சென்னை: ஒரு கோடீஸ்வரரையோ, வசதி படைத்தவரையோ திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசை இல்லை என்றும், எளிமையானவரைத் திருமணம் செய்து கொண்டு 3 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார் நடிகை நமீதா.
2002ம் ஆண்டு எங்கள் அண்ணா படம் மூலம் விஜயகாந்த் ஜோடியாக தமிழில் அறிமுகமான நடிகை நமீதா. கடந்த 13 வருடங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.
கடைசியாக 2010ம் ஆண்டு இளைஞன் படத்தில் நடித்திருந்தார் நமீதா. அதனைத் தொடர்ந்து எடை அதிகமானதால், சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார் அவர்.
எடை குறைந்தார்…
இந்நிலையில், தற்போது புதிய படம் ஒன்றிற்காக தனது எடையை 94 கிலோவில் இருந்து 18 கிலோ குறைத்து 76 கிலோவாக குறைத்துள்ளார். பிற நாட்டு படை பலத்தை விட எப்படி நமீதா எடை குறைந்தார் என்பதுதான் மக்களின் பேச்சாக உள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தார் நமீதா. அப்போது அவரது திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நமீதா அளித்த பதிலாவது, ‘திருமணத்துக்காக நான் உடல் மெலியவில்லை. படத்தில் நடிப்பதற்காகத்தான் நான் மெலிந்திருக்கிறேன், என்றாலும் நான் திருமணம் செய்துகொள்வேன்.
ஒரு கோடீஸ்வரரையோ, வசதி படைத்தவரையோ திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று எனக்கு ஆசை இல்லை. எளிமையானவராக இருந்தால் போதும். திருமணத்துக்குப்பின் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்வேன்’ என்றார்.