மதுரை: எங்கள் முகாமுக்கு வந்து ரவுடிகள் தாக்குகின்றனர் என மதுரை அகதிகள் முகாமில் தங்கியுள்ள ஈழத்தமிழர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் நடந்த கலவரத்தால் சிங்கள ராணுவத்திடமிருந்து தப்பி, தமிழகத்தில் தஞ்சமடைந்த ஈழத்தமிழர்களுக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் முகாம்கள் அமைத்து கொடுத்தது அரசு.
இந்தியாவைத்தவிர மற்ற ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் தஞ்சமடைந்த தமிழர்கள் ஓரளவு நல்ல நிலையில் உள்ளனர். பல நாடுகளில் தொழில் அதிபர்களாகவும், மக்கள் பிரதிநிதிகளாகவும் சிறந்து விளங்குகிறார்கள்.
காரணம், அகதிகளாக வந்தவர்களுக்கு மனிதாபிமான ரீதியில் அந்த நாட்டு அரசுகள் உதவுகிறது. கல்வி, வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்குகிறது. முக்கியமாக அகதிகளை மரியாதையாக நடத்துகிறது.
ஆனால், தொப்புள் கொடி உறவென்றும், கடல் பிரித்தாலும் மொழியால் இணைந்தவர்கள் என்றும் தமிழகத்திற்கு அகதிகளாக வந்த ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள், கிட்டத்தட்ட சிறையில் வாழ்வது போலவே வாழ்கிறார்கள்.
காவல்துறையும், உளவுத்துறையும் அவர்களை பயங்கரவாதிகளைப் போலவே எப்போதும் கண்காணித்து வருகிறது. அரசு நிர்வாகமோ, அவர்களை எக்ஸ்ட்ரா லக்கேஜ் போலவே ஏதோ கடமைக்கு மாட்டுத்தொழுவத்தைவிட மோசமான ஒரு தங்குமிடத்தை ஒதுக்கி, மாதாந்தோறும் டீ செலவுக்கே போதாத சிறு உதவித்தொகையை வழங்கி, அகதிகளை நாங்கள்தான் காப்பாற்றுகிறோம் என்று வெளி உலகத்திற்கு காட்டிக்கொண்டிருக்கிறது.
‘தமிழ் எங்கள் உயிர், ஈழத்தமிழர் என் சகோதரர்…!’ என்று நரம்பு புடைக்க பேசும் நம்மவர்கள், முகாம் என்ற கொட்டடியில் வேதனையுடன் காலம் தள்ளி வரும் ஈழ அகதிகளை பற்றி ஒரு நாளும் கவலைப்பட்டதில்லை.
தமிழக முகாம்களில் வசிக்கும் அகதிகளை வேலைக்கு அழைத்துச் சென்று மிக குறைந்த கூலி கொடுக்கும் கொடுமையையும் நம்மவர்கள் செய்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நரக வாழ்க்கை வாழும் அகதிகளிடம், சுற்றுப்புறத்தில் வசிப்பவர்களாவது கனிவுடன் நடந்து கொள்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.
இந்த நிலையில்தான் இன்று காலை மதுரை கலெக்டரிடம் மனு கொடுக்க, மதுரை ஆனையூர் முகாமை சேர்ந்த ஈழத்தமிழர்கள் கண்ணீருடன் வந்தனர்.
அவர்களிடம் பேசினோம். “எங்க தலைவிதியால இப்படியொரு நிலையை கடவுள் எங்களுக்கு கொடுத்துட்டான். எங்களுடைய உறவென்றுதான் இங்குள்ள மக்களை நினைக்கிறோம்.
கடந்த சில மாதமாக எங்கள் முகாமுக்குள் சில ரவுடிகள் புகுந்து எல்லோரையும் அடிக்கிறார்கள், உதைக்கிறார்கள். போலீசில் புகார் கொடுத்தால் அவர்களும் ரவுடிகளுக்கு சப்போர்ட் செய்கிறார்கள்.
எங்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை. கடந்த வாரம் எங்க பசங்க ஐந்து பேரை கத்தி, அரிவாளால் கடுமையாக தாக்கி காயப்படுத்தி விட்டார்கள். இப்போது அவர்கள் வைத்தியசாலையில் இருக்கிறார்கள். இதுவரை போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை, நாங்கள் நிம்மதியாக வாழ வழி செய்யுங்கள்” என்றார்கள்.
கலெக்டர் அலுவலக அதிகாரிகள், மனுவுக்கு நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் உறுதி கூறி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
செ.சல்மான்
செந்தமிழ் டமிழன் சீமான், நெடுமாறன், வைக்கோ…போன்றவர்களுக்கு இச்சசெய்தி சமர்ப்பணம்.