17 வயதான சிறுமியை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அவரைத் தாயாக்கிய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரபேபிடிய பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, சந்தேகநபர் அச் சிறுமியின் தாயாரது இரண்டாவது கணவர் எனவும் தெரியவந்துள்ளது.

கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த அச் சிறுமி திடீர் சுகயீனம் காரணமாக தொழிற்சாலை அதிகாரிகளால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

பின்னர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த 14ம் திகதி பெண் குழந்தை ஒன்றுக்கு தாயாகியுள்ளார்.

இதனையடுத்து வைத்தியசாலை அதிகாரிகள் சிசுவின் தந்தை குறித்து வினவியபோது, சிறுமிக்கு நடந்த அநீதி தெரியவந்துள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் வீட்டில் யாரும் இல்லாத சமயம் சிறுமியை கொலை செய்துவிடுவதாக மிரட்டி சந்தேகநபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதோடு பின்னர் ஜனவரி மாதமளவிலும் அவ்வாரே நடந்து கொண்டதாக சிறுமி தெரிவித்துள்ளார்.

பின்னர் இதனை வௌியே கூறினால் கொலை செய்து விடுவதாக சந்தேகநபர் மிரட்டியதால் இவற்றை மறைக்க தான் ஆடைத் தொழிற்சாலைக்கு பணிக்காக சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைதான சந்தேகநபரை சிலாபம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிலாபம் பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version