கட்டடங்கள் நிறைந்த மாநகரங்களை காங்கிரீட் காடுகள் என்று இயற்கை வறட்சியை நினைத்து அழைக்கிறோம்.
காடுகளே வீடுகளாகும் காலம் திரும்பினாலும் ஆச்சரியமில்லை.
அதுவும் நல்ல சுற்றுச்சூழல் பாதுகாப்புதான். மரத்தில் அமைந்த வீடுகள் பற்றி இதற்குமுன் அறிந்திருந்தாலும், உலகிலே மிகப்பெரிய, வித்தியாசமான, காங்கிரீட் வீடுகளுக்கு இணையான வசதிகளுடைய வீடு என்றால் அது அமெரிக்காவில் டென்னெஸீ நகரில் க்ராஸ்வில்லே கிராமத்தில் பீஹைவ் தெருவில் உள்ள இந்த வீடுதான்.
இது ’மந்திரியின் மரவீடு’ என்றும் அந்த பகுதியில் பிரபலமாக அழைக்கப்படுகிறது.
இந்த வீட்டின் உரிமையாளரும், அமைச்சருமான ஹோரஸ் புர்கஸ், கடவுளோடு தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட ஒப்பந்த உரிமையின் அடிப்படையில் கட்டிக்கொண்டிருப்பதாக சிலாகித்து கூறுகிறார்.
இதற்கான பொருள் உதவியும் அவரே சரியான நேரத்தில் சரியான அளவில் கொடுத்ததாக முழுமனதுடன் நம்புகிறார்.
பார்க்க பிரமிக்க வைக்கும் இந்த பிரம்மாண்ட வீடு, உயிருள்ள 6 ஓக் மரங்களின் ஆதாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீடு முழுவதுமே மரபலகைகளாலும் சட்டங்களாலுமே அமைக்கப்பட்டுள்ளது.
1993 ம் ஆண்டிலிருந்து இதுவரை 250,000 ஆணிகள் வீடு அமைக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வீடு முழுமையாக கட்டிமுடிக்க 14 ஆண்டுகள் ஆகியுள்ளன.
கட்டி முடிக்கப்பட்டதிலிருந்து எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து வந்த வீடு, 2012 க்கு பிறகு அந்த ஊரின் தீயணைப்பு பாதுகாப்பு துறையின் உத்தரவால் மூடப்பட்டது.
தீயணைப்பு துறையின் விதிகளுக்கு உட்பட்டு இந்த வீடு அமைக்கப்படவில்லை என்றும் முற்றிலும் மரத்தால் அமைக்கப்பட்டிருப்பதால் துரதிர்ஷ்ட வசமாக தீவிபத்து ஏற்பட்டால், வீடு முற்றிலும் சேதமடைவதோடு, அதனோடு தொடர்புடைய மரங்கள் செறிந்த காடும் அழிந்து பெரும் சேதம் ஏற்படக்கூடும் என எச்சரித்து வசிக்க தடைவிதித்து மூடிவிட்டனர்.
இந்த வித்தியாசமான முயற்சி, உலகை இப்போது திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. அதனால், அதன் உழைப்பு வீணாகவில்லை.
வசதிக்காக காங்கிரீட் வீடுகளில் வாழ்பவர்களின் மனதுக்குள்ளும் மரவீடுகளின் ஆசை குடிகொண்டிருக்கிறது. காடுகளில் வாழ்ந்தபோது மரங்களில் பரண் அமைத்து வாழ்ந்த பரம்பரைகள் தானே நாம். அதன் விருப்ப மிச்சங்கள்தான் இதற்கான தூண்டுகோலாக இப்போதும் வெளிப்படுகிறது.