முதலாளித்து அரசாக அமையவேண்டுமா என்பதை யார் முடிவெடுப்பது ஈழத்தமிழனா? அல்லது சீமானா?
முடிந்தால்…. முதலில் தமிழகத்தை தனிநாடாக அமைப்பதற்கு முயற்சி செய்யுங்கள். தமிழகம் தனிநாடாக அமையுமானால்… வெகு இலகுவாக தமிழீழத்தை பெற்றுவிடலாம்.
ஈழத்தமிழனுக்கு உசுப்பேத்தி.., உசுப்பேத்தி பிழைப்பு நடத்துகின்ற வேலையை தமிழக அரசியல் வாதிகள் நிறுத்தவேண்டும..
பிரபாகரனின் பேரை சொல்லி பிழைப்பு நடத்துவதையும் நிறுத்தவேண்டும.
சீமான் 234 தொகுதியிலும் தமது வேட்பாளர்களை நிறுத்துகிறாராம். சீமானுக்கு முழுத்தொகுதியிலும் 25000 வாக்குகள் விழுமா?