வ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் புத்தாண்டை வரவேற்கிறார்கள். சிலர் கேக் வெட்டி, பலூன் வெடித்துக் கொண்டாடினார்கள்.

சவுதி அரேபியாவின் ஸ்டைல் சற்றே மாறுபட்டது. தலையை வெட்டி, துப்பாக்கியால் சுட்டு ரத்தக் கரங்களுடன் புத்தாண்டை வரவேற்றிருக்கிறது அந்நாடு

murder soudhi leftttஒரே நாளில் 47 குற்றவாளிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நாடு முழுவதிலும் உள்ள 12 சிறைச்சாலைகளைச் சேர்ந்த குற்றவாளிகள் கொல்லப்பட்டுவிட்டதாக கடந்த சனிக்கிழமை சவுதி அறிவித்துள்ளது.

8 சிறைச்சாலைகளைச் சேர்ந்த கைதிகளின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது. மிச்சமுள்ளவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இந்த அசாதாரணமான நிகழ்வை உலகம் எப்படி எதிர்கொண்டிருக்கிறது?

* கொல்லப்பட்டவர்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்னும் சவுதியின் அறிவிப்பை அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. ஏன் சவுதி இப்படியொரு முடிவை எடுத்தது என்பதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது என்று கூறியிருக்கிறார் சவுதி அரேபியாவுக்கான முன்னாள் தூதர் ஜான் ஜென்கின்.

*  அமெரிக்காவின் கூட்டாளியான பிரிட்டன், மிக மேலோட்டமான அதிருப்தியை வெளிப்படுத்திவிட்டு அடுத்த காரியத்தைப் பார்க்க ஆரம்பித்துவிட்டது.

லேபர் கட்சி மட்டும்தான் அழுத்தமாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரிட்டனின் அயல்நாட்டுக் கொள்கையை, குறிப்பாக சவுதியுடனான நெருக்கமான உறவை லேபர் கட்சி தொடர்ந்து விமர்சித்து வருவதை இங்கே நினைவில் கொள்ளலாம்.

*  மத்தியக் கிழக்கிலும்,  தெற்கு ஆசியாவிலும் ஷியா ஆதரவுக் குழுக்கள் சவுதிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தி முடித்துள்ளன. மரண தண்டனை கூடாது என்பதல்ல அவர்கள் நிலைப்பாடு.

கொல்லப்பட்ட 47 பேரில் ஷியா மதத் தலைவரான நிமர் அல் நிமர் என்பவரும் ஒருவர் என்பதுதான் எதிர்ப்புக்குக் காரணம்.

ஈரான் ஒரு படி மேலே சென்று தலைநகரம் தெஹ்ரானில் உள்ள சவுதி தூதரகத்தைத் தாக்கியுள்ளது. அதைத் தொடர்ந்து ஈரானுடனான ராஜதந்திர உறவை விலக்கிக்கொள்வதாக அறிவித்துள்ளது சவுதி. பிரச்னை இப்போது ஷியா-சன்னி மோதலாக திசை மாறியிருக்கிறது.

*    ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் தொடங்கி சில மனித உரிமை அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் பதிவாகியுள்ளன. மற்றபடி, சவுதியின் அதிரடி மரண தண்டனைகளை உலகம் பெருமளவில் அமைதியாகவே கடந்து சென்றுள்ளது. அதற்கு மூன்று காரணங்கள் உள்ளன.

1)  எப்படியும் கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகளே. பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட வேண்டியவர்களே.

2)     சவுதி அரேபியா ஒரு சுதந்தர நாடு. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது.

3)    அதிர்ச்சி மதிப்பீடுகள் மாறியுள்ளன. பெய்ரூத், பாரிஸ், சிரியா என்று நித்தம் நித்தம் மரண செய்திகள் கேட்டு, தாக்குதல்களும் படுகொலைகளும் மரணங்களும் பழகிவிட்டன.

இந்த மூன்று காரணங்களும் மேற்குலக நாடுகளுக்கு வேண்டுமானால் நியாயமானவையாகத் தோற்றமளிக்கலாம். நாமும் அவ்வாறே கருதவேண்டியதில்லை. ஏன்?

*   அரசாங்கம் நேர்மையாக நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கமுடியாது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிராக உலகம் தழுவிய அளவில் போர் நடைபெற்றுவருகிறது.

ஆனால் அந்த அமைப்புக்கு நிதியுதவி செய்துவரும் மூன்று நாடுகளில் ஒன்று சவுதி அரேபியா (மற்ற இரு நாடுகள் குவைத், கத்தார்). இருந்தும் அமெரிக்காவால் எப்படி சவுதியோடு நட்புறவு கொள்ளமுடிகிறது? பிரிட்டனும் மேற்கத்திய நாடுகளும் ஏன் சவுதியோடு இணைந்தே இருக்கிறார்கள்? சவுதியின் துணையோடுதான் பயங்கரவாதத்தை வீழ்த்தமுடியும் என்று இந்நாடுகள் மெய்யாகவே நம்புகின்றனவா?

*   அல் காய்தா, தாலிபன் தொடங்கி இன்றைய அச்சுறுத்தலான ஐஎஸ்ஐஎஸ் வரையிலான பயங்கரவாத அமைப்புகளின் அடிப்படை கொள்கை வாஹாபிசம். பிற்போக்குத்தனம், வன்முறை வழிபடு, மதவாதம், அடிப்படைவாதம், பெண் அடிமைத்தனம், மனிதத்தன்மைக்கு எதிரான சிந்தனைப் போக்குகள் என்று முழுக்க முழுக்க அறநெறிகளுக்கு எதிரான கொள்கைகளை உற்பத்தி செய்து வருகிறது வாஹாபிசம்.

இந்த மனித விரோத தத்துவத்தைச் செழிப்பாக்கிப் பரப்பும் ஓரிடம் சவுதி அரேபியா. பயங்கரவாதத்தின் வேர் இங்கேதான் இருக்கிறது என்னும்போது அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் எப்படி சவுதியோடு கரம்  கோர்க்கின்றன? கிட்டத்தட்ட 1970கள் தொடங்கி எப்படி அந்நாட்டுடன் அனுசரித்துப் போகின்றன?

*   ஆப்கனிஸ்தான், ஈராக், ஈரான், சிரியா என்று அனைத்து இஸ்லாமிய நாடுகளின் மனித உரிமை மீறல்களையும் சுட்டிக்காட்டி கடுமையாக விமரிசிக்கும் மேற்குலகம்,  ஏன் சவுதியின் குற்றங்களை மட்டும் அனுமதிக்கிறது?

*   பயங்கரவாதத்துச் செயல்களுக்கு மட்டுமல்ல; கொலை, பாலியல் பலாத்காரம், மத நம்பிக்கையை இழிவுபடுத்துதல், ஆயுதம் தாங்கிய கொள்ளை, தொடர் போதை மருந்து உபயோகம் என்று தொடங்கி மாந்தரீகம் வரை பல குற்றங்களுக்கு சவுதி அரேபியா மரண தண்டனையே விதிக்கிறது.

பொது இடங்களில் கழுத்தை அறுத்துக்கொல்லுதல், கல்லெறிந்து கொல்லுதல், துப்பாக்கிச் சூடு ஆகியவை மரண தண்டனையின் சில வடிவங்கள்.

முழுக்க முழுக்க ஷரியத் சட்டங்களின் அடிப்படையில் இத்தகைய கொலைகள் நடைபெறுகின்றன. ஆனால் தாலிபனை விமரிசிக்கும் மேற்குலக நாடுகளால் சவுதியை அதே சூட்டோடு விமரிசிக்கமுடிவதில்லை.

*   அடிப்படை நெறிகளோ அறவுணர்வோ இன்றி செயல்படும் ஒரு நாட்டை எப்படி இறையாண்மைமிக்க ஒரு நாடு என்று சொல்லி மதிக்கமுடியயும்? அந்த நாட்டின் முடிவுகளை எப்படி வரவேற்கமுடியும்?

*   பயங்கரவாதிகள் கொல்லப்படலாம் என்னும் கருத்தாக்கம் இன்றைய தேதியில் மிகவும் ஆபத்தானது. உதாரணத்துக்கு சவுதி கொன்ற 47 பேரும் பயங்கரவாதிகள் என்று எப்படி நம்புவது?

அவர்கள் அல் காய்தா ஆட்கள் அல்லது அவர்களுக்கு உதவியவர்கள் என்பதை எந்த அடிப்படையில் ஏற்பது? ஓர் அரசாங்கம் யாரையெல்லாம் பயங்கரவாதி என்று முத்திரை குத்தும் என்று நமக்குத் தெரியும்.

தேச நலனுக்கு எதிரான செயல்பாடு என்பதை ஓர் அரசு எப்படியெல்லாம் வரையறுக்கும் என்பதையும் நாம் பார்த்துவருகிறோம்.

எனவே, சவுதி அரேபியாவின் செயல்பாடு; அதனை ஆதரிக்கும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் செயல்பாடு இரண்டையும் விமர்சனங்களின்றி ஏற்பது ஆபத்து.

பயங்கரவாதம் என்பதற்கு அவர்கள் அளிக்கும் விளக்கங்களையும்,  பயங்கரவாதத்துக்கு எதிரான அவர்களுடைய அரைகுறை நடவடிக்கைகளையும் கண்மூடி அப்படியே ஆதரிப்பது அறமல்ல.

அதே வரிசையில், பயங்கரவாதிகளைத்தானே கொல்கிறார்கள் என்று நினைத்து அறமற்ற அரசாங்கங்கள் விதிக்கும் மரண தண்டனைகளை ஆதரிப்பது பெரும் பிழையாகவே சென்று முடியும்!

Share.
Leave A Reply

Exit mobile version