பாக்தாத்: யாஸிதி மற்றும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பெண்களை அடிமைகளாக விற்பதற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் விலை நிர்ணயம் செய்து வைத்திருப்பது ஆவணம் ஒன்றின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவில் பல பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்வதுடன் அவர்களை சந்தையில் செக்ஸ் அடிமையாக விற்று வருகிறார்கள்.
தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவில் புதிய பகுதிகளை கைப்பற்றும் போது எல்லாம் அந்த பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்திச் செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.
இவ்வாறு கடத்திச் செல்லும் பெண்களை வெளிநாட்டில் இருந்து வரும் போராளிகளுக்கு திருமணம் செய்து வைப்பதாக தீவிரவாதிகள் கூறுகின்றனர்.
ஆனால், அப்பெண்கள் சந்தைகளில் செக்ஸ் அடிமைகளாக விற்கப்படுவது அங்கிருந்து தப்பி வந்த பெண்கள் சிலர் அளித்த தகவல்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
செக்ஸ் அடிமை சந்தைகளில் சிறுமிகளை சில நூறு ரூபாய் அல்லது ஒரு பாக்கெட் சிகரெட்டுக்கு தீவிரவாதிகள் விற்பனை செய்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், வயதுக்கு தக்க பெண்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் விலை நிர்ணயம் செய்து வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக ஆவணம் ஒன்று அந்நாட்டு பத்திரிக்கைகளில் வெளி வந்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- –
40 முதல் 50 வயதுக்குட்பட்ட யாஸிதி (அ) கிறிஸ்தவ பெண்ணின் விலை 50 ஆயிரம் தினார்
30 முதல் 40 வயதுக்குட்பட்ட யாஸிதி (அ) கிறிஸ்தவ பெண்ணின் விலை 75 ஆயிரம் தினார்
20 முதல் 30 வயதுக்குட்பட்ட யாஸிதி (அ) கிறிஸ்தவ பெண்ணின் விலை 1 லட்சம் தினார்
10 முதல் 20 வயதுக்குட்பட்ட யாஸிதி (அ) கிறிஸ்தவ சிறுமியின் விலை 1.5 லட்சம் தினார்
1 முதல் 9 வயதுடைய யாஸிதி (அ) கிறிஸ்தவ சிறுமியின் விலை 2 லட்சம் தினார்
இந்த ஆவணத்தில் உள்ள தகவலின் படி ஒரு நபர் மூன்று பெண்களுக்கு மேல் வாங்க அனுமதியில்லை. ஆனால், இதில் துருக்கி, சிரியா மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவருக்கு மட்டும் விதிவிலக்கு உண்டாம்.