லாஸ் ஏஞ்சலஸ் நகர வீதியில் தொப்புள் கொடி கூட அறுபடாத ஆண் குழந்தையை தள்ளு வண்டியில் வீசிச் சென்ற பாசக்காரத் தாயை போலீசார் இன்று கைது செய்தனர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரின் தொடக்கப் பள்ளி ஒன்றின் அருகே குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும் ஒரு தள்ளுவண்டி சுமார் 24 மணிநேரமாக அனாதையாக நின்றிருந்ததால், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் போலீசாருக்கு இதுபற்றி நேற்று முன்தினம் தகவல் தெரிவித்தனர்.
விரைந்துவந்து பார்த்த போலீசாருக்கு அந்த தள்ளுவண்டியில், பிறந்து 2 நாட்கள்கூட ஆகாத ஆண் குழந்தை தொப்புள் கொடியோடு வைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியளித்தது.
சற்றேறக்குறைய மயக்க நிலையில் கிடந்த அந்தக் குழந்தையை மீட்ட போலீசார், மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தையின் உடலில் நீர்ச்சத்து குறைந்து, சர்க்கரையின் அளவும் குறைந்திருந்ததாக பரிசோதித்த மருத்துவர்கள் கூறினர். எனினும், அவனது உடல்நிலை தேறி தற்போது நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவில் 2002-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டப்படி, குழந்தை பிறந்து 3 நாட்கள் முதல் 3 ஆண்டுகள் வரை ஆனாலும், அதன் தாய்மார்கள், குழந்தையை வளர்க்க இயலவில்லை என்றால் தீயணைப்பு துறையிடமோ அல்லது மருத்துவமனைகளிலோ தங்களது பெயரை வெளியிடாமல் விட்டுச் செல்லலாம்.
இச்சட்டத்துக்கு பிறகு இதுபோன்று பொது இடங்களில் குழந்தைகளை அனாதையாக்குவது குறைந்திருந்தது.
இந்நிலையில், லாஸ் ஏஞ்சலஸ் நகரில் சாலையோரம் தள்ளுவண்டியில் அனாதையாக கிடந்த இந்த ஆண் குழந்தை பற்றிய செய்தியை அமெரிக்காவின் அனைத்து ஊடகங்களும் வெளியிட்டன.
இதையடுத்து, விரைவாக விசாரணை நடத்திய போலீசார், அந்த குழந்தையின் தாய் யார்? என்பது தொடர்பாக இங்குள்ள சில ஆஸ்பத்திரிகளின் பிரசவ குறிப்பை மையமாக வைத்து விசாரணையை முடுக்கி விட்டனர்.
இதனையடுத்து, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் லாங் பீச் பகுதியைச் சேர்ந்த பெலென் ரமிரெஸ் என்ற 20 வயது பெண்ணை இன்று கைது செய்துள்ளனர்.
தள்ளுவண்டியில் அனாதையாக கிடந்த குழந்தை தன்னுடையதுதான் என வாக்குமூலம் அளித்துள்ள அவரை போலீசார் சிறையில் அடைத்து, மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
கடந்த 2001-ஆம் ஆண்டு 14 குழந்தைகள் அனாதையாக பொது இடங்களில் விடப்பட்டிருந்தன. அவற்றில் 11 குழந்தைகள் உடல்நிலை பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தன.
இதனாலேயே, 2002-ஆம் ஆண்டு இந்த புதிய சட்டம் உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டில் மட்டும் 9 குழந்தைகள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த குழந்தைகள் தத்தெடுக்க விரும்பிய சில நல்ல உள்ளங்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் மட்டும் சுமார் 75 முதல் 100 குடும்பங்கள் குழந்தையை தத்தெடுக்க காத்திருப்பதாக இங்குள்ள குழந்தைகள் மற்றும் குடும்பநல சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.
எனவே, இந்த குழந்தைக்கும் விரைவில் ஒரு நல்ல பெற்றோர் கிடைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.