ஐநா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை எதிர்வரும் 16-ம் திகதி புதன்கிழமை முதல் பொதுப் பார்வைக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐநா மனித உரிமைகள் ஆணையர் செயித் அல் ஹுசைன் ஜெனீவாவில் 16-ம் திகதி காலை இந்த அறிக்கை பற்றிய செய்தியாளர் சந்திப்பை நடத்துவார் என்றும் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
l
‘அந்த அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ள விடயங்கள் மிகவும் பாரதூரமானவையாக இருக்கின்றன’ என்று இன்றைய முதல்நாள் ஆரம்ப உரையில் மனித உரிமைகள் ஆணையர் கூறியுள்ளார்.
‘பலனுள்ள பொறுப்புக்கூறல் நடைமுறை ஒன்றையும் மீண்டும் அப்படியான குற்றச்செயல்கள் நடக்காதிருப்பதையும் உறுதிப்படுத்துவதற்கான கடப்பாடு இலங்கையர்களளின் நன்மை கருதியும் எம்மீதான நம்பகத் தன்மை கருதியும் இந்தக் கவுன்சிலுக்கு இருக்கின்றது’ என்றும் செயித் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தொடரில் பங்கெடுத்துள்ள இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, கடந்த அமர்வில் விசாரணை அறிக்கையை வெளியிடாமல் இம்முறைவரை ஒத்திவைத்து புதிய அரசாங்கத்துக்கு அவகாசம் கொடுத்திருப்பதற்காக நன்றி கூறினார்.
‘தனித்தனியான பொறிமுறைகள்’
இலங்கை அரசியலமைப்பின் கட்டமைப்புக்குள் சுயாதீனமான- நம்பகத் தன்மை மிக்க விசாரணை பொறிமுறைகளை அரசாங்கம் உருவாக்கும் என்றும் உண்மையை கண்டறியவும் நீதியை நிலைநாட்டவும் இழப்பீடு வழங்கவும் மீண்டும் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும் தனித்தனியான பொறிமுறைகள் உருவாக்கப்படும் என்றும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
‘(ஏற்கனவே நடந்துள்ளதைப் போல பாரதூரமான மனித உரிமை மீறல்கள்) மீண்டும் நடக்காமல் இருப்பதற்கு தமிழ் மக்களின் துயரங்களுக்கு அரசியல்தீர்வு காண்பது தான் சிறந்த வழியாக இருக்கமுடியும்’ என்றும் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
அதற்காக புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்படவுள்ளதாகவும் மங்கள சமரவீர ஜெனீவாவில் உத்தரவாதம் அளித்துள்ளார்.
2014-ம் ஆண்டு மார்ச் மாத அமர்வின்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படியே இலங்கை மீதான விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட காலப்பகுதிக்குள், மோதலில் ஈடுபட்ட இரண்டு தரப்பினராலும் புரியப்பட்டதாகக் கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பில் விரிவான விசாரணை நடத்துவதற்காகவே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
B:B:C செய்தியை இங்கே கேளுங்கள்..
கடுமையான நிபந்தனையுடன் சிறிலங்காவிடம் கையளிக்கப்பட்ட ஐ.நா விசாரணை அறிக்கை
உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்கை விவகாரம் தொடர்பில் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளார்.
அதாவது உள்ளகவிசாரணை நடத்தப்படவேண்டுமா அல்லது சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டுமா என்பது தொடர்பில் மனித உரிமை ஆணையாளர் இன்று அறிவிப்பார்.
பெரும்பாலும் இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் விவகாரம் தொடர்பில் அவர் சர்வதேச விசாரணை ஒன்றை கோரமாட்டார் என்றும் உள்ளக விசாரணை பொறிமுறையை முன்னெடுக்க இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்படவேண்டும் என்பதனையே வலியுறுத்துவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் சார்பில் கலந்துகொள்ளவுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்றைய தினம் மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடரின் முதலாவது அமர்விலேயே உரையாற்றவுள்ளார்.
இந்த உரையின்போது இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச விசாரணை அவசியம் இல்லை என்றும் தமது அரசாங்கம் விரைவில் உள்ளக விசாரணை பொறிமுறையை ஆரம்பிக்கும் என்றும் உறுதியளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அறிக்கை ஜனாதிபதியிடம்
இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் இலங்கை குறித்து நடத்திய விசாரணையின் அறிக்கை இரகசிய ஆவணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த அறிக்கை ஜெனிவாக் கூட்டத் தொடரில் சில தினங்களில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.
ஐந்து தினங்களில் பதில்
அவ்வாறு மனித உரிமை பேரவையில் விசாரணை அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் வரை இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள விசாரணை அறிக்கை இரகசியமாகவே வைக்கப்படவுள்ளது.
அதாவது அறிக்கை ஜனாதிபதிக்கு கிடைத்து ஐந்து தினங்களுக்குள் அதற்கு அரசாங்கத்தின் சார்பில் பதில் அளிக்கப்பட்ட பின்னர் அறிக்கை ஜெனிவாவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
30 ஆம் திகதி விவாதம்
அத்துடன் எதிர்வரும் 30 ஆம் திகதி இந்த அறிக்கை மீதான விவாதம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் நடைபெறவுள்ளது.
இந்த விவாதத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் ஆரம்பித்து வைக்கவுள்ளதுடன் அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், ரஷ்யா, சீனா, தென்னாபிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் உரையாற்றவுள்ளனர். இறுதியாக இலங்கையின் சார்பில் அமைச்சர் ஒருவர் உரையாற்வுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ மற்றும் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் ஜெனிவா சென்றுள்ளளனர்.
அந்தவகையில் இன்று ஆரம்பமாகவுள்ள கூட்டத் தொடரில் அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றவுள்ளார். தூதுக்குழுவினர் கடந்த சனிக்கிழமை ஜெனிவா நோக்கி பயணமாகினர்.
அமெரிக்காவின் பிரேரணை
அது மட்டுமன்றி இம்முறை கூட்டத் தொடரில் அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவாக பிரேரணை ஒன்றை கொண்டுவரவுள்ளது.
மனித உரிமை விவகாரங்களில் முன்னேற்றத்தை வெளிக்காட்டும் நோக்கில் உள்ளக விசாரணை பொறிமுறையை முன்னெடுப்பதற்கு இலங்கைக்கு போதிய கால அவகாசம் ஒன்றை வழங்கவேண்டும் என்ற நோக்கில் இந்த பிரேரணையை அமெரிக்கா கொண்டுவரவுள்ளது.
இலங்கைக்கு அண்மையில் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால் இதனை அறிவித்திருந்தார்.
இலங்கையில் நல்லிணக்கத்துக்கு வித்தியாசமான சூழல் ஏற்பட்டுள்ளதை நாங்கள் அங்கீகரிக்கின்றோம். நாங்கள் இலங்கைக்கு சார்பாக கொண்டுவரவுள்ள பிரேரணையானது தற்போது இலங்கை தொடர்பில் வெளிவரவுள்ள அறிக்கையை ஆய்வுசெய்வதாகவும் அமையும் என்றும் பிஷ்வால் குறிப்பிட்டிருந்தார்.
முன்னைய பிரேரணைகள்
இதற்கு முன்னர் கடந்த 2012 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் ஒரு பிரேரணை கொண்டுவரப்பட்டது.
அந்த பிரேரணைக்கு ஆதரவாக 26 நாடுகளும் எதிராக 15 நாடுகளும் வாக்களித்தன. 8 நாடுகள் நடுநிலை வகித்தன.
கடந்த 2013 ஆம் ஆண்டிலும் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் ஒரு பிரேரணை கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது.
இந்த பிரேரணைக்கு ஆதரவாக 31 நாடுகளும் எதிராக 15 நாடுகளும் வாக்களித்தன. ஒரு நாடு நடுநிலை வகித்தன.
அத்துடன் கடந்த 2014 ஆம் ஆண்டும் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக ஒரு பிரேரணையை கொண்டு வந்தது. இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 23 நாடுகளும் பிரேரணையை எதிர்த்து 12 நாடுகளும் வாக்களித்தன.
அத்துடன் 12 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்திருந்தன
விசாரணை செயற்பாடுகள்
இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு அமைவாகவே இலங்கை தொடர்பான உள்ளக விசாரணையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் முன்னெடுத்தது.
நல்லிணக்க ஆணைக்குழு கவனம் செலுத்திய காலப் பகுதியில் இலங்கையில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்கள் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை அலுவலகம் விசாரணை நடததியது.
ஐ.நா. அலுவலகத்தின் விசாரணைக்காக 12 பேர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டிருந்தது. அத்துடன் இந்த விசாரணைக் குழுவுக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் மூன்று விசேட நிபுணர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
மூன்று நிபுணர்கள்
இந்த நிபுணர் குழுவில், சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளவரும், பின்லாந்து அரசின் முன்னாள் அதிபருமான மார்ட்டி அதிசாரி, நியூசிலாந்தின் முன்னாள் ஆளுநர் சில்வியா கார்ட்ரைட் மற்றும் பாகிஸ்தான் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜெஹாங்கீர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
பிற்போடப்பட்ட அறிக்கை
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் 28 ஆவது கூட்டத் தொடரில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவிருந்தது.
எனினும் இலங்கையின் ஆறுமாத கால நல்லாட்சி அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய அந்த அறிக்கை பிற்போடப்பட்டது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் மனித உரிமை பேரவையின் தலைவருக்கு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே இலங்கை குறித்த அறிக்கை செப்ம்டெம்பர் மாதத்துக்கு பிற்போடப்பட்டது. அதன்படி இம்முறை 30 ஆவது கூட்டத் தொடரில் அறிக்கை கொண்டுவரப்படவுள்ளது.
இலங்கைக்கு திருப்பு முனை
அந்தவகையில் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா பிரேரணை ஒன்றை கொண்டுவரவுள்ளமை மற்றும் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான விவாதம் போன்ற முக்கிய விடயங்கள் இலங்கை தொடர்பில் இடம்பெறவுள்ளமையினால் இம்முறைக் கூட்டத் தொடர் முக்கியத்துவமிக்கதாக காணப்படுகின்றது.
விசேட உப குழுக் கூட்டம்
இதேவேளை அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவாக பிரேரணை ஒன்றை கொண்டுவரவுள்ளமை தொடர்பில் உறுப்பு நாடுகளின் ஆதரவை பெறும் நோக்கில் விசேட உபகுழுக் கூட்டம் ஒன்றை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அலுவலகத்தில் இந்த விசேட உபகுழுக் கூட்டம் நடைபெறவுள்ளதுடன் இதில் கலந்துகொள்ளுமாறு மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளுக்கும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது அமெரிக்கா ஏன் இலங்கைக்கு ஆதரவாக பிரேரணை கொண்டுவருகின்றது என்பதற்கான விளக்கம் அளிக்கப்படவுள்ளதுடன் அதற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கையும் விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
47 உறுப்பு நாடுகள்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இந்த பேரவையில் 47 உறுப்பு நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன.
கூட்டத் தொடரின்போது உலக நாடுகளின் மனித உரிமை நிலைவரங்கள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது.
சில நாடுகளின் மனித உரிமை நிலைமை தொடர்பில் விவாதங்கள் நடத்தப்படவுள்ளதுடன் பிரேரணைகளும் தாக்கல் செய்யப்படவுள்ளன.