இளைஞன் ஒருவன், யுவதியை போல் ஆடைகளை அணிந்து பாடசாலை தவணைப்பரீட்சையில் தோற்றுவதற்கு போன விசித்திரமான சம்பவமொன்று கஸகஸ்தானில் இடம்பெற்றுள்ளது.
தன்னுடைய 17 வயதான காதலி, இறுதி தவணைப்பரீட்சையில் தோற்றவிருந்துள்ளார். எனினும், பரீட்சையில் தோற்றுவதற்கு காதலி அச்சம் கொண்டிருந்துள்ளார்.
காதலி அச்சம் கொண்டிருந்ததை கண்ட காதலன், தன்னுடைய காதலி போல ஆடைகளை அணிந்துகொண்டு வேடமிட்டுக்கொண்டு பரீட்சைக்கு தோற்றுவதற்காக பரீட்சை மண்டபத்துக்கு சென்றுள்ளார்.
பரீட்சை மண்டபத்துக்குள் நுழைவதற்கு முன்னர் அடையாள அட்டையை பரீட்சை மண்டப மேற்பார்வையாளர்கள் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இதன்போது அடையாள அட்டையில் இருந்த புகைப்படத்துக்கும் வந்திருந்த யுவதியின் முகத்துக்கும் வித்தியாசம் தென்பட்டுள்ளது.
அந்த இளைஞனின் போலியான தலைமுடி, ஒப்பனையினால் அவர், கதைக்கும் வரையிலும் அவர் ஆண் என்பதை கண்டறியமுடியவில்லை என்று பரீட்சை மண்டப மேற்பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் அந்த இளைஞனுக்கு பெருந்தொகையில் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. இளைஞனின் செயற்பாடு தொடர்பில் கேள்வியுற்ற வர்த்தகர் ஒருவர், இளைஞன் மீது அனுதாபப்பட்டு அந்த தண்டப்பணத்தை செலுத்தியுள்ளார் என்று செய்தி தெரிவிக்கின்றது.
ஆடைப் பெட்டியில் மறைத்து ஸ்பெயினுக்கு கடத்தப்பட்ட சிறுவன் தாயுடன் இணைந்தான்
09-06-2014
ஐவரி கோஸ்ட்டைச் சேர்ந்த அடோயு குவாட்டரா என்ற சிறுவனே தனது தாயாரான லூஸி குவா ட்டராவுடன் இணைந்துள்ளான்.லூஸியும் அவரது கணவரும் ஸ்பெயின் தீவான கனேரியில் வாழ்ந்து வருகின்றனர்.
ஸ்பெயினுக்கு வந்து அங்கு 7 வருடங்களாக சட்டபூர்வமாக தங்கியிருந்த தனது கணவருடன் இணைந்து கொண்டிருந்த லூஸி, தனது இரு பிள்ளைகளை தம்மிடம் அழைத்து வரும் முயற்சியில் ஈடுபட்டார்.
இந்நிலையில் அவரதும் அவரது கணவரதும் வருமானம் இரு பிள்ளைகளை வளர்ப்பதற்கு அதிகாரிகளால் மதிப்பிடப்பட்ட தொகையிலும் சிறிது குறைவாக இருந்ததால், அவர்களுக்கு அவர்களது மூத்த பிள்ளையான 11 வயது மகளை மட்டுமே வரவழைக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தமது மகனான அடோயுவை அழைத்துவர முடியாததால் சோகத்தில் வாடிய லூஸிக்கு ஆறுதலளிக்க வழிவகை தெரியாத அவரது கணவர், மொரோக்கோவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு பெருமளவு பணத்தைச் செலுத்தி தமது மகனை சட்டவிரோதமாக ஸ்பெயினுக்கு கடத்தி வர ஏற்பாடுகளை மேற்கொண்டார்.
இந்நிலையில் அந்த மொரோக்கோ பெண் அடோயுவை ஆடைப் பெட்டியில் மறைத்து வைத்து ஸ்பெயினுக்கு கடத்தி வந்த போது எல்லைக் காவல் அதிகாரிகளிடம் சிக்கிக் கொண்டார்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சட்ட விரோதமாக மகனை ஸ்பெயினுக் குள் அழைத்துவர முயற்சித்த குற்றச்சாட்டில் அடோயுவின் தந்தை கைதுசெய்யப்பட்டார்.
தற்போது ஒரு மாதம் கழித்து அடோயு தனது தாயாரான லூஸியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். இதன்போது மீளவும் இணைந்து கொண்ட தாயும் மகனும் ஒருவரையொருவர் கட்டியணைத்து கண்ணீர் சிந்தியமை அதிகாரிகள் உட்பட அனைவரையும் நெகிழ வைப்பதாக இருந்ததாக கூறப்படுகிறது.
அடோயுவின் தந்தையையும் விரைவில் பிணையில் விடுதலை செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்தார்.