நேபாளத்தை கடந்த ஏப்ரல் மாதம் தாக்கிய 7.8 ரிச்டர் அளவான பாரிய பூமியதிர்ச்சியில் சிக்கி பல கிராமங்களிலுள்ள வீடுகள் இடிந்து விழுந்துள்ள நிலையில், மேற்படி பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் தமக்கென புதிதாக வீடொன்றை நிர்மாணிக்கும் முகமாக தமது சிறுநீரகங்களை உடல் உடலுறுப்புகளை கடத்துபவர்களுக்கு விற்றுள்ளமை தொடர்பான அதிர்ச்சிச் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நேபாள காத்மண்டு நகருக்கு சுமார் 12 மைல் தொலைவிலுள்ள ஹொக்ஸ் என்ற கிராமத்தில் வாழ்பவர்களில் ஏறத்தாழ அனைவருமே தமது சிறுநீரகமொன்றை விற்பனை செய்தவர்கள் என்பதால் அந்தக் கிராமம் தற்போது ‘சிறுநீரக கிராமம்’ என அழைக்கப்படுகிறது.
இது தொடர்பில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளுக்குத் தாயான கீதா என அழைக்கப்படும் பெண் விபரிக்கையில், உடல் உறுப்புகளைக் கடத்துபவர்களுக்கு தரகர்களாக செயற்படுபவர்கள் நேபாளத்தில் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு கிராமத்திற்கும் விஜயம் செய்து அங்குள்ள மக்களைத் தமது உடல் உறுப்புகளை விற்க ஊக்குவித்து வருவதாக கூறினார்.
அவர் தனது சிறுநீரகத்தை 1,300 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான தொகைக்கு விற்பனை செய்துள்ளார்.
தொடர்ந்து அவர் சிறுநீரக விற்பனையால் கிடைத்த பணத்தைப் பயன்படுத்தி ஹொக்ஸ் கிராமத்தில் நிலமொன்றை வாங்கி சிறிய வீடொன்றை கட்டியுள்ளார்.
சிறுநீரகங்களை விற்கத் தூண்டும் தரகர்கள் சிறுநீரகங்களை வெட்டி அகற்றிய பின்னர் அந்த உறுப்பு மீளவும் வளரும் என பாமர மக்களில் பலரை நம்ப வைத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
நேபாள அரசாங்கம் சிறுநீரகங்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் சட்டமொன்றை 2007 ஆம் ஆண்டில் நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.