இராணுவத்தினரே எனது கணவரை கூட்டிச்சென்றனர். அவர்களைத் தவிர எனது கணவரை யாரும் கூட்டிச்செல்லவில்லை. இராணுவத்தினர்தான் கூட்டிச்சென்றார்கள் என்பதை நான் உறுதியாககூறுவேன் என குருமண்வெளியை சேர்ந்த சூரியகுமார் ரதிதேவி சாட்சியமளிக்கும்போது தெரிவித்தார்.

<p>மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ளவர்களுக்கான காணாமல் போனவர்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள், களுவாஞ்சிகுடி பிரதேச செயலக மண்டபத்தில் சனிக்கிழமை (22) காலை ஆரம்பமாகியது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரதேச மக்கள் இங்கு சாட்சியங்களை பதிவுசெய்தனர். ஆணைக்குழுவுக்கு விண்ணப்பித்த 324பேர் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களிடம் தனித்தனியே விசாரணைகள் செய்யப்பட்டதுடன் அவர்களின் சாட்சியங்களும் ஆணைக்குழுவினால் பதிவு செய்யப்பட்டன. ஆணைக்குழு உறுப்பினர்களான டபிள்யு.ஏ.ரி.ரட்ணாயக்க, எச்.சுமணபால, மணோகரி ராமநாதன், சுரண்ஞனா வித்தியாரட்ண ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இங்கு சாட்சியளித்த சிலர் வழங்கிய தகவல்களை தருகின்றோம்.

குருமண்வெளியை சேர்ந்த சூரியகுமார் ரதிதேவி,

0021
ரதிதேவி
எனது கணவர் சூரியகுமார் 2008-12-08ஆம் திகதி இரவு 9.00மணிக்கு எங்களது வீட்டுக்கு சீருடையில் வந்த இராணுவத்தினர் எனது கணவரை கூட்டிச்சென்றனர்.  விசாரணைசெய்துவிட்டு விடுகின்றோம் என்று கூட்டிச்சென்றனர்.இராணுவத்தினரை தவிர வேறு யாரும் வரவில்லை.

எங்கள் வீட்டில் இருந்து நூறு மீற்றர் தூரத்தில் இராணுவத்தின் முகாம் உள்ளது.மோட்டார் சைக்கிளில் வந்தே இராணுவத்தினர் கொண்டுசென்றனர்.நானும் செல்லமுற்பட்டபோது என்னை அடித்துவிரட்டினர்.

காலையில் முகாமுக்கு வருமாறு கூறிச்சென்றனர்.  காலையில் இராணுவ முகாமுக்கு சென்றபோது நாங்கள் பிடித்துவரவில்லை.பொலிஸ் நிலையத்துக்கு சென்று முறையிடுங்கள் என்று கூறினர்.

நூறு மீற்றர் தூரத்தில் இராணுவமுகாம் இருக்கும்போது வேறுயாரும் வந்து எனது கணவரை பிடித்துச்செல்லவில்லை.நான் படைமுகாமுக்கு சென்றபோது எனது கணவரை கொண்டுசென்ற மோட்டார் சைக்கிள் அங்கு இருப்பதைக்கண்டேன்.

அங்கு இந்த சைக்கிளில்தான் எனது கணவரை கொண்டுசென்றார்கள் என்றபோது சைக்கிளில் இருந்த இலக்கத்தகடுகளை கழட்டிவிட்டனர்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணையின்போது இதனை தெரிவித்தேன்.களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக மானவடு இருந்தபோதும் இது தொடர்பில்மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது நான் தெரிவித்தேன்.

நாங்கள் வயல்செய்து அதில் வரும் வருமானத்தினைக்கொண்டே வாழ்ந்துவந்தோம். எனது கணவர் எந்த அமைப்புடனும் தொடர்புகொண்டவர் அல்ல.

நான்கு பிள்ளைகள் எனக்கு உள்ளது.அவர்களை வளர்ப்பதில் நான் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருகின்றேன்.எனது கணவரின் நிலை என்ன என்பது தொடர்பில் உரியவர்கள் எனக்கு தெரியப்படுத்தவேண்டும்.அவர் வருவார் என்ற எதிர்பார்ப்புடன் நான் இருந்துவருகின்றேன்.

துரைநீலாவணை,எட்டாம் வட்டாரம்,சாமித்தம்பி வள்ளிப்பிள்ளை: சாமித்தம்பி வள்ளிப்பிள்ளை


30-06-1990ஆம் திகதி ஜெயந்தன் என்னும் எனது மகன் 16வயது பாடசாலைக்கு செல்வதற்காக ஆயத்தமாகிக்கொண்டிருந்தபோது துறைநீலாவனையில் இராணுவத்தினர் சுற்றிவளைப்பு செய்து வீடுவீடாகச்சென்ற சோதனையிட்டுக்கொண்டிருந்தவர்கள் எனது மகனை அழைத்துச்சென்றனர்.

நான் பாடசாலைக்கு செல்லும் மகன் என அவனது பாடசாலை உபகரணங்களை காட்டியபோதிலும் மகனின் சேட்டைக்கழட்டி அவரின் கைகளை பின்புறமாக கட்டிக்கொண்டுசென்றனர்.

நாங்கள் பின்னால் சென்றபோது தடிகளினால் எங்களை இராணுவத்தினர் தாக்கினர்.அந்தவேளையில் எனது மகன் உட்பட கிராமத்தின் பலரை குளப்பகுதிக்கு கொண்டுசென்று வைத்திருந்தனர். அவர்களில் 17 இளைஞர்களை பிடித்துவிட்டு ஏனையவர்களை விடுவித்தனர்.

எல்லாத்தாய்மாறும் அழுதுகொண்டு பெரியநீலாவணை சந்திக்கு சென்றபோது ஐயுப்பின் மில் பகுதியில் நின்ற இராணுவத்தினர் தடிகொண்டு எங்களை தாக்கினர்.

எனது மகன் உட்பட 17பேரையும் கைகளைக்கட்டி பஸ்சில் ஏற்றி காரைதீவு நோக்கி கொண்டுசென்றனர். இது தொடர்பில் அன்று பிரஜைகள் குழு,மாவட்ட அரசாங்க அதிபர்,இராணுவ உயரதிகாரிகளுக்கு கடிதம் எழுதினோம்.

அம்பாறைக்கு சென்று பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரட்னவிடம் கடிதம் எல்லாம் கொடுத்தோம்.எல்லா இடத்துக்கும் சென்றோம்.இறுதியாக கொழும்புக்கும் சென்று தேடிப்பார்த்தோம்.

காரைதீவு முகாமுக்கு காலையில் எழும்பியவுடன் செல்வோம்.எமது மகன்களை காட்டுமாறு கெஞ்சுவோம்.உங்கள் பிள்ளைகள் எதுவித தொடர்பும் இல்லாவிட்டால் விடுவோம் என்பார்கள்.

தினமும் காலையில் சென்றால் மாலை வரை அப்பகுதியிலேயே கிடப்போம்.நாங்கள் நடந்துசெல்லும்போது கல்முனை முருகன் ஸ்ரோர் பகுதியில் சடலங்கள் கிடக்கும்.

ஒரு தடவை ட்ரக்டரில் சடலங்களை அடுக்கி வைக்கோல் இட்டு எரித்துள்ளதை நாங்கள் கண்டோம்.அந்தவேளையில் அப்பகுதியில் பெரும் துர்நாற்றம் வீசியது.
நான் இலங்கையில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் எனது மகனை தேடிவிட்டேன்.எங்கும் அவர் இல்லை.

வெல்லாவெளி, சின்னவத்தை பெருமாள்பிள்ளை தெய்வானை:

91ஆம் ஆண்டு பாடசாலைக்கு சென்ற எனது மகன் இதுவரையில் வீடுதிரும்பவில்லை.எங்கு சென்றார் யார் கொண்டுசென்றார்கள் என்று தெரியவில்லை.உரிய தரப்பினர் எனது மகன் தொடர்பான தகவல்களை பெற்றுத்தரவேண்டும்.

திருமதி திருநாவுக்கரவு,பெரியபோரதீவு,  2006ஆம்ஆண்டு மேசன் வேலைக்கு சென்ற எனது மகன் இதுவரையில் வீடுதிரும்பவில்லை.

பல்வேறு இடத்திலும் தேடினோம்.இதுவரையில் எந்த தகவலும் இல்லை.எனது மகன் காணாமல்போனதில் இருந்து எனக்கு மனநோய் ஏற்பட்டுவிட்டது.எதனையும் கதைக்கமுடியாத நிலையிலிருக்கின்றேன் என்றார்.

தேவப்போடி,தேற்றாத்தீவு,

07-07-2005 அன்று முல்லைதீவு,புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் தொழில்நுட்ப உத்தியோகத்தராக கடமையாற்றுவதற்கு சென்றவர் விடுதலைப்புலிகளினால் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

பத்து தினங்களுக்கு பின்னரே இது தொடர்பான தகவல்கள் எங்களுக்கு கிடைத்தது.பிரதேச செயலாளர் எங்களுக்கு இந்த தகவலை அறிவித்தார்.

நாங்கள் அங்கு சென்றபோது மகனை மீட்டுத்தருவதாக பல தடவைகள் உறுதியளித்து பிரதேச செயலாளர் ஏமாற்றினார்.

இறுதியாக முல்லைத்தீவு பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினத்திடம் சென்று முறையிட்டோம்.

அவர் விடுதலைப்புலிகளுடன் கதைத்து எனது மகனை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.விடுவிப்பது தொடர்பான தகவல்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை.

ஆனால் பிரதேச செயலாளரிடம் மகனை புலிகள் ஒப்படைத்தபோதும் அவரை பொறுப்பேற்க பிரதேச செயலாளா மறுத்ததன் காரணமாக மீண்டும் எனது மகன் சிறையில் அடைக்கப்பட்டார்.எனது மகனை மீட்டுத்தருவதாக பிரதேச செயலாளர் நாடகமாடினார்.

அதன்போது இறுதி யுத்ததத்தின்போது விமானத்தாக்குதல்கள் இடம்பெற்றபோது சிறைச்சாலைகளை புலிகள் திறந்துவிட்டதாகவும் இராணுவத்தின் பகுதிக்குள் எனது மகன் சென்றதாகவும் எனது மகனுடன் சிறையில் இருந்து வவுனியா இளைஞன் என்னிடம் தெரிவித்தார்.

ஆனால் இராணுவத்தின் பகுதிக்குள் வந்த எனது மகனின் நிலை இதுவரையில் தெரியவில்லை.ஆனால் எனது மகன் எங்கோ ஒரு இடத்தில் உயிரோடு உள்ளான்.

வீ.பாலநாயகி,பெரியகல்லாறு,
1990ஆண்டு 07ஆம் மாதம் பெரியகல்லாறு பகுதி நோக்கிவந்த இராணுவத்தினர் எனது தம்பி குலநாயகத்தினை அழைத்துச்சென்றனர்.

விசாரணைக்கு அழைத்துச்சென்ற அவர் இருக்காரா இல்லையா என்பது கூட தெரியாது.நான்கு வருடமாக தேடிவந்தேன்.நான்கு வருடத்துக்கு பின்னர் பிரதேச செயலகத்தினால் மரணச்சான்றிதழ் தந்தனர்.

இதேபோன்று 1985ஆம் ஆண்டு இரண்டு சகோதரர்களை நான் பறிகொடுத்தேன்.1985ஆம் ஆண்டு பங்குணி மாதம் ஒரு சகோதரரும் டிசம்பர் மாதம் ஒரு சகோதரரும் காணாமல்போனார்கள்.

ஒருவர் அரச உத்தியோகத்தர் மட்டக்களப்பில் இருந்து கல்லாறுக்கு பஸ்சில் வரும்போது கல்லடியில் விசேட அதிரடிப்படையினர் இறக்கியெடுத்து சுட்டுக்கொலைசெய்ததாக நேரில் கண்டோர் தெரிவித்தனர்.

மற்றைய சகோரன் வேலைக்கு சென்றவர் காணாமல்போனார்.இதுவரையில் அவர் தொடர்பிலும் எந்த தகவலும் இல்லை.

காணாமல்போனவர்கள் எங்கே?: ஆணைக்குழு முன்னால் உறவினர்கள்

ஆணைக்குழு விசாரணைகள் கடந்த ஒன்றரை வருடங்களாக நடைபெறுகின்ற போதிலும் இதுவரை இடைக்கால அறிக்கை எதுவும் வெளியாகவில்லை

இலங்கையில் போர்க்காலத்தில் காணாமல்போனவர்கள் பற்றிய விசாரணைக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 3ம் கட்ட விசாரணை தற்போது நடைபெறுகின்றது.

ஆணைக்குழு விசாரணைகள் கடந்த ஒன்றரை வருடங்களாக நடைபெறுகின்ற போதிலும் இதுவரை இடைக்கால அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.

அதிகளவான சாட்சியங்களை பதிவுசெய்ய வேண்டியிருப்பதால், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் விசாரணையின் போது ஆணைக்குழு உறுப்பினர்கள் தனித் தனியாக அமர்ந்து வாக்குமூலங்களை பதிவு செய்துவருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

நேற்று சனிக்கிழமையும் இன்று ஞாயிற்றுக்கிழமையும் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற விசாரணைக்கு 639 பேர் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டிருந்தார்கள்.

25 வருடங்களுக்கு முன்னர் காணாமல்போன தமது பிள்ளைகள் மற்றும் கணவன் பற்றியும் பல பெண்கள் வாக்குமூலம் அளித்தனர்.

அவர்களில் ஒருவரான துறைநீலாவணையை சேர்ந்த வள்ளிப்பிள்ளை 1990 ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் திகதி இராணுவ சுற்றிவளைப்பின் பின்னர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தனது மகன் உட்பட தமது கிராமத்தை சேர்ந்த 16 பேர் பற்றி இதுவரை தகவல் இல்லை என்று கூறினார்.

தமது உறவுகள் காணாமல்போன சம்பவங்களுடன் இராணுவம், பொலிஸ், விடுதலைப்புலிகள், சிறப்பு அதிரடிப்படை மற்றும் தமிழ் ஆயுதக்குழுக்கள் தொடர்புபட்டிருப்பதாகவே பலரும் தமது சாட்சியங்களில் தெரிவித்துள்ளார்கள்.

இருப்பினும் தற்போதைய அச்சமற்ற சூழ்நிலையிலும் சிலரிடம் இன்னமும் ஒருவித அச்சநிலை காணப்படுவதாகவும், அதனால் அடையாளம் தெரியாத ஆட்களே தங்களின் குடும்ப உறவினர்களை கடத்திச் சென்றதாக அவர்கள் தமது சாட்சியங்களில் கூறுவதை அவதானிக்க முடிந்ததாகவும் எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

நாளை திங்கட்கிழமையும் நாளை மறுதினமும் வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் அடுத்த அமர்வுகள் நடக்கின்றன.

காணமல் போனவர்களின் செவ்வியை இங்கே கேளுங்கள்…

Share.
Leave A Reply

Exit mobile version