யாழ்.போதனா வைத்தியசாலை பிரேத அறையில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்த குழந்தையின் முகத்தை எலிகள் கடித்த சம்பவமொன்று யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. இதனால் அச் சடலத்தை பொறுப்பேற்க பெற்றோர் மறுத்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உடுவில் பகுதியில் பிறந்து ஒரு நாளே ஆன குழந்தை ஒன்று மூச்சுத்திணறி இறந்துள்ளது. குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக யாழ்.போதனா வைத்தியசாலை பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டு இருந்த நிலையில் எலிகள் குழந்தையின் முகத்தை கடித்து குதறியுள்ளன.
இந்நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனையை மரண விசாரனை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதைத் தொடர்ந்து சடலத்தை பெற்றோர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது குழந்தையின் சடலம் அவலமான நிலைமையில் காணப்பட்டுள்ளது. இதன் காரணமாக சடலத்தை பெற்றோர்கள் ஏற்க மறுத்ததுடன் சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையினால் அடக்கம் செய்ய அனுமதித்து சென்றுள்ளார்கள்.
இதேவேளை எதிர்காலத்திலும் இறந்தவர்களுடைய உடலுக்கு இத்தகைய நிலைமைகள் ஏற்படாத வண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய கடமையும் பொறுப்பும் யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு உரியதென பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.