வடக்கு மாகா­ண­ச­பையில் நயி­னா­தீவு தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மானம், அர­சியல் அரங்கில், சர்ச்­சை­களை ஏற்படுத்தியிருக்கிறது.

நயி­னா­தீவின் பின்­னணி, வடக்கு மாகா­ண­ச­பையின் தீர்­மானம் இந்த இரண்­டையும் சரி­வரத் தெரிந்து கொள்­ளா­ம­லேயே, சிங்­கள, தமிழ் அர­சியல் தலை­வர்கள் சர்ச்­சைக்­கு­ரிய கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர்.

நாக­பூ­சணி அம்மன் ஆல­யத்­தினால் வர­லாற்று ரீதி­யாகப் பிர­பல்யம் பெற்­றி­ருந்த நயி­னா­தீவு, இப்­போது நாக­வி­கா­ரை­யினால், “நாக­தீப” என்று மாறும் நிலையை எட்­டி­யி­ருக்­கி­றது.

இலங்­கைக்கு இரண்­டா­வது தடவை வருகை தந்­த­போது நாக­தீ­பவில் புத்தர் ஓய்­வெ­டுத்தார் என்று மகா­வம்சம் போன்ற சிங்­கள, பௌத்த வர­லாற்று நூல்கள் கூறு­கின்­றன.

அதே­வேளை, நயி­னா­தீவு, முன்னர் தமிழ் பௌத்­தர்­களின் ஆதிக்­கத்தில் இருந்த ஒன்று என்ற வர­லாற்றுத் தக­வல்­களும் உள்­ளன. இப்போது, நயி­னா­தீவின் வர­லாற்றுச் சூழல் மாற்­றி­ய­மைக்­கப்­பட்டு வரு­கி­றது.

காலா கால­மா­கவே, நயி­னா­தீவு என்ற நிர்­வாகப் பெய­ரினால் அழைக்­கப்­பட்டு வந்த இந்த சிறிய தீவு, இப்­போது நாக­தீப என்று அர­சாங்க பதி­வு­க­ளிலும் இடம்­பெறத் தொடங்­கி­யுள்­ளது.

உள்­ளூ­ராட்சி மாகா­ண­ச­பைகள் அமைச்­சினால் நிய­மிக்­கப்­பட்ட, உள்­ளூ­ராட்சி எல்­லை­களை மீளாய்வு செய்யும் குழுவின் தக­வல்­களின் அடிப்­ப­டையில், நில அளவைத் திணைக்­க­ளத்­தினால் தயா­ரிக்­கப்­பட்டு 2013ஆம் ஆண்டு வெளி­யி­டப்­பட்ட வேலணைப் பிர­தேச சபையின் வட்­டார வரை­ப­டத்தில், நயி­னா­தீவு என்­பது நாக­தீப என்றே குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

வேலணைப் பிர­தே­ச­ச­பையின் இரண்டு வட்­டா­ரங்கள் நயி­னா­தீவில் உள்­ளன.

இவை முன்னர் நயி­னா­தீவு 8ஆம் வட்­டாரம், நயி­னா­தீவு 12ஆம் வட்­டாரம் என்றே அழைக்­கப்­பட்டு வந்­தது.

ஆனால், புதிய வரை­ப­டத்தில், நயி­னா­தீவு 8ஆம் வட்­டாரம் என்­பது நாக­தீப வடக்கு என்றும், நயி­னா­தீவு 12ஆம் வட்­டாரம் என்றும் நாக­தீப தெற்கு என்றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.

நயி­னா­தீவு என்று அழைக்­கப்­பட்டு வந்த நிலையில், திடீ­ரென அது நாக­தீப என்று மாற்­றப்­பட்­டதன் பின்­னணி சர்ச்­சைக்­கு­ரி­யது.

கடந்த நூற்­றாண்டின் நடுப்­ப­கு­தியில், தான் நயி­னா­தீவில், பௌத்த பிக்கு ஒருவர் சிறி­ய­ள­வி­லான பௌத்த மத­வ­ழி­பாட்டை ஆரம்பித்திருந்தார்.

அதன் பின்னர் அது நாக­வி­கா­ரை­யாக மாறி­யது. இப்­போது, அது இரண்டு விகா­ரை­க­ளாக உரு­வெ­டுத்­தி­ருப்­ப­துடன், அங்கு சுமார் 50 அடி உய­ரத்தில் புத்தர் சிலை ஒன்று அமைப்­ப­தற்­கான பணி­களும் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

அதே­வேளை, நயி­னா­தீவு இப்­போது பௌத்­தர்­களின் முக்­கிய யாத்­திரைத் தல­மா­கவும் மாறி­யி­ருக்­கி­றது.

புத்தர் வருகை தந்த இடம் என்ற வர­லாற்றுக் கதைகள் இருப்­பதால், நயி­னா­தீவு பௌத்­தர்­களின் ஒரு யாத்­திரைத் தல­மாக மாறியிருப்பதில் ஆச்­ச­ரி­ய­மில்லை.

 

ஆனால், இதனை வைத்து, முற்­றிலும் தமி­ழர்கள் வாழும் பிர­தேசம் மெது­மெ­து­வாக சிங்­கள மயப்­ப­டுத்­தப்­ப­டு­வது தான் ஆபத்­தா­னது.

நயி­னா­தீவு என்ற பெயரே, அர­சாங்க பதி­வே­டு­களில் காலம் கால­மாக இருந்து வந்­தி­ருக்­கின்ற நிலையில், திடீ­ரென அது நாக­தீப என்று மாற்­றப்­பட்­டது, நிச்­சயம் உள்­நோக்­க­மு­டைய செய­லா­கவே இருக்கும்.

இந்த இடத்தில், நயி­னா­தீவு தமிழ்ப் பெயர் அல்ல அதுவும், வட­மொழிப் பெயரே என்றும், நாக­தீபம் தான் சரி­யான தமிழ்­பெயர் என்ற வாதங்­களும் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

நாக­தீபம் என்று அர­சாங்கப் பதி­வே­டுகள் இப்­போது மாற்­றப்­ப­ட­வில்லை. அது நாக­தீப என்றே மாற்­றப்­பட்­டுள்­ளது.

நாக­து­வீப என்ற சிங்­களச் சொல் மருவி நாக­தீப என்று மாறி­யி­ருக்­கி­றது.

இந்த பெயர் மாற்றம், முன்­னைய ஆட்­சியின் போது இடம்­பெற்­றது என்­றாலும், அத்­த­கைய தவ­று­களைச் சீர்­செய்ய வேண்­டிய பொறுப்பு புதிய அர­சாங்­கத்­துக்கும் இருக்­கி­றது.

நாக­தீப வடக்கு, நாக­தீப தெற்கு என்று சிங்­க­ளத்தில் அழைக்­கப்­ப­டு­வது சர்ச்­சை­யல்ல.

தமிழில் யாழ்ப்­பாணம் என்று அழைக்­கப்­ப­டு­வது சிங்­க­ளத்தில் யாப்­ப­னய என்றும், பருத்­தித்­து­றையை அவர்கள் பேது­ரு­து­டுவ என்றும் அழைக்­கின்­றனர். அது சர்ச்­சை­க­ளுக்­கு­ரிய விட­ய­மன்று.

ஆனால், நயி­னா­தீவு விவ­கா­ரத்தில், தமிழ் மற்றும் ஆங்­கி­லத்தில் நாக­தீப என்று திணிக்­கப்­பட்­டுள்­ளது தான் தமிழ்­மக்­களை விசனம் கொள்ள வைத்­தி­ருக்­கி­றது.

இந்த சிக்­க­லுக்கு உள்­ளூ­ராட்சி மாகா­ண­ச­பைகள் அமைச்சுத் தான் காரணம்.

இதனால் தான், இந்த விட­யங்­களைச் சுட்­டிக்­காட்டி, நயி­னா­தீவு என்ற பெயரை மீண்டும் குறிப்­பிட வேண்டும் என்று வடக்கு மாகா­ண­சபை தீர்­மா­னத்தை நிறை­வேற்­றி­யது.

உள்­ளூ­ராட்சி மாகா­ண­ச­பைகள் அமைச்­சிடம் வேண்­டுகோள் விடுத்தே இந்த தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது.

அதன் பிரதி குறிப்­பிட்ட அமைச்­சுக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டது.

இந்த தீர்­மா­னத்தை அரை­கு­றை­யாக விளங்கிக் கொண்ட முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ, வடக்கு மாகா­ண­சபை, நாக­தீப என்ற பெயரை நயி­னா­தீவு என்று பெயர் மாற்றம் செய்து தீர்­மானம் நிறை­வேற்­றி­யி­ருப்­ப­தா­கவும், ஊர்­களின் பெயர்­களை மாற்றும் அதி­காரம் வடக்கு மாகா­ண­ச­பைக்கு கிடை­யாது என்றும் கூக்­குரல் எழுப்­பினார்.

மஹிந்த ராஜபக் ஷ இந்த தீர்­மா­னத்தை தெளி­வாகப் புரிந்து கொண்டும், அவ்­வாறு கூறி­யி­ருந்­தா­ரே­யானால், நாக­தீப என்று பெயர் மாற்றம் செய்­யப்­பட்­டதன் பின்­ன­ணியில் அவரும் இருந்­தி­ருக்­கிறார் என்றே கருத வேண்டும்.

இப்­போது, சிங்­கள இன­வாதம் கக்கும் அர­சியல் தலை­வர்கள், நாக­தீ­பவை நயி­னா­தீவு என்று அழைக்க வேண்டும் என்று வடக்கு மாகாணசபை தீர்­மானம் நிறை­வேற்­றி­யி­ருப்­ப­தா­கவே கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர்.

நாக­தீ­பவின் பெயரை மாற்­றினால், இலங்­கை­யி­லுள்ள அத்­தனை தமிழ்க் கிரா­மங்­களின் பெயர்­க­ளையும் அழிப்போம் என்று சூளு­ரைத்­தி­ருக்­கி­றது இரா­வண பலய என்ற அமைப்பு.

இதற்­கி­டையே, உள்­ளூ­ராட்சி மாகா­ண­ச­பைகள் அமைச்சர் பைசர் முஸ்­த­பாவும், இந்த விவ­கா­ரத்தின் பின்­ன­ணியைப் புரிந்து கொள்ளாமல், நாக­தீ­பவின் பெயரை மாற்ற முடி­யாது என்று கூறி­யி­ருந்தார்.

இரா.சம்பந்தன்தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­தனும் கூட, நாக­தீப என்­பதை நயி­னா­தீவு என்று பெயர் மாற்­றப்­ப­டு­வதை தாம் ஏற்கவில்லை என்றும், வடக்கு மாகா­ண­சபைத் தீர்­மானம் முட்­டாள்­த­ன­மா­னது என்று தெரி­வித்­த­தாக ஆங்­கில நாளிதழ் ஒன்று குறிப்­பிட்­டி­ருந்­தது.

இந்தச் செய்தி திரி­பு­ப­டுத்­தப்­பட்­ட­தாக இருக்­கலாம் என்ற போதிலும், அதற்கு, இது­வரை சம்­பந்தன் மறுப்பு எதையும் வெளி­யி­ட­வில்லை என்­பதைக் கொண்டு, அதனை அவ­ரது கருத்­தா­கவே எடுத்துக் கொள்ள வேண்­டி­யி­ருக்­கி­றது.

நயி­னா­தீவு விவ­கா­ரத்தில், உண்­மை­யையும் பின்­ன­ணி­யையும் தெரி­யாமல் தான் அர­சியல் தலை­வர்கள் கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர்.

தற்­போ­தைய சூழலில், நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வதே முக்­கி­ய­மான விட­ய­மாக பேசப்­ப­டு­கி­றது.

ஆனால், நயி­னா­தீவு விவ­கா­ரத்தில் நல்­லி­ணக்­கத்­தையும் நம்­பிக்­கை­யையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்குப் பதி­லாக அவ­நம்­பிக்­கையும் அச்­சமும் தான் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

யாழ்ப்­பாண குடா­நாட்டு மக்­க­ளி­டையே நயி­னா­தீவு என்று அழைக்­கப்­பட்ட இடம், திடீ­ரென நாக­தீப என்று மாற்­றப்­படும் போது, தமிழ் மக்கள் அதனை அச்­சத்­துடன் தான் பார்ப்­பார்கள் என்­பதில் சந்­தே­க­மில்லை.

முற்­றிலும், தமி­ழர்கள் வாழ்ந்த, பகு­தி­களை சிங்­களப் பெயர்­களின் ஊடாக அழைக்க முற்­படும் போது அது தமிழ் மக்­களைச் சந்­தேகம் கொள்ள வைக்கும்.

முன்னர் எந்த விகா­ரையும் இல்­லாத பகு­தி­களில் எல்லாம் இப்­போது விகா­ரைகள் முளைத்­தி­ருக்­கின்­றன. அர­ச­ம­ரங்­களின் கீழ் பிள்ளையார் அமர்ந்­தி­ருந்த இடங்­களில் இப்­போது புத்தர் வீற்­றி­ருக்­கிறார்.

மாத­கலில் சம்­பில்­துறைப் பகுதி ஜம்­பு­கோ­ள­பட்­டுன என்று பெயர் மாற்­றப்­பட்டு, அங்கும் ஒரு விகாரை முளைத்­தி­ருக்­கி­றது. அந்த விகாரையைக் கட்­டி­யது கடற்­ப­டையே.

இது­போன்று வடக்­கிலும் கிழக்­கிலும் பல இடங்­களில் மாற்­றங்கள் நிகழ்ந்­துள்­ளன.

இலங்­கையின் வடக்கில் தமிழ் பௌத்தம் இருந்­த­தற்­கான வர­லாற்றுத் தட­யங்கள் மறைக்­கப்­பட்டு, இப்­போது வடக்­கையும் சிங்­கள பௌத்த மயப்­ப­டுத்தும் பணிகள் நடக்­கின்­றன.

முல்­லைத்­தீவில், கொக்­கி­ளாயில், மாங்­கு­ளத்தில், மாத­கலில், நாவற்­கு­ழியில் என்று புதிய விகா­ரைகள் முளைக்­கின்­றன.

இந்த விகா­ரைகள் தனியே வழி­பாட்டு இடங்­க­ளா­கவோ யாத்­திரைத் தலங்­க­ளா­கவோ மட்டும் இருந்து விடப் போவ­தில்லை.

அவை காலப்­போக்கில், சிங்­களப் பெயரில் அழைக்­கப்­பட்டு, சிங்­கள இட­மாக- குடி­யி­ருப்­பு­க­ளாக மாற்­றப்­பட்டு விடும் ஆபத்து உள்­ளது தான் பிரச்­சினை.

நயி­னா­தீவு, நாக­தீப ஆக்­கப்­பட்­டது போன்று தான், வடக்­கிலும் கிழக்­கிலும் பல தமிழ் கிரா­மங்­களின் பெயர்கள் சிங்­கள மயப்படுத்தப்பட்டன.

இதனால், தமி­ழரின் பூர்­வீக நிலங்­க­ளாக இருந்த அந்தக் கிரா­மங்கள் இப்­போது சிங்­களக் கிரா­மங்­க­ளாக மட்டும் மாற­வில்லை.

அவற்­றுக்கு வர­லாற்றுக் கதைகள் இட்­டுக்­கட்­டப்­பட்டும் வரு­கின்­றன.

முல்­லைத்­தீ­வுக்குத் தெற்கே மண­லாறு மறைந்து வெலி­ஓயா நிலைத்துப் போனது. மண்­கிண்­டி­மலை, பின்னர் ஜன­க­புர ஆனது.

திரு­கோ­ண­ம­லையில் முத­லிக்­குளம், மொர­வெவ ஆகிப்­போ­னது. கும­ரே­சன்­க­டவை, கோம­ரக்­க­ட­வெல ஆனது.

வவு­னி­யாவில் கொக்­க­டி­வான்­குளம், கலா­போ­வெவ என்று மாறி­யது. பாவற்­குளம் அவ­ரந்­த­லாவ ஆனது. கொக்­கு­வெளி, கொக்­கெ­லிய ஆக மாறி­யது.

இப்­படி, வவு­னியா, முல்­லைத்­தீவு, திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை மாவட்­டங்­களில் தமி­ழரின் பூர்­வீக கிரா­மங்­களும் நிலங்களும், சிங்­களப் பெயர்­க­ளாக மாற்­றப்­பட்­டன.

அதன் தொடர்ச்சி தான் நயி­னா­தீ­வுக்கும் நடந்­தி­ருக்­கி­றது.

நயி­னா­தீவு என்ற பெயர் அரச நிர்­வாகப் பதி­வே­டு­களில், நாக­தீப என்று மாற்­றப்­படும் போது காலப்­போக்கில் அதுவே நிலைத்து விடும் ஆபத்து உள்­ளது.

இது வாழைப்­ப­ழத்தில் ஊசி ஏற்­று­வது போலத் தான். அதனைத் தான் முன்­னைய அர­சாங்கம் செய்­தி­ருந்­தது.

ஆனால், இப்­போ­தைய அர­சாங்­கமும் அதற்குத் துணை­போ­கி­றது என்­ப­தையே, நயி­னா­தீவில் பெர­ஹெர மாவத்தை என்று, அண்மையில் அங்குள்ள வீதிக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ள சம்பவம் உறுதி செய்திருக்கிறது.

நயினாதீவில் உள்ள ஒரு வீதிக்கு பெயர் சூட்டும் அதிகாரம், ஒரு கடற்படைத் தளபதிக்கு இருக்கிறதா என்ற கேள்வியும் உள்ளது.

ஏனென்றால், அந்த வீதியை திறந்து வைத்தவர் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர குணவர்த்தன தான்.

கடந்த 3ஆம், 4ஆம் திகதிகளில் புதிய நாகதீப திரிபிடக மாகாசெய தூபிக்கு முடி அணிவிக்கும் நிகழ்வின் போது தான் இந்த வீதியும் திறக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் வழக்கில் இல்லாத பெரஹெர மாவத்த என்ற பெயர் முற்றிலும் தமிழர்கள் வாழும் பகுதிக்கு சூட்டப்பட்டதை உள்நோக்கமற்ற செயலெனக் கருத முடியாது.

நயினாதீவு பௌத்தர்களின் வழிபாட்டுத் தலமாக இருப்பது தமிழர்களைப் பொறுத்தவரையில் தவறானதொன்றாக பார்க்கப்படாது.

ஆனால், அதனை சிங்கள பௌத்த மயப்படுத்த முற்படும் போது, அது மதத் தலம் என்பதற்கு அப்பாற்பட்டதாக மாறிவிடும்.

நயினாதீவு விவகாரம் அதனை நோக்கித் தான் சென்று கொண்டிருக்கிறது.

அதனால் தான், வடமாகாணசபையின் தீர்மானத்தை சிங்கள அரசியல் தலைமைகள் இந்தளவுக்கு இனவாதப் பிரச்சாரமாக்கியிருக்கின்றனர்.

-கபில்-

Share.
Leave A Reply

Exit mobile version