யுத்தமுமற்ற சமாதானமுமற்ற சூழலில் பெரும்பான்மை பிரதான கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் அமர்ந்திருக்கின்ற நிலையில் தமிழினத்தின் எதிர்காலம் எவ்வாறமையப்போகின்றது என்றதொரு வினா அனைவர் மத்தியிலும் உறைந்திருக்கின்ற நிலையில் கடந்த சனிக்கிழமையன்று தமிழ் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதையும் வலியுறுத்துவதையும் நோக்காகக் கொண்டு வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், வைத்திய நிபுணர் பு.லக் ஷ்மன், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தின் செயலாளர் ரி. வசந்தராஜா ஆகியோரை இணைத் தலைமையாகவும் மதத் தலைவர்களையும் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களையும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் உறுப்பினர்களாகக் கொண்டு தமிழ் மக்கள் பேரவை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறிருக்கையில் தமிழ் மக்கள் பேரவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு உடைச்சலை ஏற்படுத்துவதற்கு உருவாக்கப்பட்டுள்ளது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவடைந்து விட்டது, புதிய அரசியல் கட்சி ஆரம்பித்துவிட்டது போன்ற நேர்மறையான கருத்துக்கள் எழுந்த அதேசமயம் தமிழ் மக்களுக்காக கொள்கையுடன் செயற்படும் ஜனநாயக அமைப்பொன்று உருவாகிவிட்டது, அரசியல் தீர்வு நோக்கி பயணிப்பதற்காகவும் இனத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் இந்த அமைப்பு அர்ப்பணிப்புடன் செயற்படுமென ஆதரவான கருத்துக்களும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழ் மக்கள் பேரவை தொடர்பான இருவேறுபட்ட நிலைப்பாடுகள் காணப்படுகின்ற நிலையில் சில விடயங்களை ஆழமாக அவதானிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.
கடந்த காலம்
தமிழினத்தின் உரிமைகளுக்கான வேட்கைமிகு பயணம் எப்போதுமே தனித்துவமானது. உரிமைகள் மறுக்கப்பட்டு அடக்குமுறைக்குள் அமிழ்த்தப்பட்ட இனமாக்குவதற்கு பேரினவாதம் என்று முதன்முதலாக முனைந்ததோ அன்றிலிருந்து இன்றுவரையில் உரிமைகளையும் அபிலாஷைகளையும் பெற்றுக்கொள்வதற்காக தமிழினம் போராடிவருகின்றது.
போராட்ட வடிவங்கள் மாற்றமடைந்திருந்தாலும் இலக்கு ஒன்றாகத்தான் இருந்தது. அதனை அடைவதற்காக கொள்கையும் ஒன்றாகத்தான் இருந்தது.
தற்போதும் இருந்துவருகின்றது. கொள்கையில் பற்றுறுதியுடன் நின்று இலக்கை அடைவதென்பது முள்ளாணி மீதான பயணமென்பதை அப்போதைய அரசியல் தலைவர்களும், அதன்பின் ஆயுதமேந்திப்போரடியவர்களும் நன்கறிந்திருந்தனர்.
கொள்கை ரீதியாக உரிமைப்போராட்டத்தின் வேட்கை அகிம்சைவழியிலும் சரி ஆயுதவழியிலும் சரி முழுவீச்சுப்பெற்று உயரிய இடத்தில் காணப்படும்போது பேரினவாத ஆட்சியாளர்களின் பேரம்பேசல்களுக்கோ அல்லது பிரித்தாளும் தந்திரத்திற்குள்ளோ தமிழினத்திற்கு தலைமைதாங்க வருபவர்கள் சிக்கிக்கொள்வதென்பது தலைவிதியாகவே உள்ளது.
எத்தனையோ சதித்திட்டங்களுக்கு மத்தியிலும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமிழ் மக்கள் கொள்கையை விட்டு தடம்மாறியிருக்கவில்லை.
அரசியல் கட்சிகள், விடுதலைப்போராட்ட அமைப்புக்கள், தலைமை தாங்க முன்வந்தவர்கள் என்பவற்றுக்கும் பின்னால் வெறுமையாக செல்லவில்லை. மக்களின் கொள்கையை ஏற்று அதனை அடைவதற்கு திராணியுடைய சக்திகளின் பின்னாலேயே அணிதிரண்டனர்.
2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் அனைத்தையும் முடித்துவிட்டோமென அரசாங்கம் அறிவித்ததன் பின்னரான சூழலில் மிலேச்சத்தனமான செயற்பாடுகளால் தமிழினம் பெரும் அவலங்களை சந்தித்துள்ளது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.
கொள்கையின்பால் நின்று இலக்கை அடைவதற்காக அணிவகுத்துச் சென்றுகொண்டிருக்கும் இனமொன்றுக்கு இழப்புக்களும் ஏமாற்றங்களும், வலிகளும் புதியவையல்ல.
இருப்பினும் முள்ளிவாய்க்காலில் அனைத்தும் முடிந்துவிட்டதா என்றவொரு ஏக்கம் ஒவ்வொரு தமிழ்மகனினதும் அடிமனதில் இயல்பாக எழுந்திருந்தது என்பது மறுதலிக்க முடியாத யாதார்த்த உண்மையாகவிருக்கின்றது.
இத்தகைய சூழலில் தமிழர்களின் இலக்குகளை அடைவதற்கான பயணத்தை தொடருவதற்கான முழுப்பொறுப்பும் வடகிழக்கில் மக்கள் ஆணைபெற்றிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடம் சென்றடைந்தது.
அதற்கான வகிபாகத்தைப் இதயசுத்தியுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டிருந்தபோதும் கூட்டமைப்பு ஒரு கட்டமைப்பாக ஏகோபித்த செயற்பாடுகள் படிப்படியாக குறைவடைய ஆரம்பித்தன.
குறிப்பாக தமிழரசுக்கட்சி தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான உந்துதலை கட்சியினுள் அதீதமாக முன்னெடுக்க ஆரம்பித்தது.
அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் என்பன கூட்டமைப்புக்குள் விரிசல்கள் வலுத்திருந்தமையை வெளிப்படுத்தி நின்றன.
அந்த நிலைமைகளை அதன் தலைமையே ஏற்றுக்கொண்டிருந்ததோடு ஜனநாயக கட்டமைப்பில் அவ்வாறான நிலைமைகள் காணப்படுவது சகஜமானதெனவும், அதனை பெரிதுபடுத்தவேண்டிய அவசியமில்லையெனவும் கூறியிருந்தது.
எனினும் நாளொருமேனியும்பொழுதொரு வண்ணமுமாக தமிழரசுக்கட்சியின் தனிநபர்கள் சார்ந்த செயற்பாடுகள் உச்சகட்டடத்தை அடைந்துவந்தமையால் மாற்றுத்தலைமை அவசியம், கூட்டமைப்புக்கு நிகரான சக்தி உருவாக்கப்படவேண்டும் போன்ற கருத்துக்கள் அரசியல் ஆய்வாளர்கள், துறைசார் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் மற்றும் பத்தி எழுத்தாளர்களால் வெகுவாகச் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது.
மறுபுறத்தில் கூட்டமைப்பினை பிளவுபடுத்துவது தமிழர் அரசியல் பலவீனத்ததை ஏற்படுத்திவிடும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
தொடர்ந்த மறுதலிப்புக்கள்
யுத்தத்தின் பின்னரான நிலைமையில் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்குமளவிற்கு அதிகாரத்தைக்கொண்டிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மத்தியில் இருந்த பேரினவாத ஆட்சியாளர்களுக்கு சிம்மசொப்பனமாகவே இருந்தது.
அவ்வாறிருக்கையில், உரிமைகளுக்காக போராடும் மக்கள் சக்தி பெற்ற கூட்டமைப்பு கட்டமைப்பு சார் அமைப்பாக உருவாக்கப்படவேண்டும் என்பது மிகமுக்கியமான விடயமாகவிருந்தது.
விடேசமாக இலங்கை அரசியலின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி போன்றவற்றில் இருக்கும் கட்டமைப்புக்களுக்கு நிகராக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்யவேண்டும், அரசியல் தீர்வு திட்டம் தொடர்பாக நிபுணத்துவ குழு அமைக்கப்பட்டு வரைபு தயாரிக்கப்படவேண்டும்,
பொதுமக்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவமளிக்கப்பட்டு உள்வாங்கப்படவேண்டும், வெளியுறவுக்கொள்கைகள் வகுக்கப்பட்டு கையாள்வதற்கான குழுவொன்று அமைக்கப்படவேண்டும், மக்களின் பொதுப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான செயற்றிட்டங்கள் உருவாக்கப்படவேண்டும்,
இளைஞர் அமைப்புக்கள், கிராம மட்டத்திலான அமைப்புக்கள் உருவாக்கப்படவேண்டும், சிவில் அமைப்புக்கள், தமிழ்த்தேசிய கட்சிகள் அனைத்தையும் உள்ளடக்கிய தமிழ்த்தேசிய சபையொன்றை நிறுவுதல், வலுவான ஒரு ஊடகத்தை ஸ்தாபித்தல், விசேட சந்திப்புக்களின் போது ஒன்றுபட்ட கருத்தில் பரிந்துரைகளைச் செய்வதற்கான கலந்துரையாடல்கள், வெளிப்படைத்தன்மையான செயற்பாடு போன்ற கட்டமைப்பு சார் பரிந்துரைகளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் உட்பட துறைசர் நிபுணத்துவம் வாய்ந்தவர்களால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வலியுறுத்தப்பட்டு வந்தது.
இருப்பினும் இந்த விடயத்தில் தமிழரசுக்கட்சி நாசுக்கான நழுவல்போக்குகளையே கையாண்டு வந்தது.
அதுமட்டுமன்றி தமிழரசுக்கட்சியின் தனி ஆதிக்கத்தை வலுப்படுத்தும் செயற்பாடுகளே தொடர்ந்துகொண்டிருந்தமையால் கூட்டமைப்பின் கட்சிகளுக்குள் சமநிலைத்தன்மையென்ற நிலை உருவெடுத்தது.
அத்துடன் தமிழரசுக்கட்சியின் சின்னத்திலேயே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வந்தமையால் தமிழரசுக்கட்சி தானாகவே கையிலெடுக்கும் அதிகாரத்தை கட்டுப்படுத்துமளவிற்கோ பங்காளிக்கட்சிகளால் முடிந்திருக்கவில்லை.
இதனால் பாராளுமன்ற குழுக்கூட்டங்கள், ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் அனைத்துமே தீர்மானமின்றி நிறைவடைந்தன.
கூட்டமைப்பு பங்காளிகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தல் போன்ற ஒரு சில விடயங்களில் இணக்கம் காணப்பட்டிருந்தாலும் அதற்கு செயல்வடிவமளிக்கும் வகையிலான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. அதற்கான ஏதுநிலைகளை தமிழரசுக்கட்சி வழங்கியிருக்கவுமில்லை.
இவ்வாறான நிலைமைகள் தொடர்ந்தமை மட்டுமல்லாது ஜனாதிபதி தேர்தலின் பின்னரான நிலைமைகள் முற்றிலும் வேறுபட்டதாகவே இருந்தது.
விசேடமாக ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் முடிவு, அதன் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் 30ஆவதுமனித உரிமைபேரவைக் கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளுமளவிற்கு தீர்மானம் பலவீனமாக்கப்பட்ட நிலையில் அதற்கு ஏகோபித்த ஆதரவு,
2016ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் குறைகள் நிறைந்துள்ளன, வடகிழக்கிற்கு விசேடமாக எதுவுமே இல்லை என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதினாறு பாராளுமன்ற உறுப்பினர்களால் சபையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்ததோடு மட்டுமன்றி, பாதுகாப்பிற்கு வரலாறு காணாத நிதி ஒதுக்கப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட தவறவிடப்பட்டிருந்ததோடு, 16திருத்தங்கள் உள்வாங்குமளவிற்கு மோசமாக காணப்பட்டவொன்றுக்கு ஆதரவாக வாக்களிப்பு ஆகியவற்றை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நல்லெண்ண சமிக்ஞை என்ற பெயரில் செய்திருந்தது.
மேற்குறித்த இவ்விடயங்களின்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கூடியாராய்ந்திருக்கவில்லை, பங்காளிக்கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடியிருக்கவில்லை, தீர்மானம் எடுக்கப்பட்டமை தொடர்பில் தெளிவுபடுத்தல்கள் இல்லை, வெளிப்படைத்தன்மையில்லை என்பதை அனைவருமே ஏற்றுக்கொண்டனர்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கிடையில் கலந்துரையாடவில்லையென்பது ஒருபுறமிருக்கையில் தமிழரசுக்கட்சியினுள் கூட இவ்விடயங்கள் கலந்துரையாடப்பட்டு முடிவுகள் எட்டப்படவில்லை.
தற்போது அரசாங்கம் வாக்குறுதிகளை அள்ளிவழங்கியிருக்கின்றபோதும் அவற்றினை முன்னெடுப்பதற்கான சமிக்ஞைகளை காணமுடியாதிருக்கின்றது.
அவ்வாறிருக்கையில் நல்லெண்ண சமிக்ஞை என்ற நிலையில் அனைத்தையும் விட்டுக்கொடுத்துக்கொண்டிருக்கும் நிலைமையில் தமிழர் அரசியல் இந்தத் தலைமையிடம் இருப்பதைத் தொடர்ந்தும் அனுமதிக்கமுடியுமா என்றதொரு பெருவினா எழுந்தது.
அதன் பிரதிபலிப்பாகவும், வாக்களித்த மக்களுக்கு வெளிப்படைத்தன்மையற்ற நிலையில் மூடிய அறைகளுக்குள் நடைபெறும் உரையாடல்களும், அதனைத்தொடர்ந்து எடுக்கப்படும் தீர்மானங்களும், தனிக்கட்சி, தனிமனித முடிவுகளும் இலட்சியத்தால் ஒன்றுபட்டு கொள்கையின் மீது பற்றுறுதி கொண்டிருக்கும் தமிழ் மக்களின் தலை எழுத்தை தீர்மானிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாதென்பதற்காகவுமே தமிழ் மக்கள் பேரவை மக்கள் சார்ந்து செயற்படுவதற்காக உதயமாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் பேரவை
தமிழ்மக்கள் பேரவையானது, தமிழ்மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு வரைபை தயாரித்தல், ஐ.நா. மனித உரிமை பேரவை பரிந்துரைகளை கண்காணித்தல், இழப்புக்களை சந்தித்த மக்களுக்கு நீதியைப்பெற்றுக்கொடுத்தல்,
ஆகியவற்றுடன் தனது பணியை மட்டுப்படுத்தாமல் தமிழ்மக்களின் கலாசார பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாத்தல், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சமூக மேம்பாட்டில் கரிசனை கொள்ளுதல், எமது பொருளாதாரத்தை, வளப்பயன்பாடுகளை உச்சமாக்குதல் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப் பணிகளிலும் ஈடுபடுத்திக்கொள்ளும் அதேவேளை அவற்றை மேற்கொள்வதற்காக பிரத்தியேகமான உபகுழுக்களும் பிரத்தியேகமான பிரச்சினைகளை கையாள்வதற்கான உபகுழுக்களும் அமைக்கப்படவுள்ளன.
தென்னாபிரிக்க விடுதலை அமைப்பான ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் அனுபவத்தை அடைப்படையாகக் கொண்டே தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் கடந்த காலங்களில் அரசியல் சார்ந்த பணிகளில் நேரடியாக பங்களிப்பை வழங்காத வைத்தியர்கள்: சிவில் அமைப்பு பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், மதத்தலைவர்கள், ஆகியோர் இணைந்து தமிழ் அரசியல் சார்ந்து பங்களிப்பை வழங்க முன்வந்திருப்பதும் உண்மையில் மக்கள் கருத்துகள் கேட்டறியப்படுவதும், அதை உள்வாங்கி சட்டங்களுக்கு அமைய சரியான திட்டத்தை வரைவதும் வரவேற்கத்தக்கதுமாகும்.
மக்கள் பேரவை ஆரம்பமான தினம் முதல் அதற்கான இணைய தளம் உருவாக்கப்பட்டு செய்தியை உடனே தரவேற்றம் செய்தமை மக்கள் கருத்துகள் உடனுக்குடன் அறியப்படுவதுடன் தங்கள் சார்ந்த விளக்கங்களும் உடனுக்குடன் தங்களுக்கான ஊடகம் ஒன்றினால் வெளியிடப்படுவதும் இலங்கை தமிழர் அரசியலில் இது தான் முதல் தடவையாகவுள்ளது.
ஒட்டமொத்தமாக பார்க்கையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினுள் பதினைந்து ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் எடுத்துரைக்கப்பட்ட கட்டமைப்பு சார் விடயங்கள், எதிர்கால இலக்குகள் என்பன நிர்ணயிக்கப்பட்டு இலங்கையில் சாந்தியும் சமாதானமும் நிலைக்கவேண்டும் என்பதையே வெளிப்படுத்திநிற்கின்றது.
அதிகரித்துள்ள எதிர்பார்ப்புக்கள்
தற்போதைய நிலையில் இரா.சம்பந்தன், மாவை.சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட தமிழரசுக்கட்சியின் ஒருதரப்பினருக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்குமிடையில் கருத்தியல் ரீதியான முரண்பாடுகள் காணப்படுகின்றன.
அதேநேரம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற அங்கத்துவத்தைப் பெறமுடியாதுபோன ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் தலைவர் சுரேஷ்பிரேமச்சந்திரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மீது ஏற்பட்ட அதிருப்தியே இவ்வாறானதொரு மாற்றுத்தரப்பு உருவாகுவதற்கு காரணமெனவும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பலத்தை பலவீனமாக்கி பிளவுகளை ஏற்படுத்துவதற்குமாகவே உருவாக்கப்பட்டதெனவும் கூறப்படுகின்றது.
ஆகவே இந்தக் கருத்துக்களை எதிர்காலத்தில் வரையறுக்கப்பட்ட காலக்கிரமத்தில் முன்னெடுக்கப்போகும் செயற்பாடுகளே பதிலடிவழங்கப்போகின்றன என்பதை இத்தரப்பினர் உணர்ந்துகொள்ளவேண்டும்.
அதேவேளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மக்கள் சார்பான ஜனநாயக ரீதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் அதேசமயம் ஒரு கட்சியின் கட்டமைப்புக்கு கோட்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அவ்விதமான செயற்பாடுகள் அமையக்கூடாது எனக் கூறியிருக்கின்றார்.
அதேநேரம் தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கமாகும். இது வரைகாலமும நாங்கள் அரசியல் தீர்வுபற்றி பேசுகின்றபோதும் எப்பேர்ப்பட்ட தீர்வை தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் என்பதை இதுவரையில் எவருமே வெளிப்படுத்தவில்லை.
சமூகப் பிரச்சினைகள் பலவுண்டு. அவை பற்றி நாங்கள் விஞ்ஞான ரீதியாக முறையாக ஆராய முற்படவில்லை. எனவே தான் அப்பேர்ப்பட்ட மக்கள் குழுவொன்று பல நல்ல காரியங்களில் செயற்பட தீர்மானித்ததையடுத்து நான் அதில் இணைந்துள்ளேன்.
இது புதிய அரசியல் கட்சியல்ல என சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். எனவே வெறுமனே முரண்பாடுகள் தோற்றம்பெற்றுவிட்டன என எழுந்தவாரியாக கூறுவதும் ஊடக அறிக்கைகளை விடுத்து பரஸ்பரம் குற்றம் சாட்டுவதும் பொருத்தமற்றதொன்றாகும்.
முன்னெடுக்கப்படும் அனைத்து விடயங்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்துவதற்கேயென பலர் அஞ்சுகிறார்கள்.
ஆனால் அனைத்து நடவடிக்கைகளுமே அவற்றை பலப்படுத்துவதாகவே இருக்கின்றது என்பதை தூரநோக்குடன் சிந்தித்தால் உணர்ந்துகொள்ளமுடியும்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தற்போது ஏற்பட்டிருக்கும் புதிய சூழலுக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பலத்த நெருக்கடிகள் காணப்படுகின்றன.
தீர்வு திட்டமொன்றை தயாரித்து 2016இற்குள் தீர்வை பெறுவதில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இருக்கும் பிரச்சினையை தீர்க்கவே தமிழ் மக்கள் பேரவையின் பங்களிப்பு இன்றியமையாதவொன்றாக இருக்கின்றது. இதனை தமிழரசுக்கட்சி உணர்ந்துகொள்ளவேண்டும்.
இலட்சியப்பயணத்தில் அடிப்படைக்கொள்கையென்பது மிகவும் முக்கியமானதொன்று. மாறுபடும் சூழலுக்கு அமைவாக அரசியல் போக்குகளை மாற்றுவதில் தவறில்லை.
விடுதலைக்கு ஏங்கிநிற்கும் இனமொன்றின் ஆணைபெற்ற அரசியல் தரப்பு அடிப்படைக்கொள்கையிலிருந்து விலகிநின்று சாதித்துவிடமுடியுமெனக் கருதுவதானது பகற்கனவே.
ஆகவே தற்போதும் காலம் சென்றுவிடவில்லை. தமிழரசுக்கட்சி சுயபரிசீலனை செய்து விடுதலைப் பயணத்தில் இலக்குநோக்கிய கொள்கைகளை மறுதலிக்காது அவற்றின்பால் நின்று புதிதாக உருவாகியுள்ள கட்டமைப்புடன் இணைந்து செயற்படுவது காலத்தின் கட்டாயம்.
அவ்வாறில்லாது நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்ற போக்கு கைவிடப்பாடது விரைந்து தீர்மானமெடுக்க தவறுவார்களாயின் அப்பணியை பொறுப்பேற்றுச் செய்வதற்காக கட்டமைப்பு சார் அமைப்பாக செயற்பட விளையும் பேரவை அரசியல் பிரவேசத்தை தவிர்க்க முடியாது போகலாம்.
-பிரம்மாஸ்திரன்–
தமிழ் மக்கள் பேரவை
இணைத்தலைவர்களாக:
01. திரு.க.வி.விக்கினேஸ்வரன் (முதலமைச்சர்- வடமாகாண அவை)
02. திரு.பி.லக்ஸ்மன் (மருத்துவர் – யாழ். போதனா மருத்துவமனை)
03. திரு.ரி.வசந்தராஜா (செயலாளர் – மட்டக்களப்பு சிவில் சமூக அமையம்)
நடவடிக்கை குழு உறுப்பினர்கள்:
01. சிவசிறீ சபா வசுதேவ குருக்கள் (நல்லை ஆதீனம்)
02. வண ஜெயபாலன் குரூஸ் (மன்னார்)
03. வண எஸ்.வி.பி மங்களராஜா
04. திரு சி.கே.சிற்றம்பலம் (உபதலைவர் – இலங்கை தமிழ் அரசு கட்சி)
05. நா.உ த.சித்தார்த்தன் (தலைவர் – புளட்)
06. கந்தையா பிரேமச்சந்திரன் (தலைவர் – ஈபிஆர்எல்எப்)
07. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (தலைவர் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)
08. பேராசிரியர் வி.பி.சிவநாதன் (போசகர் – யாழ்ப்பாணம் பொருளாதார நிபுணர் சங்கம்)
09. மருத்துவர் கே.பிரேமகுமார் (மேனாள் தலைவர் – விவசாய பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம்)
10. திரு கே.சதாசிவம் (மட்டக்களப்பு)
11. திரு எஸ்.சோமசுந்தரம் (பொருளாளர், மட்டக்களப்பு சிவில் சமூக அமையம்)
12. திரு முரளீதரன் (திருகோணமலை)
13. திரு வி கோபாலபிள்ளை (அம்பாறை)
14. மருத்துவர் ஜி.திருக்குமாரன் (தலைவர் – யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம்)
15. மருத்துவர் ஏ.சரவணபவான் (துணைத்தலைவர் – யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம்)
16. வண ரவிச்சந்திரன் (யாழ்ப்பாணம் மறைமாவட்டம்)
17. சட்டவாளர் வி.புவிதரன் (தலைவர் – தமிழ் சட்டவாளர்கள் சங்கம்)
18. திரு என்.சிங்கம் (செயலாளர் – தமிழ் சிவில் சமூக அமையம்)
19. திரு என்.இன்பநாயகம் (தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம்)
20. திரு எம்.சிவமோகன் (இரணைமடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு)
21. திரு தேவராஜ் (தலைவர் – வவுனியா சிவில் சமூக அமையம்)
ஏற்பாட்டு குழு:
01. மருத்துவர் எஸ் சிவன்சுதன்
02. திரு என் விஜயசுந்தரம்
03. திரு அலன் சதிதாஸ்
04. திரு எஸ் ஜனார்த்தனன்
இயங்கவுள்ள உபகுழுக்கள் :
01. அரசியல் துறை
02. கல்வித்துறை
03. நலத்துறை
04. சுற்றாடல் துறை
05. விவசாய துறை
06. மீன்பிடி துறை
07. மீள்குடியேற்ற துறை
08புனர்வாழ்வு துறை
09. கலை துறை
10. பண்பாட்டு துறை