புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் 17 வயதுடைய மாணவியொருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அச்சிறுமியின் காதலர் உட்பட மேலும் இரு இளைஞர்கள் புத்தளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் செவ்வந்தீவு பிரதேசத்தில் அமைந்துள்ள தென்னந்தோட்டம் ஒன்றில் வைத்தே இந்த மாணவி இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
கல்லடி பிதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமியின் காதலனான 24 வயது இளைஞனுடன், புத்தளம் செவ்வந்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 19 மற்றும் 21 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களால் கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட கல்லடி போதிராஜபுர பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மாணவி புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாணவி புத்தளம் நகரில் அமைந்துள்ள தனியார் கணினி பயிற்சி நிலையத்திற்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மாணவியின் காதலான இளைஞன் அவளை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு புத்தளம் செவ்வந்தீவு பிரதேசத்தில் அமைந்துள்ள தென்னந் தோட்டம் ஒன்றிற்குச் சென்று அங்கு அவளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
இதனை அங்கு மறைந்திருந்த மற்றைய இரு இளைஞர்களும் தங்களது கை தொலைபேசியில் வீடியோ எடுத்து அதனை மாணவி மற்றும் அவளது காதலனிடம் காட்டி அதனை இணையத்தில் பதிவேற்றப் போவதாக பயங்காட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து மாணவியின் காதலன் அவளை அங்கு விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதோடு, அங்கிருந்த மாணவியை மற்றைய இரு இளைஞர்களும் மாறி மாறி பல தடவைகள் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக மாணவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களான இளைஞர்களை புத்தளம் நீதிமன்றத்தில் நேற்று பொலிஸார் ஆஜர் செய்தபோது அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.