பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை எதிர்கொண்டு வாவ்ரிங்கா வெற்றியாளர் கிண்ணகத்தை வென்றுள்ளார்.
உலகின் முதலிட வீரரான ஜோகோவிச், பிரெஞ்சு ஓபனில் முன்னணி வீரர்களை வெற்றிகொண்டு வந்தார்.
9 முறை வெற்றியாளர் பட்டம் வென்ற ரபேல் நடாலை காலிறுதியில் வீழ்த்திய ஜோகோவிச், அரையிறுதி ஆட்டத்தில், இங்கிலாந்து வீரர் ஆண்டி முர்ரேவை தோற்கடித்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
இதனால் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வெல்வதற்கு ஜோகோவிச்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.
எனினும், இறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த வாவ்ரிங்கா 4-6 6-4 6-3 6-4 என்ற செட் கணக்கில் செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச்சை தோற்கடித்து வெற்றியாளர் பட்டத்தை வென்றுள்ளார்.
வாவ்ரிங்கா வெல்லும் இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
செரீனா வில்லியம்ஸ் சாதனை
அமெரிக்காவின் டென்னீஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தமது 20வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.
பிரான்ஸ் திறந்த நிலை டென்னிஸ் தொடரில் அவர் நேற்று வெற்றி பெற்றிருந்தார்.
டென்னிஸ் தரப்படுத்தலில் 13ம் இடத்தில் உள்ள லூசி சப்ரோவாவுடன் இடம்பெற்ற தொடரின் இறுதி போட்டியில், செரீனா 6-3 6-7 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
இதன் அடிப்படையில் வில்லியம்ஸ் தமது 20வது கிராண்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.
ஆண்கள் மற்றும் பெண்கள் என்ற பிரிவினை அல்லாது, 20 தடவைகள் கிராண்ஸ்லாம் பட்டத்தை வென்ற மூன்றாவது வீரராக செரீனா வில்லியம்ஸ் பெறுமை பெற்றுள்ளார்.
இதற்கு முன்னர், ஜேர்மனியின் ஸ்ரெப் க்ராஃப் முதல் முறையாக 22 கிராண்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளதுடன், அதிக பட்சமாக அவுஸ்திரேலியாவின் மார்கறெட் கோட் 24 முறை கிராண்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.