புதிய அரசியலமைப்பின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முற்றாக நீக்கப்படுவதுடன் தேர்தல் முறைமையும் மாற்றப்படும் எனவும் புதிய அரசியலமைப்பின் மூலம் தமிழ் பேசும் மக்களின் நீண்டகால இனப்பிரச்சினைக்கும் தீர்வுகாணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நோக்கில் பாராளுமன்றத்தை அரசியல மைப்பு பேரவையாக மாற்றியமைப்பதற்கான பிரேரணையும் சபையில் பிரதமரினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ள விதம் குறித்தும் தற்போது ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் சர்ச்சைகள் எழுப்பப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுவருகின்றன.
இந்நிலையில் புதிய அரசியலமைப்பு எவ்வாறு அமையப்போகின்றது?அதில் எவ்வாறு தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு கிட்டப்போகின்றது என்பது குறித்து தற்போது பரவலாக பேசப்பட்டுவருகின்றது.
விசேடமாக மிக நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்த அரசியல் தீர்வுப் பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படும் என்பது அனைவரதும் எதிர்பார்ப்பாக காணப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் தமிழ் பேசும் மக்களின் தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கான ஆர்வத்தை வெளிக்காட்டியுள்ளது.
பல்வேறு நிகழ்வுகளிலும் உரையாற்றுகின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அடிக்கடி இந்த தேசிய பிரச்சினையை தீர்ப்பது குறித்த தமது ஆர்வத்தை வெளியிட்டு வருகின்றனர்.
எனினும் எவ்வாறு தீர்வு முன்வைக்கப்படும் என் பதே பலரதும் கேள்வியாகவுள்ளது. ஏற்கனவே அரசியலமைப்பில் காணப்படுகின்ற 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படுமா? அல்லது அதனை நீக்கிவிட்டு புதிய அதிகாரப் பகிர்வு முறைமை அறிமுகப்படுத்தப்படுமா? இந்த வகை யில் எவ்வாறு தீர்வு முன்வைக்கப்படும் என்பதில் பாரிய கேள்விகள் எழுந்துள்ளன.
தமிழ் பேசும் மக்களை பொறுத்தவரை கடந்த 70 வருடங்களுக்கும் அதிகமாக தமது அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையிலான தீர்வுத்திட்டம் ஒன்று முன்வைக்கப்படவேண்டும் என வலியுறுத்திவருகின்றனர்.
ஒரு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் பல்வேறு வடிவங்களை பெற்றபோதிலும் அனைத்து முயற்சிகளும் இறுதியில் தோல்வியில் முடிவடைந்தன.
இந்நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததும் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அருமையான சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தது.
நல்லெண்ண செயற்பாடுகளை முன்னெடுத்து இந்தப் பிரச்சினைக்கு வரலாற்று முக்கியத்துவமிக்க தீர்வை அடைந்திருக்கலாம். ஆனால் கடந்த ஆட்சிக்காலத்தில் அதற்கான முயற்சிகள் இதய சுத்தியுடன் முன்னெடுக்கப்படவில்லை.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
அத்துடன் இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்று முன்வைக்கப்படும் என்ற நம்பிக்கைதரும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதனடிப்படையிலேயே புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஆனால் இங்கு தான் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதாவது தற்போதைய நிலைமையில் ஒற்றையாட்சி முறைமையிலா அல்லது ஐக்கிய இலங்கை என்ற முறைமையிலா இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணப்படும் என்ற வாதப்பிரதிவாதங்கள் இடம் பெற்றுவருகின்ற நிலையில் அரசாங்கம் எவ்வாறு இந்த விடயத்தை கையாளப்போகின்றது என்பது இங்கு முக்கியமானதாகும்.
கருத்தொருமைவாத தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஒற்றையாட்சி மாறாது என்றும் அதற்குள்ளேயே தீர்வுகாணப்படும் என்றும் கூறிவருகின்றது.
ஆனால் ஒற்றையாட்சிக்குள் தீர்வை ஏற்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிவருகின்றது. இந்நிலையில் என்ன நடக்கப்போகின்றது என்பதே கேள்வியாகவுள்ளது.
இதனையே நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். ஒற்றை ஆட்சிக் கோட்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. தற்போது ஏற்பட்டுள்ள பொன்னான சந்தர்ப்பத்தை நழுவவிட்டுவிடக்கூடாது.
முஸ்லிம்களையும் அரவணைத்துக்கொண்டு சிங்கள மக்களை பகைத்துக்கொள்ளாது நீடித்த நிலையான தீர்வொன்றை பெற்றுக்கொள்ளவேண்டும்.
எமது மக்கள் ஏற்காத எதனையும் நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லையென்பது உறுதியானது.
நான் ஒற்றையாட்சிக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறுகின்றார்கள். கருத்துக்களை முன்வைக்கின்றார்கள். அவை நிராகரிக்கப்படவேண்டியவை.
நான் ஒற்றையாட்சிக் கோட்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை. எமது மக்கள் தமது பூர்வீக மண்ணில் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டும்.
வடக்கு கிழக்கு மீண்டும் இணைக்கப்படவேண்டும். மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும்.
ஐக்கிய இலங்கைக்குள் பகிரப்பட்ட இறையாண்மையின் அடிப்படையில் அதியுச்ச சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்று வழங்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.
அதேநேரம் சிங்கள மக்களையும் பகைக்கக்கூடாது. அவர்கள் அச்சமடையும் வகையிலான காரசாரமான கருத்துக்களை முன்வைக்கக் கூடாது என்று மிகவும் திட்டவட்டமான முறையில் கூறியிருக்கின்றார்.
அதாவது இரா. சம்பந்தன் இதன்மூலம் தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகள் என்னவென்பது குறித்தும் அவர்களின் எதிர்பார்ப்புக்கள் எவ்வாறானது என்பது தொடர்பாகவும் மிகவும் தெளிவான முறையில் கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்.
ஒற்றையாட்சிக்கு முரணான அரசியலமைப்பை உருவாக்க மாட்டோம். மக்களை குழப்பும் வகையில் வீணான எதிர்ப்புகளை உடனடியாக கைவிடுமாறுகோருகின்றேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் புதிய அரசியலமைப்பினை தயாரிக்கும் போது நாட்டை பிளவுபடுத்த முனையப் போவதில்லை. ஒற்றையாட்சிக்கு உட்பட்டே அரசியலமைப்பினை தயாரிப்போம்.
நான் ஒரு இலங்கையர். இந்த நாட்டில் வாழும் அனைத்து இனத்தவர்களையும் ஒன்றிணைத்து தேசத்தை ஐக்கியப்படுத்துவற்கு எனக்கு அனைவரும் இடமளிக்க வேண்டும். நான் நாட்டை பிளவுபடுத்துவதற்கு ஒருபோதும் விடமாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில் நாட்டின் பிரதமரினதும் எதிர்க்கட்சித் தலைவரினதும் கருத்துக்கள் மூலம் இந்த விடயத்தில் எவ்வாறான முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன என்பதனை எம்மால் உணர முடிகின்றது.
அது மட்டுமல்ல இந்த விவகாரத்தை முன்கொண்டு செல்வதிலும் புதிய அரசியலமைப்பில் அரசியல் தீர்வு என்ற விடயத்தை முன்வைப்பதிலும் ஏற்படப்போகின்ற சிக்கல்கள் எவ்வாறானவை என்பதையும் உணர முடிகின்றது.
குறிப்பாக ஒற்றையாட்சி முறைமையின் ஊடாக தீர்வு பெற முடியாது என்பதற்கான கூட்டமைப்பின் நியாயப்படுத்தல்கள் தொடர்பில் முதலில் தென்னிலங்கை புரிந்துகொள்ளவேண்டியது அவசியமாகும்.
காரணம் கடந்த 70 வருடங்களுக்கும் மேலாக தமிழ் மக்கள் ஒரு தீர்வை வேண்டி வருகின்றனர். அது மட்டுமல்ல கடந்த காலங்களில் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு சமஷ்டி முறைமை மற்றும் இடைக்கால நிர்வாக சபை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கடந்த காலங்களில் பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது அவை எல்லாவற்றையும் விடுத்து ஒற்றையாட்சிக்கு செல்வதாயின் அதில் சிக்கல்கள் உள்ளன என்பதனை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
அதுமட்டுமல்ல ஒற்றையாட்சி முறைமையின் கீழ் தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வை அடைய முடியுமா என்பது இந்த இடத்தில் எழுப்பப்பட வேண்டிய மிகப் பிரதானமான விடயமாகும்.
காரணம் தமிழ் பேசும் மக்கள் சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் பொருளாதார அபிவிருத்தி தொடர்பாகவோ வெறுமனே அபிவிருத்திக் குறித்தோ பாரியளவில் குரல் எழுப்பவில்லை. மாறாக தமக்கான அரசியல் அதிகாரங்களைப் பெற்றுத் தருமாறு கோரியே குரல் கொடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஐக்கிய இலங்கை என்ற கோட்பாட்டுக்குள் அதி உச்ச அதிகாரப் பகிர்வை வழங்கி இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண முடியமென தமிழ் பேசும் மக்கள் நம்புகின்றனர்.
காரணம் ஒற்றையாட்சி முறைமையின் கீழ் அதிகார பகிர்வு என்பது முற்றுமுழுதாக சாத்தியமானதா என்பது கேள்விக்குரிய விடயமாகும்.
அதனால் தான் ஐக்கிய இலங்கைக்குள் அதாவது பிரிபடாத இலங்கைக்குள் அதி உச்ச அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்தும் தீர்வை தமிழ் பேசும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
குறிப்பாக உலகின் பல்வேறு நாடுகளில் இவ்வாறு ஐக்கிய என்ற பதத்திற்குட்பட்டு அதிகாரப் பகிர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அங்கு மிகவும் வெற்றிகரமான முறையில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுவதனால் ஐக்கிய இலங்கை என்ற கோட்பாட்டுக்குள் தீர்வைக் காண்பதை தமிழ் மக்கள் சாத்தியமானதாக காண்கின்றனர்.
இதேவேளை தென்னிலங்கை அரசியல் சூழலுக்குள் அரசாங்கம் அரசியல் தீர்வு தொடர்பில் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் யாரும் மறந்துவிடக்கூடாது.
விசேடமாக அரசாங்கமானது அரசியல் தீர்வு விடயத்தில் ஐக்கிய இலங்கை அல்லது சமஷ்டி என்ற அடிப்படையில் தீர்வுத் திட்டத்திற்கு செல்வதற்கு தயாராகும் பட்சத்தில் அதனை கடுமையாக எதிர்த்து நாட்டில் அரசியல் குழப்பங்கள் ஏற்படுத்துவதற்கு கடும் போக்குவாதிகள் முயற்சிப்பார்கள் என்ற ஒரு அச்சம் அரசாங்கத்திடம் காணப்படலாம்.
ஒருவகையில் பார்க்கும்போது அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் அது நியாயமான ஒரு விடயமாகவே காணப்படுகிறது.
காரணம் பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பை சம்பாதித்துவிட்டால் தமிழ் மக்களுக்கு குறைந்த பட்ச அதிகாரங்களை வழங்கும் தீர்வுகூட சவாலாக அமைந்துவிடும்.
கடந்த 2002 ஆம் ஆண்டு மற்றும் 2004 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் முன்னெடுக்கப்பட்ட சமாதான பேச்சுக்களுக்கும் இந்த துரதிர்ஷ்டவசமான நிலைமையே ஏற்பட்டது.
2003 ஆம் ஆண்டு ஒஸ்லோவில் நடைபெற்ற பேச்சுக்களில் சமஷ்டி தீர்வு தொடர்பான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டபோதும் கூட அதனை தென்னிலங்கை கடுமையாக எதிர்த்ததுடன் இனவாதிகள் இந்த விடயத்தை சிறப்பாக கையாண்டு அப்போதைய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பினர். (தமிழர் தரப்பிலும் அதற்கு எதிர்ப்பு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது)
எனவே இவ்வாறு தென்னிலங்கை மக்கள் மத்தியில் எதிர்ப்புக்கள் ஏற்படாதவாறு மிகவும் அவதானத்துடன் அணுகவேண்டிய விடயமாக இந்த அரசியல் தீர்வு விவகாரம் காணப்படுகின்றது.
சற்று பிழைத்தாலும் முழு முறைமையும் செயலிழக்கும் அபாயம் இந்த விடயத்தில் காணப்படுகின்றது. இதனை அனைத்து தரப்பினரும் மனதில்கொள்ள வேண்டும்.
எனவே தென்னிலங்கை பெரும்பான்மை மக் கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படும் வகையிலும் சந்தேகங்கள் ஏற்படாத ரீதியிலும் அதேநேரம் தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப் படும் வகையிலும் தீர்வுத்திட்டம் ஒன்றுக்கு செல்லவேண்டியது அவசியமாகும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்கள். தமிழ் மக்களின் பிரச்சினைகள் எத்தகையன என்றும் இந்த விடயத்தில் பெரும்பான்மை மக்களின் உணர்வு எவ்வாறானது என்பது இவர்கள் இருவருக்கும் நன்றாகவே தெரியும்.
எனவே எந்தப் பக்கத்திலும் சிக்கல்கள் ஏற்படாதவாறு தீர்வுத்திட்டம் ஒன்றுக்கு இந்த இரண்டு தலைவர்களும் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதற்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கவேண்டும். மிகவும் விசேடமாக யாரும் இதனை குழப்பிவிடக்கூடாது என்பதே இங்கு மிக முக்கியமானதாகும்.
–ரொபட் அன்டனி