இளம் யுவதிகளையும், வறுமையை காரணம் காட்டி தொழில் தேடும் பெண்களையும் விபசாரத்தில் மனித மிருகங்கள் ஈடுபடுத்தும் பல சம்பவங்கள் தொடர்பில் வெளிப்படுத்தல்களை கேசரி கடந்த காலங்களில் மக்கள் மன்றின் முன் படம் பிடித்துக் காட்டியது.
உள் நாட்டு, வெளிநாட்டு யுவதிகளை விபசாரத்தில் ஈடுபடுத்தும் அத்தகைய நபர்களின் முகமூடிகள் கிழிக்கப்பட்ட நிலையில், அப்பாவி பெண்கள், யுவதிகளை பலாத்காரமாக அடைத்து வைத்து, அவர்களின் உடம்பில் போதைப் பொருளை செலுத்தி அவர்களை பணத்துக்காக ஆடவருக்கு விற்கும் வர்த்தகம் தொடர்பிலேயே நாம் இந்த வாரம் வெளிப்படுத்த உள்ளோம்.
கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரிம்ரோஸ் பூங்காவுக்கு அருகே உள்ள இருமாடிக் கட்டடம் ஒன்றில் விபசார நடவடிக்கைகள் இடம்பெறுவதாக இற்றைக்கு சில மாதங்களுக்கு முன்னர் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி அது குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பு பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனினால் அவரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழுள்ள வலான துஷ்பிரயோக தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.
வலான துஷ்பிரயோக தடுப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் மகேஷ் பெரேராவின் மேற்பார்வையில் அந்த பிரிவின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹேமால் பிரசாந்தவின் ஆலோசனையின் படி அப்பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஜனித்த குமாரவின் கீழான விசேட பொலிஸ் குழுவினரால் இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதன்படி நீண்ட நாள் தகவல் சேகரிப்பின் பின்னர் குறித்த விபசார விடுதி சம்பந்தமான சுற்றிவளைப்பினை மேற்கொள்ள பொலிஸார் தீர்மானித்தனர்.
ஊடகவியலாளர்கள் சிலரின் பங்களிப்புடன் இது தொடர்பான நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்தனர்.
அதன் பிரகாரம் கடந்த வாரம் குறித்த விபசார விடுதி சுற்றி வளைக்கப்பட்டு அதன் முகாமையாளருடன் விபசார தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட நான்கு பெண்களையும் வலான துஷ்பிரயோக தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் அதிர்ச்சிகரமான பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன.
மிக சூட்சுமமாக பல்வேறு தந்திரங்களை பயன்படுத்தி இந்த சட்டவிரோத விபசார நடவடிக்கைகள் குறித்த கட்டடத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்தமை அந்த விசாரணைகளில் உறுதியானது.
இரண்டு மாடிகளைக் கொண்ட அந்த முழு கட்டடத்தையும் ஏழு சீ.சீ.ரீ.வி. கண்காணிப்பு கமராக்களைக் கொண்டு பூரணமாக அவதானித்த வண்ணம் முதலாம் மாடியிலிருந்து இந்த சட்டவிரோத நடவடிக்கை திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
முதலாவது மாடிக்கும் இரண்டாவது மாடிக்கும் எப்போதும் பலத்த பாதுகாப்பு விபசார விடுதி முகாமையாளரினால் வழங்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
விபசாரிகளின் சேவைக்காக வரும் ஆடவர்கள் முதலாவது மாடியில் வைத்து பூரணமாக கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னரேயே விபசாரிகள் தங்கியிருந்த இரண்டாவது மாடியினுள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.
அதன் பின்னர் இரண்டாவது மாடியில் வாடிக்கையாளர்களுக்கு விபசாரிகள் காட்சிப்படுத்தப்பட்டு அவர்களின் விருப்புக்கேற்ப தெரிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
இவையனைத்தும் பலமான பாதுகாப்பு கட்டமைப்பொன்றுக்குள்ளேயே இடம்பெற்று வந்தது. இந்நிலையில் தான் அத்தனை பாதுகாப்பு உத்திகளையும் முறியடித்து தனது உளவாளி ஒருவரை விடுதியினுள் அனுப்பிய வலான துஷ்பிரயோக தடுப்பு பிரிவு அந்த விடுதியில் இடம்பெற்று வந்த கொடூரங்களை வெளிப்படுத்தியது.
வலான துஷ்பிரயோக தடுப்பு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹேமால் பிரசாந்தவின் நேரடி வழிநடத்தலில் முன்னெடுக்கப்பட்ட இந் நடவடிக்கையின் போது இது வரை விபசார விடுதி சுற்றி வளைப்பொன்றின் போது கிடைக்கப் பெறாத பல்வேறு தகவல்கள் வெளிப்பட்டன.
பொலிஸ் உளவாளி வழங்கிய தகவலின் பிரகாரம் பிரிம்ரோஸ் பூங்கா அருகே காத்திருந்த வலான துஷ்பிரயோக தடுப்பு பிரிவின் மேலதிக பொலிஸ் படையணி வெற்றிகரமாக சுற்றி வளைப்பை மேற்கொண்டது.
இதன் போது அங்கிருந்த யுவதியொருவர் குறித்த விபசார நிலையத்தில் இடம்பெற்று வந்த சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து பொலிஸாருக்கு இப்படி வாக்குமூலமளித்தார்.
” சேர்… முதலில் குஷான் என்ற ஒரு இளைஞரை நான் காதலித்து வந்தேன். சுமார் 1 வருடத்துக்கு முன்னர் விருந்துபசாரம் ஒன்றுக்கு செல்வதற்காக அவர் அழைத்தார். நான் சம்மதித்தேன்.
அதன் படியே முதல் முதலாக நான் இந்த கட்டடத்தொகுதிக்கு வந்தேன். அன்று அப்போது நேரம் முற்பகல் 11.30 இருக்கும் நாங்கள் நான்காம் இலக்க அறைக்கு முதலில் சென்றோம்.
எனினும் அங்கு விருந்துபசாரம் ஒன்று இருக்கவில்லை. எனக்கு அச்சம் ஏற்பட்டது. என்னை அங்கேயே இருத்திவிட்டு மேல் மாடியில் சென்று விசாரித்து வருவதாக கூறி குஷான் சென்றார். எனினும் அவர் திரும்பி வரவில்லை.
சுமார் ஒரு மணி நேரம் அந்த நான்காம் இலக்க அறையிலேயே நான் காத்திருந்தேன். பின்னர் வெளியே வந்து அங்கிருந்த ஒருவரிடம் குஷான் தொடர்பில் விசாரித்தேன்.
அப்போது தான் அவர் என்னை 60000 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளதை அறிந்தேன். என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. தப்பிச் செல்ல முயன்றும் பலனில்லை. ஒருவருடத்துக்கு மேலாக இவ்வாறு கொடூரங்களை அனுபவித்து வருகிறேன்.
சேர்… இங்குள்ள அனைவரும் இளம் யுவதிகள் 17 வயதுடைய யுவதிகள் மட்டும் 4 பேர் வரையிருந்தனர்.
ஒரு நாளைக்கு ஏழு முதல் எட்டு வரையிலான வாடிக்கையாளர்களுடன் இருப்பதற்கு நாம் கட்டாயப்படுத்தப்படுகிறோம். யுவதிகளுக்கு இது தொடர்பில் பணம் கூட வழங்கப்படுவதில்லை.
மாறாக அவர்களது உடலில் போதைப்பொருள் ஏற்றப்படுகிறது. இதனால் அவர்கள் அங்கிருந்து செல்வதில்லை. போதைக்கு அனைவரும் அடிமையாகியுள்ளதால் அவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்லவில்லை.” என தெரிவித்தார்.
இந்த தகவல்களால் அதிர்ச்சியடைந்த பொலிஸார் குறித்த விபசார விடுதியை சோதனைக்குட்படுத்தி சில தடயங்களை கைப்பற்றியதுடன் அங்கு இரகசியமாக எவ்வாறு விபசாரம் இடம்பெற்று வந்தது என்பது தொடர்பிலான அத்தனை தகவல்களையும் வெளிப்படுத்திக் கொண்டனர்.
குறித்த விபசார விடுதியில் விபசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்ட யுவதிகள் பல்வேறு புனைப்பெயர்களை கொண்டு அழைக்கப்பட்டு வந்துள்ளனர்.
இதற்கான ஆதாரங்கள் அங்கிருந்த ஆவணங்களிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இதன் போது மீட்கப்பட்ட நாட்குறிப்பு பதிவேடு ஒன்றிலிருந்து நாடளாவிய ரீதியில் 150க்கும் அதிகமான யுவதிகளின் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் தரகர்களின் தொடர்பிலக்கங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
விடுதி முகாமையாளரிடம் இது தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் அவர்களில் பலர் பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்த விபசார விடுதியில் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் என தெரியவந்தது.
அவர்களில் பலர் 18 வயதிலும் குறைவான யுவதிகள் என்பது இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டிய விடயமாகும். குறித்த யுவதிகள் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது எனவும் விபசார நடவடிக்கைகளில் ஈடுபடும் யுவதிகள் ஊடாகவே மேலதிக யுவதிகள் தருவிக்கப்படுவதாகவும் முகாமையாளர் பொலிஸ் விசாரணைகளில் தெரிவித்தார்.
எனினும் இவற்றுக்கப்பால் அதன் பின்னணியில் திட்டமிட்ட குழுவொன்று இயங்குவது குறித்து பொலிஸாரின் சந்தேகம் திரும்பியுள்ளது.
குறித்த விடுதியில் சட்டவிரேத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் யுவதிகள் அழைக்கப்படும் சில புனைப்பெயர்கள் குறித்த தகவல்களையும் எம்மால் பெற முடிந்தது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வலான துஷ்பிரயோக தடுப்பு பிரிவினரால் கண்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, கண்டி நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
உலகின் பழமையான தொழில்களில் ஒன்றாக கருதப்படும் விபசாரம் சில நாடுகளில் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும் இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் அது தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் விபசாரத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போதுமான சட்டங்கள் இருந்த போதிலும் மிக சூட்சுமமாக இலங்கையில் தற்போது விபசாரம் சட்ட விரோதமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
விபசாரத்தை மையப்படுத்திய சட்ட விரோத செயல்கள் காரணமாக சிறுவர் துஷ்பிரயோகங்கள், கலாசார சீர்கோடுகள், பெண்கள் மீதான வன்முறைகள், மனித கடத்தல்கள், போதைப் பொருள் பாவனை என குற்றச் செயல்கள் அதிகரிப்பதை அவதானிக்க முடிகிறது.
இதற்கு வலான துஷ்பிரயோக தடுப்பு பிரிவால் சுற்றிவளைக்கப்பட்ட இந்த பிரிம்ரோஸ் பூங்கா அருகேயான விபசார விடுதி நல்ல ஆதாரமாகும்.
இலங்கையின் சட்டத்துறையை பொறுத்தவரை விபசாரம் தொடர்பிலான அனைத்து நடவடிக்கைகளும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
இது தொடர்பிலான வழக்குகள் விபசார நிலைய கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு நீதிவான் நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்படும்.
விபசார வழக்குகள் தொடர்பிலான தெளிவான அளவு கோலினை உயர் நீதிமன்றம் தான் விசாரித்த மேன் முறையீட்டு மனு ஒன்றூடாக சட்ட அமுலாக்கல் அதிகாரிகளுக்கு சுட்டிக் காட்டியுள்ளது.
டொரத்தி சில்வா வழக்கு என பரவலாக அறியப்படும் அவ்வழக்கு தொடர்பிலான தகவல்களை பகிர்ந்து கொள்வது பயனுள்ளதாக அமையும்.
வெள்ளவத்தையிலுள்ள கட்டடத் தொகுதி ஒன்றில் உள்ள ஒரு அறையில் பெண்களின் புகைப்படங்களை காட்டி விற்பனை செய்யும் நடவடிக்கை ஒன்று தொடர்பில் சில வருடங்களுக்கு முன்னர் கோட்டை பொலிஸ் நிலையத்தின் துஷ்பிரயோக தடுப்பு பிரிவு டொரத்தி சில்வா என்ற நபரை கைது செய்து மன்றில் ஆஜர்படுத்தியது.
குறித்த நபர் மேற்படி கட்டடத் தொகுதியின் அறையில் பெண்களில் புகைப் படங்களை காட்டி வாடிக்கையாளர்களுக்கு தெரிவுக்காண சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தி கொடுப்பதுடன் பின்னர் வாடிக்கையாளர் நாடும் இடத்துக்கு அப் பெண்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தவராவார்.
இந்நிலையிலேயே அவர் மீது விபசார விடுதி கட்டளைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. எனினும் பாலியல் ரீதியிலான செயற்பாடுகள் தன்னால் முன்னெடுக்கப்பட வில்லை என குறிப்பிட்டும் பெண்களின் புகைப்படங்களை வைத்திருந்தமைக்காக விபசார விடுதிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என குறிப்பிட்டும் குறித்த நபர் மேன்முறையீடு செய்தார்.
இதன் தீர்ப்பே விபசார விடுதிகள் கட்டளைச் சட்டத்தின் உள்ளடக்கத்தை தெளிவாக அறிவித்தது.
அதன் படி உயர் நீதிமன்றின் தீர்ப்பின் பிரகாரம் பாலியல் ரீதியிலான செயற்பாடுகள் இடம்பெற்றாலும் இடம்பெறாவிட்டாலும் விபசார நடவடிக்கை ஒன்று தொடர்பிலான எந்தவொரு செயற்பாட்டுக்கும் எதிராக விபசார விடுதிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை உயர் நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.
அதன் படி விபசார நடவடிக்கைகள் அனைத்தும் விபசார விடுதிகளாகவே அர்த்தப்படுத்தப்படுகிறது. இது தொடர்பில் உதவி ஒத்தாசைகளை செய்பவர்கள் அந் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் என அனைவரையும் கைது செய்ய விபசார விடுதிகள் கட்டளைச் சட்டம் அதிகாரத்தை கொண்டுள்ளது.
அதேபோன்று விபசார கட்டளைச் சட்டத்துக்கு மேலதிகமாக விபசார நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பிறிதொரு சட்டமும் பயன்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ருவான் குணசேகர சுட்டிக் காட்டுகிறார்.
குறிப்பாக விபசார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் வீதிகளில் பகிரங்கமாக தமது வாடிக்கையாளர்களை இந்த சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதனை தடுக்கும் விதமாக நாடோடிகள் கட்டளைச் சட்டமூடாக (vagrants ordinance) நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
பிரசித்தமான இடத்தில் அல்லது பொது இடத்தில் அநாகரீகமான விதத்தில் நடந்து கொள்வதாக கொள்ளப்பட்டே இன் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
விபசார விடுதிகள் கட்டளைச் சட்டம், நாடோடிகள் கட்டளைச் சட்டம் (vagrants ordinance)ஆகிய சட்டங்கள் ஊடாக விபசாரத்தை கட்டுப்படுத்த போதுமான பிரிவுகள் இருப்பினும் கூட அது தொடர்பிலான தண்டனைகள் மிக இலகுவானதாக இருப்பதால் விபசார நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் சிக்கல் உள்ளதாக சட்ட ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகரவின் கருத்துக்களில் பிரகாரம் விபசார நடவடிக்கைகள் இடம்பெறும் இடமொன்று அல்லது நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் பொழுது மேற்குறித்த இரு கட்டளைச் சட்டத்திற்கு மேலதிகமாக பின்வரும் விடயங்களும் கருத்தில் கொள்ளப்படுகின்றன.
குறித்த சம்பவத்தின் போது சிறுமிகள் விபசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தால் சிறுவர் துஷ்பிர யோக குற்றச்சாட்டின் கீழும் வயது வந்தோர் பலாத்காரமாக விபசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப் பட்டிருந்தால் பெண்கள் துஷ்பிர யோக சட்டத்தின் கீழும் விபசாரத்தில் ஈடுபடுத்தவென யுவதிகளை கடத்திச் சென்று
தடுத்து வைத்து குறித்த சட்ட விரோத நடவடிக்கையை மேற்கொண்டு வந்தால் தண்டனை சட்டக் கோவையின் கீழ்வரும் பாரிய குற்றச் செயலான மனித கடத்தல் கள் தொடர்பிலும் நடவடிக்கைகள் பொலிஸாரினால் எடுக்கப்படுகின்றன.
எது எப்படி இருப்பினும் சட்டத்திற்கு அப்பால்பட்டு சட்ட அமுலாக்கல் அதிகா ரிகள் பலரின் உதவியுடனும் அரசியல் தலைமைகள் பலரின் ஒத்துழைப்புடனும் விபசாரம் இலங்கையில் மிக ஜெயமாக நடைபெற்று வருகிறது என்ற கசப்பான உண்மையை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.
இது தொடர்பில் பல வெளிப் படுத்தல்களும் கடந்த காலங்களில் வெளிகொண்டு வந்து சமூக ஆர்வலர்களி னதும் அமைப்புக்களினதும் பொதுவான கவனத்திற்கு கொண்டு வந்த போதிலும் சரியான மாற்று நடவடிக்கைகளை இது வரை காணமுடியவில்லை.
எம்.எப்.எம்.பஸீர்