பிரான்ஸ் நாட்டில் புயல் காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால் நகரங்களுக்குள் வெள்ளம் புகுந்ததில் 16 நபர்கள் பலியாகியுள்ளதாகவும் பல நபர்கள் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று அதிகாலை முதல் பிரான்ஸ் நாட்டின் தென் கிழக்கு பகுதிகளில் புயல் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
மழையின் தீவிரம் அதிகரித்து வந்ததால் Antibes, Cannes உள்ளிட்ட நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து புகுந்ததால் ஏற்பட்ட சேதாரங்களில் இதுவரை 16 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், பல நபர்கள் காணாமல் போயுள்ளதால் அவர்களை கண்டுபிடிக்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து இன்று அவரசர செய்தி வெளியிட்டுள்ள பிரான்ஸ் நாட்டு அதிபரான பிராங்கோயிஸ் ஹாலண்டே, வெள்ளம் தாக்கியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறிய அவர் காணாமல் போயுள்ள நபர்களை மீட்கும் பணியில் விரைந்து ஈடுப்பட்டு வரும் மீட்புக்குழுவினருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
நைஸ் நகரில் மட்டும் எதிர்ப்பார்த்ததை விட 10 சதவிகிதம் மழையின் அளவு கூடுதலாக பதிவாகியுள்ளது.
மழை வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பியாட் நகரிற்கு நேரடியாக விஜயம் செய்த அதிபர் அங்கு வசிக்கும் மக்களிடம் புயலின் தாக்கம் மேலும் அதிகரிக்க உள்ளதால் தக்க முன்னேற்பாடுகளுடன் எச்சரிக்கையாக இருக்கும்படி தெரிவித்துள்ளார்.
மழையின் தீவிரத்தால் Brague என்ற ஆற்றின் கரைகள் உடைந்து வெள்ளம் அந்த பகுதியில் இருந்த நகரத்திற்கு புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.