சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சேவைகளை துவக்க காலதமாதமாகும் என விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் மகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.

இன்னமும் இரண்டு நாட்கள் வரை சென்னை விமான நிலையத்தில் சேவைகளைத் துவக்க சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மகேஷ் ஷர்மா செய்தியாளர்களிடம் கூறினார்.

விமான நிலையத்தின் ஓடுத்தளங்களில் வெள்ளம் வடிந்துள்ளபோதும், அதன் முழுமையான பாதுக்காப்புத்தன்மை உறுதி செய்யப்பட்ட பிறகே சேவைகள் தொடங்கப்படும் எனவும் அவர் அப்போது குறிப்பிட்டார்.

சென்னை விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானங்களில், பாம்புகள் உள்ளிட்ட எண்ணற்ற விஷப்பூச்சிகள் காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாகவே பயணிகளின் முழுமையான பாதுக்காப்பை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

ரயில் சேவைகள்

இதற்கிடையே சென்னை எழும்பூரிலிருந்து தாம்பரம் வரையிலான புறநகர் ரயில் சேவைகள் இன்று காலை முதல் துவக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் சென்னையில் உள்ள மாநகர் போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் உள்ளூர் பேருந்துகளின் சேவை முழுமையாக இலவசம் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை முடல வரும் செவ்வாய்கிழமை வரையில் இந்த உள்ளூர் இலவச பேருந்து சேவைகள் வழங்கப்படும்.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து வட மாவட்டங்களுக்கான சிறப்பு ரயில் சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இருந்தப்போதும் இது தொடர்பான அறிவிப்புகள் பெரும்பாலும் செய்தி தொலைக்காட்சிகள் வாயிலாகவே தெரிவிக்கப்படுவதால், மின்சார தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளால், அது தொடர்பான தகவல்கள் தாமதமாகவே பெறப்படுவதால் அது பயனளிக்கவில்லை என பொது மக்கள் குறை கூறுகின்றனர்.

151201184024_chennaiairportrains_512x288_bbctamil_nocredit

சென்னையில் மக்கள் நெரிசல் அதிகமாக காணப்படும் எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

அத்தியாவசியப் பொருட்கள், சேவைகள்

பால் உள்ளிட்ட உணவு தட்டுப்பட்டுகளை தீர்க்கும் நோக்கத்தில், அரசாங்கம் துரித நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ வசதிகளை முழுமையாக வழங்க அரசு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

சென்னையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் வடிய துவங்கியுள்ள சூழலில், மின்சார சேவைகள் படிப்படியாக துவக்கபடுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இருந்தப்போதும் அப்பகுதிகளில், கழிவு நீர் தேங்கியுள்ளதால், துர்நாற்றம் வீசுவதாகவும், சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் வேதனை வெளியிட்டுள்ளனர்.

இதன் காரணமாக வீடுகளில் வசிக்க முடியாத சூழல் நிலவுவதாகவும், உடமைகளை இழந்துள்ளதாலும், ஏ.டி.எம். உள்ளிட்ட வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாலும், நிவாரண பணிகளை மட்டுமே மக்கள் நம்பியுள்ள சூழல் நீடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நாளை ஞாயிற்றுகிழமையும் சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், அனைத்து வங்கிகளும் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் கூட சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாலும், செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட சென்னையை சுற்றியுள்ள ஏரிகள் நிரம்பியே உள்ளதாலும், மீண்டும் வெள்ளம் உண்டாகுமோ என்கிற அச்சத்திலேயே மக்கள் வாழ்கின்றனர்.

சென்னையில் பெரும்பாலான வெளியூர் வாசிகள் தங்கள் ஊருக்கு திரும்பத் துவங்கியுள்ள சூழலில், சென்னைக்கு நிவாரண பொருட்கள் தற்போது வந்து குவியத் துவங்கியுள்ளது.

கடற்படையை சேர்ந்த கப்பல்கள் மற்றும் விமான படையின் விமானங்களின் முயற்சியால் அதிக அளவிலான நிவாரண மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அதேப்போல் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தங்களால் இயன்ற அளவு பல மாவட்டங்களிலிருந்து நிவாரணப் பணிகளை கொண்டுவருகிறார்கள்.

கடலூர் உள்ளிட்ட மற்ற பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் இந்த நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

சென்னையில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்ற ஆளில்லாத போதும், மருத்துவ மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் கூட மூடப்பட்டுள்ள சூழலிலும் கூட, அரசாங்கத்தால் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகள் சிறப்பாக செயலாற்றி வருவதை காணும் மக்கள் விரக்தியுடன் காணப்படுகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version