2009 முதல் இதுவரை யாழ் குடாநாட்டில் 152 இராணுவ முகாம்களில் 59 முகாம்கள் அகற்றப்பட்டுள்ளதுடன் 19,159 ஏக்கர் நிலப்பரப்பு முற்றாக பொதுமக்களின் பாவனைக்கு விடுவிக்கப்பட்டிருப்பதாக யாழ் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த தெரிவித்தார்.

இவற்றில் பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயம் என கூறப்படும் இடத்தில் மாத்திரம் 2010ஆம் ஆண்டு தொடக்கம் இவ்வாண்டுவரை 6 கட்டங்களாக 6258 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ் குடாநாட்டில் படையினர் வசமிமிருந்த பொதுமக்களின் காணிகள் மீள ஒப்படை க்கப்பட்டுள்ளமை மற்றும் குடாநாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக நேரில் ஆராயும்பொருட்டு கொழும்பிலிருந்து அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகவியலாளர்கள் விமானம் மூலம் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதன்போது யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான விசேட சந்திப்பின்போதே இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு யாழ் கட்டளைத்தளபதி உட்பட அதன் கீழ் உள்ள பாதுகாப்பு படைப் பிரிவுகளின் உயரதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கையில்,

யாழ் குடாநாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன். இங்கு எந்தவிதமான பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லையெனத் தெரிவித்தார்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களைப் போல யாழ் குடாநாட்டில் பாதுகாப்பான சூழலே காணப்படுகிறது. இங்கு எந்த நேரத்தில் யாரும் எங்கும் சென்றுவரக்கூடிய அச்சுறுத்தல் இல்லாத சூழ்நிலை காணப்படுகிறது.

மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை சுமுகமான முறையில் எதுவித பயமும் இன்றி தென்பகுதி மக்களைப் போல முன்னெடுத்து வருகின்றனர்.

தென் பகுதியில் இருப்பதைப் போன்று யாழ்ப்பாணத்திலும் சிவில் நிர்வாகமே காணப்படுகிறது. இங்கு எதுவித இராணுவ நிர்வாகமும் இல்லையென்றும் கட்டளைத் தளபதி தெரிவித்தார்.

மனிதாபிமான நடவடிக்கை முடிவுற்ற பின்னர் 2009 ஆண்டுவரை யாழ் குடாநாட்டில் மாத்திரம் 152 முகாங்கள் காணப்பட்டன.

இதில் 59 முகாம்கள் முற்றாக அகற்றப்பட்டு அவை அமைக்கப்பட்டிருந்த காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

93 முகாம்கள் எஞ்சியுள்ளன. நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டே அரசாங்கம் தொடர்ந்தும் செயற்பட்டு வருகிறது.

2009ஆம் ஆண்டிலிருந்து இதுவரை வடக்கில் மொத்தமாக 19159.33 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

விசேடமாக 51,52,55 படைப்பிரிவின் கீழ் இருந்த 12,901 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டிருப்பதுடன்.

51 படைப்பிரிவின் கீழ் 1830 ஏக்கர் காணிகளும், 52 படைப்பிரிவின் கீழிருந்த 10,573 ஏக்கர் காணிகளும், 55 பிரிவின் கீழிருந்த 498 ஏக்கர் காணிகளுமாக மொத்தம் 12,901 ஏக்கர் காணிகள் பொதுமக்களின் பாவனைக்காக விடுக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், பலாலி உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் 2010ஆம் ஆண்டு முதல் 2015 ஏப்ரல் வரை 6 கட்டங்களாக மொத்தம் 6258.38 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டுள்ளன.

இதில் முதற் கட்டமாக 2010.10.28ஆம் திகதி 370.65 ஏக்கர் காணிகளும், 27.1.2010ஆம் திகதி 10952.13 ஏக்கர் காணிகளும், 09.03.2011ஆம் திகதி 1971.9 ஏக்கர் காணிகளும், 06.10.2011 ஆம் திகதி 354.94 ஏக்கர் காணிகளும், 29-11-2011 ஆம் திகதி 617.76 ஏக்கர் காணிகளும், 23-03-2015 மற்றும் 10-04-2015ஆம் திகதிகளில் 1000 ஏக்கர் காணிகளும் விடுவிக்கப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எஞ்சிய காணிகளையும் வழங்குவதற்கு நடவடடிக்கை எடுக்கப்படுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர்,

தேசிய பாதுகாப்பை கருத்தில்கொண்டே அரசாங்கம் எப்பொழுதும் செயற்பட்டு வருகிறது, அதன் அடிப்படையிலேயே தீர்மானங்களையும் எடுக்கும்.

சந்தர்ப்பம் தேவையை கருத்தில்கொண்டு எஞ்சிய காணிகளை விடுவிப்பதா இல்லையா என்பதை அரசாங்கம் தீர்மானிக்கும்.

எனவே இது தொடர்பில் இன்று, நேற்று, நாளை என்று குறிப்பிட்ட நாளைக் கூறமுடியாது. இராணுவத்துக்கென காணிகளை சுவீகரிக்கும்போது அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் மூலம்தான் அவற்றை பெற்றுள்ளது.

எனவே தேசிய பாதுகாப்பை கருத்தில்கொண்டு அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் விடுவிப்பது குறித்த விடயங்களை அரசு தீர்மானிக்கும் என்றார்.

வடக்கில் ஏதேனும் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதா என மற்றொரு ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளித்த யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி,

வடக்கில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்கப் போவதில்லை. அவ்வாறு தலைதூக்கா தவாறு போதியளவு பாதுகாப்பு நடவடிக் கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வளமையான முறையில் கண்காணிப்புகளை முன்னெடுத்துவருகின்றோம். யாழ் குடாநாட்டின் பாதுகாப்பில் எந்த அச்சுறுத்தலும் இல்லை. இன்றைய நிலை நாளை மாற்றமடையலாம் இதற்குத் தேவையான வசதிகளைக் கொண்டு படைகளின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் கூறினார்.

கண்ணிவெடி அகற்றல்

இதுவரை இராணுவம் மற்றும் ஹலோட்ரஸ்ட் நிறுவனம் ஆகியன இணைந்து வடக்கில் 99.44 வீதமான கண்ணிவெடிகளை அகற்றியுள்ளன.

0.56 வீதமே இன்னும் எஞ்சியுள்ளது. பற்றைக்காடுகள் உள்ளிட்ட சிறிய பகுதிகளிலேயே கண்ணிவெடி காணப் படுகிறது.

மொத்தமாக 155193 மிதி வெடிகளும், தாங்கிகளைத் தகர்க்கும் 664 கண்ணிவெடிகளும் எஞ்சிய 190174 கண்ணிவெடிகளுமாக மொத்தம் 346031 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version