டுபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.
அவரது பேச்சை கேட்க ஏராளமான இந்தியர்கள் ஆர்வம் காட்டியதால் மைதானத்தில் நுழைவதற்காக முன்பதிவு செய்யப்பட்டது.
சுமார் 40 ஆயிரம் பேர் வரை அமர வசதியுள்ள டுபாய் கிரிக்கெட் மைதானத்தில் கூடுதல் வசதி செய்யப்பட்டு மொத்தம் 50 ஆயிரம் பேர் அமர ஏற்பாடு செய்யப்பட்டது.
இது தவிர மைதானத்துக்கு வெளியே இருந்து மோடியின் பேச்சை கேட்க 15 ஆயிரம் பேர் அமரும் வகையில் இட வசதி செய்யப்பட்டது.
அதில் மோடி பேசியபோது 50 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்கள் அங்கு உற்சாகமாக குவிந்தனர். இவர்கள் தவிர ஏராளமான உள்ளூர் மக்களும் வந்திருந்தனர். மாலை 3 மணி முதல் இந்தியர்கள் அங்கு வரத் தொடங்கினர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மைதானத்துக்குள் நுழைந்தனர்.
ஆங்கிலம், தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளிலும் மோடி யின் பேச்சு உடனுக்குடன் மொழி பெயர்க்கப்பட்டு வானொலியில் ஒலித்தன.
மோடியின் வருகையை முன்னிட்டு துபாய் கிரிக்கெட் மைதான பகுதியே விழாக்கோலம் பூண்டது. ஏராளமான மக்கள் வந்து குவிந்ததால் தற்காலிகமாக உணவுக் கடைகளும் திறக்கப்பட்டன.
மக்கள் வந்து செல்வதற்காக அரசு சார்பில் 200 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மோடி நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின.